1 மக்கபேயர் (நூல்)![]()
1 மக்கபேயர் (1 Maccabees) என்னும் நூல் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல்கள் கத்தோலிக்க திருச்சபையாலும் மரபுவழித் திருச்சபையாலும் பிற விவிலிய நூல்களைப் போன்று இறைஏவுதலால் எழுதப்பட்டவையாக ஏற்கப்பட்டுள்ளன. பெயர்1 மக்கபேயர் என்னும் இந்நூல் கிரேக்க மூல மொழியில் A' Μακκαβαίων (1 Makkabáion) என்றும், இலத்தீனில் "1 Machabaeorum" என்றும் உள்ளது. "மக்கபே" என்னும் எபிரேய மொழிப் பெயரிலிருந்து "மக்கபேயர்" என்னும் சொல் பிறந்தது. மக்கபேயர் என்பது எபிரேயத்தில் Makabim, Maqabim என வரும் (מכבים அல்லது מקבים). இது அரமேய மொழியில் maqqaba என்னும் சொல்லிலிருந்து பிறந்தது எனவும், அதன் பொருள் "சுத்தியல்/சம்மட்டி" என்பதாகும் எனவும் அறிஞர் கூறுவர். இந்நூலும் இதை அடுத்து வருகின்ற 2 மக்கபேயர் எனும் நூலும் இணைத் திருமுறை விவிலிய நூல்கள் ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல்கள் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஏற்கப்பட்டன. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) இவை விவிலியத் திருமுறை நூல்களாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டன [1]. உள்ளடக்கமும் செய்தியும்மத்தத்தியாவின் மூன்றாம் மகன் யூதா. இவர் கிரேக்க கலாச்சாரத்தை யூத மக்கள்மீது திணித்து, அவர்களைப் பலவாறு துன்புறுத்திவந்த செலூக்கிய ஆட்சியை எதிர்த்து யூத மக்களை வழிநடத்தியதால், "மக்கபே" என்று அழைக்கப்பெற்றார். "மக்கபே" என்னும் சொல்லுக்குச் "சம்மட்டி" எனச் சிலர் பொருள் கொள்வர். காலப்போக்கில் யூதா மக்கபேயின் சகோதரர்கள், ஆதரவாளர்கள், பிற யூதத் தலைவர்கள் ஆகிய அனைவருமே "மக்கபேயர்" என்று குறிப்பிடப்பெற்றனர். அந்தியோக்கு எப்பிபானின் ஆட்சி தொடங்கி யோவான் இர்க்கான் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதுவரை (கி.மு. 175-134) யூத வரலாற்றில் இடம் பெற்ற குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகளை இந்நூல் விளக்குகிறது. ஏறத்தாழ கி.மு. 100இல் பாலசுத்தீனதைச் சேர்ந்த யூதர் ஒருவரால் இந்நூல் எபிரேயத்தில் எழுதப்பெற்றிருக்க வேண்டும். அது தொலைந்துவிட, செப்துவசிந்தா (Septuaginta)[2] என்று அழைக்கப்படும் அதன் கிரேக்க மொழிபெயர்ப்பே இன்று நமக்கு மூலபாடமாக இருந்து வருகிறது. இசுரயேலரைக் காப்பதற்காகக் கடவுள் மக்கபேயரைத் தேர்ந்தெடுத்து, வரலாற்றில் அவர்களோடு இருந்து செயல்படுகிறார், அவர்மீது பற்றுறுதி கொள்வோருக்கு வெற்றி அருள்கிறார் என்னும் செய்தியை இந்நூல் வலியுறுத்துகிறது. நூலிலிருந்து சில பகுதிகள்1 மக்கபேயர் 1:20-24
1 மக்கபேயர் 2:49-51,61
உட்பிரிவுகள்
ஆதாரங்கள் |
Portal di Ensiklopedia Dunia