முகவை கண்ண முருகனார்
முகவைக் கண்ண முருகனார் (ஆகத்து 1890 - 28 ஆகத்து 1973) தமிழ்க்கவிஞர், ஒரு தேச பக்தக் கவிஞராகத் தமிழ்நாடெங்கும் அறியப்பட்டவர். சம காலத்தியவரான சுப்பிரமணிய பாரதியாருக்கு இணையாகப் பரவலாகப் பேசப்பட்டவர். கவி முருகனாரின் "ஸ்வதந்திர கீதங்கள்' என்ற பாடல் தொகுப்பு, 1918-இல் நூல் வடிவம் பெற்றது. அது வெளியாவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே "தேசிய சிந்தனை செறிந்த மகாகவிராயர்' என்று புகழ்ந்துரைக்கப்பட்டார். தென்னிந்தியர் அனைவரும் இந்திமொழி கற்க வேண்டும் என முதன்முதலாக வாதிட்டவர் கவி முருகனார். இது குறித்து, அவரது "ஸ்வதந்திர கீதங்க'ளில் ஒரு பாடல் எழுதியுள்ளார். பிற்காலத்தில் துறவறம் பூண்டு ரமண மகரிஷியின் சீடராக வாழ்ந்து பல்லாயிரக்கணக்கான கவிகளைப் புனைந்தார். வாழ்க்கைச் சுருக்கம்இராமநாதபுரம் மாவட்டத்தில் (ராமநாதபுரத்துக்கு மற்றொரு பெயர் முகவை) ஓர் எளிய அந்தணர் குடும்பத்தில், ஆகஸ்டு 1890 இல் கிருஷ்ணய்யர்-சுப்புலட்சுமி ஆகியோருக்குப் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். உற்றார் உறவினரால் சாம்பமூர்த்தி என்று அழைக்கப்பட்டார். ஆரம்பக்கல்வியை ஸ்காட் மிஷன் பள்ளியில் படித்தார். இரண்டாண்டுகள் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தார். கல்லூரி நாட்களிலேயே அவருக்கிருந்த தமிழ்ப்பற்றின் விளைவாக, தமது பெயரை முருகனார் என்று தூய தமிழாக்கிக் கொண்டார். பிறந்த இடம் முகவை என்பதால், "முகவைக் கண்ண முருகனார்' என்ற பெயரில் பிரபலமானார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் ஓரிரு ஆண்டுகள் ராமநாதபுரம் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேலுச்சாமித் தேவர் என்பவருக்கு திருக்குறள் கற்பிக்க நியமனம் பெற்றார். இதற்கிடையில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. பிறகு தமது மனைவி மற்றும் விதவைத் தாயாருடன் சென்னை நகருக்குக் குடி பெயர்ந்தார். நார்விக் மகளிர் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். அப்போது தேசியப் பாடல்கள் பல இயற்றிப் பிரபலமாகி வந்தார். ராவ்சாஹிப், மு. ராகவையங்கார் முதலான தமிழ் வல்லுனர்களுடன் தமிழ்ச் சொல்லகராதிக் குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றினார்.[2] துறவறம்அந்தக் காலகட்டத்திலேதான் ரமண மகரிசியின் அருணாசல ஸ்துதிப் பஞ்சகம் என்ற தோத்திரத் தொகுப்பையும் எளிய அத்வைத உபதேசம் தாங்கிய "நான் யார்?' என்ற சிறு நூலையும் 1923-இல் படிக்க நேர்ந்தது. அதே ஆண்டு திருவண்ணாமலைக்குச் சென்று ரமண மகரிஷியைத் தரிசித்தார். அவரைச் சந்திக்கச் செல்லும்போதே “தேசிகப் பதிகம்” என்ற பாமாலையைப் புனைந்து அதை மகர்ஷிக்கு அர்ப்பணித்தார்.[3] 1926-இல் தமது அன்னை மறைந்ததும், கடைசி உலகப்பற்றும் அறுந்தது. தமிழ்ப் பண்டிதர் வேலையை உதறித் தள்ளினார். வீடு வாசல் துறந்தார். தனியாகத் திருவண்ணாமலை சென்று இரமணரின் காலடி பணிந்து, புற வாழ்வை அறவே துறந்தார். கடைசிவரை ஒரு துறவியாய் வாழ்ந்தார். கவி புனைதல்இரமணரைச் சந்தித்தது முதல் வேறு எவர் பற்றியும் எது பற்றியும் பாடாமல் குரு ரமணர் தனக்கும் பிற அடியவர்களுக்கும் கூறிய கருத்துகளையும் உபதேசங்களையும், ரமணர் குறித்து தான் இயற்றிய தோத்திரங்கள், அவரால் தனக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்கள் பற்றியும் என்பவையுமாக கிட்டத்தட்ட 30,000 தமிழ்ப்பாக்களை இயற்றியுள்ளார். ரமணர் பக்தர்களுக்கு அருளிய உபதேச வாசகங்களையும், எளிய ஆன்ம விசாரத் தத்துவ சாரத்தையும் முருகனார் கவனமாக கிரகித்துக் கொண்டு அவற்றைக் கருத்துச் செறிவான செந்தமிழ்ச் செய்யுள்களாகச் செதுக்கலானார். அவ்வப்போது மகரிஷி ரமணரிடமும் காண்பித்து, அவரது ஆலோசனை மற்றும் அனுமதியும் பெற்று வந்தார். ஆங்காங்கே மகரிஷி அளித்த திருத்தங்களைப் புகுத்தி, பாடலைப் புனரமைத்தார். இவ்வாறு கோத்தமைத்த நூலே குருவாசகக் கோவை என்பது. மொத்தம் 1,282 நாலடி வெண்பாக்கள் கொண்ட நூல். அவற்றுள் 28 வெண்பாக்கள் ரமணர் இயற்றியவை. இக் கோவை, குரு ரமணரின் ஒப்புதல் பெற்றது.[4] இதனாலும் இக்கோவைக்கு மகரிஷியே ஆசிரியர் என்று ரமண அடியார்களிடையில் பரவலாகக் கருதப்படுகின்றது. இப்பாடல்கள் அனைத்தையும் பேராசிரியர் கே. சுவாமிநாதன் (1896-1994) என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தளித்துள்ளார். இந்நூலுக்கு சாது ஓம் சுவாமிகள் என்ற ரமண பக்தர் இயற்றிய விரிவுரை புகழ்பெற்றது.[5] இவ்விரிவுரை மூலநூலுடன் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[6] 1928-இல் தொடங்கி முருகனாரின் வேண்டுதலால், ரமணர் அவ்வப்போது இயற்றிய பாடல்கள் (வெண்பாக்கள்) ஒன்றுதிரட்டப்பட்டுச் சீரமைத்துத் தொகுக்கப்பட்டன. இவையே "உள்ளது நாற்பது” மற்றும் “உள்ளது நாற்பது” மற்றும் அதன் “அனுபந்தம்” என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிடப்பட்டன. இவ்வாறே முருகனாரின் வேண்டுதலால் மகர்ஷி இயற்றிய இன்னொரு நூல்தான் “உபதேச உந்தியார்” ஆகும். குருவாசகக் கோவை, உள்ளது நாற்பது, உபதேச உந்தியார் ஆகிய மூன்றும் “ஸ்ரீ ரமண பிரஸ்தான த்ரயம்” என்று ரமண அடியார்களால் அழைக்கப்படுகின்றன. முருகனார் பின்னால் இயற்றிய ரமண சந்நிதி முறை என்ற நூலில் ரமண புராணம் என்ற பகுதியில் பெருமளவும் மகர்ஷி இயற்றிய வரிகளே உள்ளன. ரமணர் இயற்றிய பல்வேறு நூல்களும் அடங்கியரமண நூற்றிரட்டு என்ற தொகுப்பில் முருகனார் இயற்றிய சில பாடல்களை ரமணர் சேர்த்துள்ளார். இவ்வாறு ஆக்கியோன் தானே என்ற பாகுபாடு இல்லாமல் குரு ரமணரும் முருகனாரும் இயைந்து கவிகள் புனைந்துள்ளனர்[7]. இயற்றிய நூல்கள்மேற்கூறிய சித்தாந்த அல்லது சாத்திர நூல்கள் உருவாக உதவியது அல்லாமல், ஸ்ரீரமண சந்நிதி முறை, ஸ்ரீரமண தேவமாலை, ஸ்ரீரமண சரணப்பல்லாண்டு[6], முதலிய தோத்திர நூல்களையும் இயற்றியுள்ளார். மேலும் ஆன்மீக அனுபவ நூல்களாக ஸ்ரீரமண அனுபூதி (1500 பாடல்கள்), ஸ்ரீ ரமண ஞானபோதம் (14,000 பாடல்கள்) ஆகியவற்றையும் படைத்துள்ளார். ரமண ஞான போதம் ஒன்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது[8]. ஸ்ரீரமண மகரிஷி 1950-இல் மகா நிர்வாணம் எய்திய பிறகு 23 ஆண்டுகாலம் முருகனார் வாழ்ந்து, ஆன்மிகப் பாக்களை புனைந்து வந்தார். சுமார் 30,000-க்கும் மேற்பட்ட தீந்தமிழ்ப் பாக்களை இயற்றி பெருஞ்சாதனை படைத்துள்ளார். கடைசி ஆண்டுகளில் ரமணாசிரமத்திலேயே தங்கியிருந்து பக்தர்களுக்கு தெள்ளிய விளக்கங்கள் அளித்து வந்தார். அவரளித்த விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சீரிய ரமண பக்தரான T R கனகம்மாள் ரமண நூற்றிரட்டுக்கு உரை ஒன்றை இயற்றியுள்ளார்[9]. அந்த அடிப்படையிலேயே “ஒழிவில் ஒடுக்கம்” என்ற வேதாந்த நூலுக்கு விளக்கவுரை வெளியிடப்பட்டுள்ளது[10]. மறைவுமுருகனார், 1973 ஆகத்து 28 ஆம் தேதி காலமானார். இவரது சமாதி ரமணாச்சிரமத்துக்கு வடக்கே அருணை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. நினைவகம்இராமநாதபுரத்தில் பிறந்து, வசித்த முருகனாரது இல்லம், அன்னாரது நினைவகமாக "ஸ்ரீமுருகனார் மந்திரம்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டு, ரமண பக்தர்கள் வணங்கும் ஒரு புனிதத் தலமாக இருந்து வருகிறது. உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia