டிம் பேர்னேர்ஸ்-லீ
சர் திமொத்தி ஜான் டிம் பேர்னேர்ஸ்-லீ (Sir Timothy John Berners-Lee - பிறப்பு 8 ஜூன் 1955)[2] உலகளாவிய வலையைக் கண்டுபிடித்த இங்கிலாந்தைச் சேர்ந்த கணினிப் பொறியாளர் ஆவார். 1990 ஆம் ஆண்டு திசம்பரில் ராபர்ட் கைலியூ (Robert Cailliau)உடனும் மற்றுமொரு மாணவருடனும் இணைந்து மீயுரை பரிமாற்ற நெறிமுறை வழங்கிக்கும், பயனர் கணினிக்கும் இடையே வெற்றிகரமான தொடர்பைச் செயற்படுத்தினார். "டெலிகிராப்" பத்திரிகை தெரிவுசெய்த வாழும் 100 அறிவாளிகளின் பட்டியலில் பேர்னேர்ஸ்-லீ, ஆல்பர்ட் ஹாப்மனுடன் சேர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இவர் இணையவலையின் மேம்பாட்டைக் கண்காணிக்கும் வேர்ல்ட் வைட் வெப் கொன்சோர்ட்டியத்தின் (W3C) இயக்குநரும், உலகளாவிய வலை நிறுவனத்தை நிறுவியவரும் ஆவார். இவர் எம்.ஐ.டி கணினி அறிவியல் மற்றும் செயற்கை அறிவுத்திறன் ஆய்வகத்தில் மூத்த ஆய்வாளராகவும் உள்ளார்.[3] மேலும் வலை அறிவியல் ஆய்வு முனைப்பு (WSRI) அமைப்பின் இயக்குநராகவும்[4] மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் கூட்டு அறிவுத்திறன் வாரியத்தின் பரிவுரைக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.[5][6] 2004ஆம் ஆண்டில் இவரது முன்னோடியான பணிகளுக்காக ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் பிரித்தானிய அரசின் சீர்வரிசையில் இணைத்து சர் பட்டத்தை வழங்கினார்.[7][8] ஏப்ரல் 2009இல் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாதமியின் வெளிநாட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9][10] 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் திறப்புவிழாவின்போது "உலகளாவிய வலையின் கண்டுபிடிப்பாளர்" என்று கவுரவிக்கப்பட்டார்;அவ்விழாவில் லீ நேரடியாக இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டரங்கத்தில் பங்கேற்றார்.[11] அப்போது துவிட்டரில் "இது அனைவருக்குமானது",[12] என்று அவர் வெளியிட்டது உடனடியாக திரவப் படிகக் காட்சியில் அரங்கத்திலிருந்து 80,000 மக்களும் காணுமாறு செய்யப்பட்டது.[11] இளமை வாழ்க்கைபேர்னேர்ஸ்-லீ தென்மேற்கு இலண்டனில் சூன் 8, 1955இல் கோன்வே பேர்னேர்ஸ்-லீக்கும் மேரி லீ வுட்சுக்கும் மகனாகப் பிறந்தார். லீயின் பெற்றோர் பெர்ரான்டி மார்க் I என்ற வணிகத்திற்காக உருவாகப்பட்ட முதல் கணினியில் பணி புரிந்து வந்தனர். ஷீன் மவுண்ட் துவக்கப்பள்ளியை அடுத்து எம்மானுவல் பள்ளியில் 1969 முதல் 1973 வரை லீ கல்வி கற்றார்.[7] தனக்குப் பரிசளிக்கப்பட்ட மாதிரி தொடர்வண்டியைப் பிரித்து இலத்திரனியல் அறிந்து கொண்டார்.[13] ஆக்சுபோர்டின் குயின்சு கல்லூரியில் 1973 முதல் 1976 வரை படித்து இயற்பியலில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார்.[2] பணி வாழ்வு![]() பட்டப்படிப்பிற்கு பிறகு, பிளெஸ்ஸி என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றினார்.[2] 1978இல் டி.ஜி.நாஷ் என்ற நிறுவனத்தில் இணைந்து அச்சுப்பொறிகளுக்கு அச்சுக் கோர்ப்பு மென்பொருளை உருவாக்கிட உதவினார்.[2] பேர்னேர்ஸ் லீ ஒரு தனிப்பட்ட ஒப்பந்தக்காரராக ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் 1980ஆம் ஆண்டு சூன் முதல் திசம்பர் வரை பணியாற்றினார். அங்கிருக்கும்போது ஆய்வாளர்களுக்கிடையே தகவல்களை பகிரும் வண்ணம் மீயுரையை அடிப்படையாகக் கொண்ட திட்டவரைவொன்றை முன்மொழிந்தார்.[14] சோதனையோட்டமாக, என்குயர் என்ற முதல்நிலை அமைப்பொன்றை நிறுவினார்.[15] 1980இல் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தை விட்டு விலகிய பின்னர் இங்கிலாந்திலிருந்த இமேஜ் கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தில் பணிக்கு அமர்ந்தார்.[16] அங்கு தொழிநுட்பத் துறையில் மூன்றாண்டுகள் பணி புரிந்தார்.[17] அங்கு அவரது பணியில் கணினி வலையமைப்பு குறித்த பட்டறிவைப் பெற்றார்.[16] 1984இல் மீண்டும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஆய்வாளராகத் திரும்பினார்.[15] 1989இல் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் ஐரோப்பாவில் மிகப்பெரிய இணைய மையமாக விளங்கியது. தமது மீயுரைத் திட்டத்தை இணையத்துடன் இணைக்க இது நல்ல வாய்ப்பாக பேர்னேர்ஸ் லீ கருதினார்: "நான் எனது மீயுரை கருத்தாக்கத்தை பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறையுடனும் களப் பெயர் முறைமையுடனும் இணைத்தால் உலளாவிய வலை தயார்[18] ... மேலும் நான் செர்னில் வேலை செய்யும்போது வலையை உருவாக்குவது மிகத்தேவையாக இருந்தது. வலை உருவாகத் தேவையான மீயுரை, இணையம், பல்லுரு உரைப் பொருட்கள் போன்ற அனைத்து தொழில்நுட்பங்களும் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டிருந்தன. நான் அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்கதான் வேண்டியிருந்தது. இது ஒரு பொதுப்படுத்தல் முயற்சியாக, அடுத்தநிலை நுண்மமாக்கலாக, ஓர் பெரிய கற்பனை ஆவணப்படுத்தல் அமைப்பின் அங்கமாக அனைத்து ஆவண அமைப்புகளையும் கருதியதாக அமைந்தது.”[19] தமது முதல் முன்மொழிவை மார்ச்சு 1989இல் லீ வெளியிட்டார். 1990இல் இராபர்ட் கைலியாவுடன் இணைந்து அனுப்பிய திருத்தப்பட்ட வரைவை மேலாளர் மைக் சென்டால் ஏற்றுக் கொண்டார்.[20] என்குயர் அமைப்பை ஒட்டியே உலகளாவிய வலையை உருவாக்கி முதல் வலையுலாவியையும் உருவாக்கினார். இது உலகளாவிய வலை தொகுப்பானாகவும் செயல்பட்டது. முதல் வலைத்தளம் (Info.cern.ch) பிரான்சின் எல்லைக்குள்ளேயே ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டு ஆகத்து 6,1991இல் இணையத்தில் வெளியிடப்பட்டது.[21] இந்த வலைத்தளம் உலகளாவிய வலை என்றால் என்ன, வலையுலாவியை எவ்வாறு பயன்படுத்துவது, எவ்வாறு வலை வழங்கியை நிறுவுவது போன்ற தகவல்களை கொண்டிருந்தது.[22][23][24][25] 1994இல் பேர்னேர்ஸ்-லீ எம்.ஐ.டியில் W3C என்ற உலகளாவிய வலை கூட்டமைப்பை நிறுவினார். இதில் உலகளாவிய வலையை மேம்படுத்த சீர்தரங்களையும் பரிந்துரைகளையும் உருவாக்கிட விருப்பமுள்ள பல்வேறு நிறுவனங்களும் இணைந்துள்ளன. லீ தமது கருத்தாக்கத்தை கட்டற்ற முறையில் காப்புரிமைகள், பங்குரிமைகள் ஏதுமின்றி வழங்கினார். உலகளாவிய வலை கூட்டமைப்பின் சீர்தரங்களும் எவ்வித காப்புரிமைகளும் இன்றி அனைவரும் பயன்படுத்துமாறு இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.[26] திசம்பர் 2004இல், இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல்,கணினியியல் பள்ளியில் கணினி அறிவியல் துறைத்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.[27][28] பேர்னேர்ஸ்-லீயின் செல்வமதிப்பு $50,000,000க்கு மதிப்பிடப்படுகிறது.[29] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia