அபிநவகுப்தர்
அபிநவகுப்தர் ( கி.பி 950 – 1016[1][2]) என்பவர் ஒரு இந்திய மெய்யியலாளரும், காசுமீர சைவத் துறவியும் ஆவார்[3] அவர் சிறந்த கவிஞர், நடிகர் மற்றும் வீணைவல்லுநர் என்றெல்லாம் அறியப்படுகின்றார்.[4][5] – இந்தியப் பண்பாட்டில் இன்றியமையாத தாக்கம் செலுத்திய ஒரு மகத்தான ஆளுமையாக அபிநவகுப்தர் கணிக்கப்படுகின்றார்.[6][7] காசுமீரத்தில் பிறந்த இவர்[8] அவரது சமகாலத்தில் புகழ்பெற்றிருந்த மெய்யியற் கோட்பாடுகள், கலைகள் அனைத்தையும் பதினைந்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு குருக்கள் மூலம் கற்றறிந்தார்.[9] அவரது மாபெரும் சாதனைகளாக தந்திராலோகம் மற்றும் அபிநவபாரதி ஆகிய நூல்கள் அறியப்படுகின்றன. திரிக - கௌல மரபுகளின் கலைக்களஞ்சியமாக தந்திராலோகம் திகழும் அதேவேளை, பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்துக்கு எழுதப்பட்ட புகழ்பெற்ற உரையாக அபிநவபாரதி மிளிர்கின்றது.[10] வாழ்க்கைநரசிங்ககுப்தர், விமலகலை ஆகியோருக்கு மகனாக, மனோரதன், அம்பை ஆகியோரின் சகோதரனாக[11], சங்கரன் என்ற பெயரோடு பிறந்தார் அபிநவர். தாய் அவரது இரண்டு வயதிலேயே இறக்க[12], குழந்தைகளின் உள்ளம், இலௌகீகத்தை உதறி, சிறுவயதிலிருந்தே சிவபக்தியில் திளைத்து வந்தது.[12] தந்தையிடமிருந்தே அவர்கள் வடமொழி இலக்கணம், மெய்யியல், தருக்கம் முதலியவற்றைக் கற்றனர்.[13] அம்பையை மணந்துகொண்ட சங்கரரின் மைத்துனன் கர்ணனும் மிகச்சிறந்த சிவனடியானாக இருந்தும் இளவயதிலேயே மாண்டுபோக, அம்பையும் சைவத்துறவி ஆகினாள்.[14] அம்பையின் மகன் யோகேஸ்வரிதத்தன் பிற்காலத்தில் யோகத்தில் கரைகண்டவனாகத் திகழ்ந்தான்.[15] தலைசிறந்த சைவர்களாக விளங்கிய அபிநவரின் அத்தை வடசிகை, சீடராக விளங்கிய மைத்துனன் சேமராஜன், இராமதேவன், மந்திரன் போன்றோர் தனக்குச் செய்த பேருதவிகள் பற்றி அவர் தன் நூல்களில் விதந்துகூறியுள்ளார்.[16] இத்தகைய ஆன்மிக வட்டத்தால் சூழப்பட்டிருந்த சங்கரர், இளவயதிலேயே அறிவுத்தாகம் மிகுந்து, பதினைந்துக்கும் மேற்பட்ட பௌத்த, வைணவ, சைவ அறிஞர்களைத் தேடி அவர்களிடம் பாடம் கற்றார்.[17] அவர்களில் மிகச்சிறந்தவராக சங்கரர் கருதும் சம்புநாதர் என்பவரின் கோரிக்கைக்கிணங்கவே பிற்காலத்தில் அவர் தந்திராலோக நூலை யாத்தார்.[18] தன் குடும்பத்தவர், சீடர்களுடன் தன் இல்லத்திலேயே ஆச்சிரமம் அமைத்து, துறவியாகவே அவர் வாழ்ந்து மறைந்ததாக அறியமுடிகின்றது.[19] மறையும் போது, தன் பன்னீராயிரம் சீடர்களுடன் தான் இயற்றிய "பைரவ ஸ்தவம்" நூலை பாடியவாறே அவர் குகையொன்றுள் புகுந்து மறைந்ததாகச் சொல்லப்படுகின்றது.[20] நூல்கள்அபிநவகுப்தரின் மிகச்சிறந்த நூலான தந்திராலோகம், காசுமீர சைவத்தின் சகல மரபுகளையும் உள்ளடக்கிய மாபெரும் கலைக்களஞ்சியம் ஆகும். இதன் சுருங்கிய வடிவமாக தந்திரசாரமும் இவர் படைப்பே. பகவத்கீதார்த்த சங்கிரகம் இவரது கீதையின் உரைநூல். பராத்ரிஷிகா லகுவிருத்தி, பரியந்தபஞ்சசிகை, ரகசியபஞ்சதசிகை, லக்விபிரக்ரியா, தேவிஸ்தோத்திராவரணம், பரமார்த்தசாரம், பைரவஸ்தவம் முதலான பல நூல்களும் இவர் படைப்புகளில் அடக்கம். மெய்யியலைப் பொறுத்தவரை, ஈஸ்வரப் பிரத்யபிஞ்ஞா விமர்சினி, பேதவாத விதாரணம், கதாமுக திலகம் போன்ற நூல்கள் முக்கியமானவை. பரத சாத்திரத்தின் உரைநூலான "அபிநவபாரதி" இன்னொரு முக்கிய நூல். உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia