அயனாவரம் காசி விசுவநாதர் கோயில்
அயனாவரம் காசி விசுவநாதர் கோயில் (Kasi Viswanatha Temple, Ayanavaram) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் அயனாவரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள சிவன் கோயிலைக்குறிக்கும்.[1][2][3] இந்த கோவில் மெட்ராசு மாகாணத்தின் குசராத்தி சமூகத்தின் டக்கர் குலத்தால் கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் கட்டப்பட்டது. மேடவாக்கம் தண்ணீர் தொட்டி சாலைக்கு அருகிலும் அயனாவரம் பேருந்து நிலையத்தை ஒட்டியும் அயனாவரம் காசி விசுவநாதர் கோயில் அமைந்துள்ளது.[4] சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் நீதியரசர் இ. பத்மநாபன் கமிட்டியால் பட்டியலிடப்பட்ட 400 பாரம்பரிய கட்டமைப்புகள் மற்றும் கோவில்களுள் ஒன்றாகும்.[5][6] கடல் மட்டத்திலிருந்து சுமார் 56 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 13°05′53″N 80°14′28″E / 13.0980°N 80.2412°E ஆகும். அயனாவரம் பகுதியிலுள்ள காசி விசுவநாதர் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[7] வரலாறுதக்கர் இனத்தவர்கள் குசராத்தி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் குசராத்தின் அகமதாபாத்தில் அமைந்துள்ள கெடா என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். கெடா பகுதியைச் சேர்ந்த சில குசராத்தி குடும்பங்கள் 1700 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு மாநிலத்திற்கு குடிபெயர்ந்தனர்.[6][8][9][10] முதலில் இவர்கள் தஞ்சாவூரில் குடியேறினர். இவர்களுக்குத் தஞ்சாவூர் குஜராத்திகள் என்ற பெயரும் உண்டு. பின்னர் இங்கிருந்து திருச்சி, திருநெல்வேலி, மற்றும் மதுரை ஆகிய நகரங்களுக்குப் பரவினர். திருச்சியை மையாமகக் கொண்டு இரத்தினம் மற்றும் நகை வணிகத்தில் ஈடுபட்டுப் புகழ் பெற்றனர். புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் ஜார்ஜ் டவுன் உருவான காலத்தில் இவர்கள் சிலர் இங்கும் குடியேறினர். சிறீ ஏகாம்பரேசுவரர் கோவில் பகுதி மற்றும் அக்ராகரம் அருகே இவர்கள் வசித்தனர். பிற்காலத்தில் இப்பகுதி சௌகார்பேட்டையாயிற்று. வைர வியாபாரத்தில் இவர்கள் தங்கள் முத்திரையைப் பதித்தனர். டி.ஆர். டாக்கர் & சன்சு ஒரு தேசிய நகைக்கடை நிறுவனமாக உயர்ந்தது.[8][9][10][11] ஏகாம்பரேசுவரர் அக்ராகரம் மற்றும் அயனாவரம் ஆகிய இடங்களில் பல அறக்கட்டளைகள் உருவாக்கினர். அயனாவரத்தில் அமைந்துள்ள தக்கர் சத்திரம் இக்குடும்பத்தின் அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட அறநிறுவனம் ஆகும். செல்வச்செழிப்புள்ள இந்தத் தக்கர் குடும்பத்தைச் சேர்ந்த ராம்கோர் பாய் மற்றும் ரத்னா பாய் என்ற இரண்டு பெண்கள் சௌகார்பேட்டையில் வாழ்ந்தவர்கள் ஆவர். இவர்கள் இருவரும் கிபி 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாரணாசிக்கு புனித யாத்திரை சென்றனர். வாரணாசியில் இருந்து இரண்டு சிவலிங்கங்களைக் கொண்டுவந்தனர். இவற்றுள் ஒன்றை அயனாவரத்தில் காசி விசுவனாதருக்காக் ஒரு கோவில் அமைத்து நிறுவினர். மற்றொன்றை சவுகார்பேட்டையில் உள்ள மொட்டை உத்தராவில் ஒரு சிறு சன்னிதி அமைத்து நிறுவினர். இந்த மொட்டை உத்தராவை சிறீ நிகேதன் என்றும் அழைப்பர்.[11] ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கு எதிரே உள்ள தங்கசாலைத் தெருவில் அமைந்துள்ள கெடவால் குசராத்திகளின் சமூக மையமாக திகழ்ந்தது. அயனாவரத்தில் அமைக்கப்பட்ட காசி விசுவநாதர் கோவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது கட்டப்பட்ட கோவில் என்பதால் இக்கோவில் சிறப்புப் பெற்றது.[8][9][10] கோயில் அமைப்புகோவிலின் கிழக்குப் பார்த்த நுழைவாயிலில் முற்றுப்பெறாத மொட்டைக் கோபுரத்தைக் காணலாம். மொட்டைக் கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், மூலவர் கருவறைக்கு எதிரே அமைந்துள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன.[10] கோவில் கருவறை, அந்தரளம் மற்றும் அர்த்தமண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மூலவர் விமானம் முத்தள வேசர விமான வகையைச் சேர்ந்தது. அதிட்டானம் பாதபந்த வகையைச் சேர்ந்தது. கருவறையின் வெளிப்புறச் சுவர்க் கோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மன், துர்க்கை ஆகிய தெய்வங்கள் நிறுவப்பட்டுள்ளன. விமான தளங்களின் பத்ர, கர்ணப் பகுதிகளில் சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வட்ட வடிவ கிரீவத்தின் நான்கு திசைகளிலும் கிரீவ கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூலவர் காசி விஸ்வநாதர் கருவறையில் இலிங்க வடிவில் காட்சி தருகிறார். இது காசியிலிருந்து எடுத்துவரப்பட்ட சிவலிங்கமாகும். கருவறையை ஒட்டி அமைந்துள்ள அர்த்தமண்டபத்தில் நடராசர் மற்றும் பிட்சாடனர் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கான சிலைகள் உள்ளன. பைரவர், சூரியன், சந்திரன், அனுமன், வீரபத்திரர், கன்னிமார்கள், நவக்கிரகம், தேவார மூவர் ஆகிய தெய்வங்கள் சன்னிதி கொண்டுள்ளனர். அம்பாள் விசாலாட்சி தனி சன்னிதி தெற்குப் பார்த்தவாறு அமைந்துள்ளது. சன்னிதியின் எதிரே பலிபீடம், கொடிமரம், சிம்மவாகனம் ஆகியவற்றைக் காணலாம். அம்மன் சன்னதியில் கொடிமரம் இருப்பது அரிது. ஆனால் இங்கு உள்ளது. கோவிலின் எதிரே திருக்குளம் அமைந்துள்ளது.[12][13] மேற்கோள்கள்
மேற்கோள்கள்புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia