கொழும்பு ஒல்லாந்தர் அருங்காட்சியகம்
கொழும்பு ஒல்லாந்தர் அருங்காட்சியகம் அல்லது கொழும்பு ஒல்லாந்தர் நூதனசாலை, இலங்கையில் ஒல்லாந்தரின் குடியேற்றவாத ஆட்சிக்கால வரலாற்றோடு தொடர்புடைய காட்சிப் பொருட்களைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம். கொழும்பின் புறக்கோட்டையில் உள்ள பிரின்ஸ் வீதியில் அமைந்த, தூண் வரிசைகளோடு கூடிய இரண்டுமாடிக் கட்டிடம் ஒன்றில் இந்த அருங்காட்சியகம் செயற்படுகிறது. வரலாறுகுடியேற்றவாதக் காலம்இக்கட்டிடம் இலங்கையை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் கட்டப்பட்டது. 1692–1697 காலப்பகுதியில் ஒல்லாந்த இலங்கையின் ஆளுனராக இருந்த தாமசு வான் ரீ (Thomas van Rhee) என்பவரின் வசிப்பிடமாக இது இருந்தது. கடந்த காலத்தில் இக்கட்டிடம் பல்வேறு தேவைகளுக்குப் பயன்பட்டுள்ளது. 1696க்கும் 1796க்கும் இடைப்பட்ட காலத்தில் இது ஒரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியாகவும், மதகுருமாருக்கான கல்வி நிறுவனமாகவும் பயன்பட்டது. ஒரு காலத்தில் இதைக் கர்னல் கவுன்ட் ஆகஸ்ட் கார்ல் பிரெட்ரிக் வொன் ரான்சோ என்பவரின் இருப்பிடமாகவும் பயன்படுத்தினர்.[1] டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியால் நிதியளிக்கப்பட்ட ஒரு அனாதை இல்லமும் இக்கட்டிடத்தில் இயங்கியிருக்கிறது. இது ஒரு மருத்துவ நிலையமாகவும் தொழிற்பட்டது. 1800களின் பிற்பகுதியில் இதை ஒரு படைவீடாகவும், 1900ல் ஒரு காவல் துறைப் பயிற்சிப் பள்ளியாகவும் பிரித்தானியர் பயன்படுத்தினர்.[1] 1932ம் ஆண்டில் இது புறக்கோட்டை தபால் நிலையமாக மாற்றப்பட்டது. விடுதலைக்குப் பிந்திய காலம்1971ல் ஏற்பட்ட கடும் மழை காரணமாக இதன் வெளிச் சுவர்களில் ஒன்று உடைந்து விழுந்ததால் கட்டிடம் கைவிடப்பட்டது. இக்கட்டிடத்தை முற்றாக இடிப்பதற்கான திட்டத்தை அரச ஆசியக் கழகமும், ஒல்லாந்தப் பறங்கியர் ஒன்றியமும் கடுமையாக எதிர்த்தன. இதைத் தொடர்ந்து 1973ல் இதைத் திருத்தி ஒரு ஒல்லாந்தர்கால வரலாற்று அருங்காட்சியகமாக மாற்றுவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், இலங்கை சுற்றுலாச் சபை, தொல்லியல் திணைக்களம், இலங்கையில் உள்ள நெதர்லாந்து பழைய மாணவர் சங்கம், தேசிய சுவடித் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உறுப்பினராக இருந்தனர். நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் 1977ல் தொடங்கிய திருத்த வேலைகள் 1981ல் நிறைவேறின. 1982ல் அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டது. இக்கட்டிடம் ஒல்லாந்தர் குடியேற்றவாதக் காலத்து நகர்ப்புற வீடுகளின் கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்டதாக விளங்குகிறது. இங்குள்ள அருங்காட்சியகம், ஒல்லாந்தர் காலத் தளவாடங்கள், மட்பாண்டங்கள், நாணயங்கள், ஆயுதங்கள் காட்சிப்படுத்துவதோடு அக்காலத்தின் வாழ்க்கைமுறை பண்பாடு என்பவற்றையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia