ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி
யூஈஎஃப்ஏ ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி (UEFA European Football Championship) ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் கட்டுப்பாட்டில் ஐரோப்பிய தேசிய ஆண்கள் அணிகளுக்கிடையே நடத்தப்படும் சங்க கால்பந்தாட்ட போட்டி ஆகும். 1960ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. காற்பந்து உலகக்கோப்பையின் நான்காண்டு இடைவெளியின் நடுவில் அமையுமாறு ஒருங்கிணைக்கப்படுகிறது. துவக்கத்தில் இந்தப் போட்டி யூஈஎஃப்ஏ ஐரோப்பிய நாடுகள் கோப்பை என அழைக்கப்பட்டு வந்தது. 1968ஆம் ஆண்டு முதல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது. 1996ஆம் ஆண்டு போட்டிகளிலிருந்து குறிப்பிட்ட ஆண்டுப் போட்டிகள் "யூரோ 2012" என்ற வடிவில் பொருத்தமான ஆண்டுடன் அழைக்கப்படலாயின. போட்டிகளுக்கு முன்னதாக அனைத்து அணிகளும் (ஏற்று நடத்தும் நாட்டின் அணி நீங்கலாக) தகுதிச் சுற்றில் பங்கேற்கின்றன. இந்தப் போட்டியில் வென்றவர்கள் பிபா நடத்தும் அடுத்த பிபா கூட்டமைப்பு கோப்பைப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுகிறது; இருப்பினும் பங்கேற்பது கட்டாயமல்ல.[1] இதுவரை நடந்துள்ள 13 ஐரோப்பிய கால்பதாட்டப் போட்டிகளில் ஒன்பது வெவ்வேறான நாடுகள் வென்றுள்ளன. செருமனி நாட்டின் தேசிய அணி ஆறு இறுதியாட்டங்களில் பங்கேற்று மூன்று முறை வென்றுள்ளது. பிரான்சு மற்றும் இசுப்பானிய நாட்டு அணிகள் தலா இரண்டு முறை வென்றுள்ளன. ஒரு முறை மட்டுமே வென்ற மற்ற நாடுகள்: இத்தாலி, செக்கோசுலோவேக்கியா, நெதர்லாந்து, டென்மார்க், கிரீசு மற்றும் சோவியத் ஒன்றியம்[2] கடைசியாக நடந்த யூரோ 2008ஐ சுவிட்சர்லாந்தும் ஆத்திரியாவும் இணைந்து 2008இல் நடத்தின. இதில் இசுப்பானிய அணி செருமானிய அணியை 1-0 என்ற கணக்கில் வென்றது. அடுத்த ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியை போலந்தும் உக்ரைனும் இணைந்து 2012ஆம் ஆண்டு சூன் 8, முதல் சூலை 1 வரை நடத்த உள்ளன.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia