திருச்சியைத் தலைநகராக மாற்றும் திட்டம்

தமிழ்நாட்டு முதலமைச்சராக எம். ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) இருந்த போது தமிழ்நாட்டின் தலைநகரமாக திருச்சிராப்பள்ளியை மாற்றும் திட்டத்தினை வழிவகுத்தார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினாலும், அரசியல் சூழ்நிலையாலும் இத்திட்டம் நிறைவேற்றப் படவில்லை.

திட்டம்

தமிழ்நாட்டின் ஒரு முனையில் இருக்கும் சென்னையின் தலைமைச் செயலகத்துக்கு, தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியிலுள்ள மக்கள் வருவது சிரமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வர தமிழ்நாட்டின் மையத்தில் இருக்கக்கூடிய திருச்சிராப்பள்ளியை தலைநகரமாக மாற்றவேண்டும் என்று எம்.ஜி.ஆர். கருதினார். இதற்காக 1983இல் திருச்சிராப்பள்ளியை தலைநகரமாக்கும் திட்டத்தை அறிவித்தார்.[1]

சென்னையின் நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வாக இதனை எம்.ஜி.ஆர். கருதினார். சென்னையின் குடிநீர்ப் பற்றாக்குறையும் இத்திட்டத்திற்கு காரணமாக சொல்லப்பட்டது.[2]

எதிர்ப்பு

மு. கருணாநிதி உட்பட எதிர்க்கட்சியினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி, திருச்சிராப்பள்ளியை தலைநகராக்குவதில் எம்.ஜி.ஆர்., உறுதியாக இருந்தார். திருச்சிராப்பள்ளி அண்ணாநகர் நவல்பட்டில், தலைமைச் செயலகத்தின் ஒரு பகுதியை அமைக்க தீவிர முயற்சி எடுத்தார். திருச்சிராப்பள்ளிக்கு அவர் வந்தால் தங்குவதற்கு ஏதுவாக, திருச்சிராப்பள்ளி உறையூர் கோணக்கரை பகுதியில் ஒரு பங்களா வீடும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது.

அந்நிலையில் எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போதைய அரசியல் சூழ்நிலை, இந்திரா காந்தி மரணம், தேர்தல் போன்ற காரணங்களினால், திருச்சிராப்பள்ளியை தலைநகரமாக்கும் திட்டத்தை அவரால் நிறைவேற்ற முடியாமல் போனது.[3]

பிரிவினை வேண்டுகோள்கள்

சென்னை வெகு தொலைவில் இருப்பதினை காரணம் காட்டி, தமிழ்நாட்டினை இரண்டாக பிரிக்கும் கோரிக்கையும் வெகுகாலமாக பேசப்பட்டுவருகிறது. தென் தமிழ்நாட்டின் தலைநகராக திருச்சியை முன்பு முன்வைக்கப்பட்டது போல இப்போது மதுரையினை அதன் தலைநகராகக்க கோருவோரும் உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்[4] காங்கிரஸ் மூத்த தலைவர் இரா. அன்பரசு[5] மூவேந்தர் முன்னணிக் கழகம் சேதுராமன்[6] போன்றோர் அதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

வரலாற்றில் திருச்சிராப்பள்ளி தலைநகர் மாற்றம்

நாயக்கர் ஆட்சியின் தொடக்கத்தில் மதுரையே தலைநகராக இருந்தது. திருச்சிராப்பள்ளி மதுரை நாட்டின் எல்லை நகராக இருந்தது. தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினால், தஞ்சை நாயக்கரோடு போர் புரிய வசதியாக இருக்கும் என்று கருதி கி.பி.1616-இல் முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் இம்மாற்றத்தைச் செய்தார். இவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர், தன் ஆட்சியின் ஏழாம் ஆண்டில் கி.பி.1630-இல் தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார். திருச்சிராப்பள்ளி அடிக்கடிப் போர்த் தாக்குதலுக்கு உட்பட்டதாலும், தென்பகுதியைத் திருச்சிராப்பள்ளியிலிருந்து கவனிக்க இயலாமையாலும், திருமலை நாயக்கர் மதுரையைத் தலைநகராக்கினார். மீண்டும் 1665-இல் சொக்கநாத நாயக்கர் தஞ்சை மீது படையெடுக்க வசதியாகத் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார்.[7]

தற்கால நிலை

திருச்சிராப்பள்ளியை சென்னைக்கு அடுத்து 2ஆவது தலைநகராக, இணைத் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. திருச்சிராப்பள்ளி நகரம், தமிழ்நாட்டின் மத்தியில் அமைந்துள்ள முக்கிய நகரமாகும். மாநிலத்தின் அனைத்துப் பகுதிக்கும் மையத்தில் உள்ளதால், இங்கு தலைமைச் செயலகத்தின் சில பிரிவு அலுவலகங்களையும், சில துறைகளின் அலுவலகங்களையும் இங்கு மாற்ற வேண்டும். தமிழ்நாட்டின் 2வது தலைநகராக, இணைத் தலைநகராக திருச்சிராப்பள்ளியை அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.[8]

2016இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் திருச்சிராப்பள்ளியை தலைநகராக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டது. மார்ச் 23இல் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகையில் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதனைத் தெரிவித்தார்.[9]

மேற்கோள்கள்

  1. தமிழகத்தின் புதிய தலைநகரம் "திருச்சி': எம்.ஜி.ஆர்., கனவை நிறைவேற்றுவரா ஜெ
  2. "The story of the search". Archived from the original on 2010-03-16. Retrieved 2011-01-27.
  3. "திருச்சியில் உள்ள எம்.ஜி.ஆர்., பங்களா சுற்றுலாதலமாக்க ஜெ.,வுக்கு கோரிக்கை". Archived from the original on 2016-03-08. Retrieved 2012-09-24.
  4. "தமிழ்நாட்டை இரண்டாக பிரித்தால் நிர்வாகத்திறன் மேம்படும்: ராமதாஸ்". வெப்துனியா. http://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-109121500004_1.htm. பார்த்த நாள்: 6 August 2019. 
  5. "தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்: இரா.அன்பரசு கோரிக்கை". விகடன். https://www.vikatan.com/government-and-politics/politics/17838-. பார்த்த நாள்: 6 August 2019. 
  6. தமிழகத்தை இரண்டாக பிரிக்கவேண்டும்! டாக்டர் சேதுராமன்[தொடர்பிழந்த இணைப்பு]
  7. நாயக்கர் கால அரசியல்
  8. 2வது தலைநகர் திருச்சி-இ.கம்யூ கோரிக்கை!
  9. தி இந்து நாளிதழ் - நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு March 24, 2016
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya