இந்துக்களின் வழிபாட்டுக்குரியதாயமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும். கிரகம் எனும் சமசுகிருத சொல்( ग्रह ) ஆளுகைப்படுத்தல்—(seizing, laying hold of, holding[1]) எனும் பொருளுடையது. நவக்கிரகம் (சமசுகிருதம்: नवग्रह ), ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். புவியிலுள்ள உயிர்க் கூறுகளை ஆளுகைக்குட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன. இந்த கிரகங்களுக்கு சடங்குகள், பிரார்த்தனைகள் அல்லது பரிகாரங்கள் செய்வதன் மூலம், ஒருவர் அவர்களின் கோபத்தைத் தணித்து அவர்களின் அனுக்கிரகத்தைப் பெறலாம், அதன் மூலம் அவர்களின் அதிர்ஷ்டம் மேம்படும் மற்றும் வாழ்க்கையில் தடைகளை கடக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
நவக்கிரங்களை தமிழில் ஒன்பான் கோள்கள் என்று அழைக்கின்றனர்.[2]
இந்திய சோதிட நூலின்படி கிரகங்கள் ஒன்பது ஆகும். இவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பனவாகும். வானியலும் சோதிடமும் ஒன்றல்ல. எனவே, தற்கால வானியல் அறிவியலுடன் சோதிடத்தை ஒப்பிடக் கூடாது.
நவகிரகங்கள் லிங்கத்தை வழிபடும் காட்சியைக் காட்டும் பொ.ஊ.மு. அஜந்தா சிற்பம்
கிரகங்கள் மனிதர் மீதும், உலகில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றன என்ற நம்பிக்கையே சோதிடத்தின் அடிப்படையாகும். புவியை அண்டத்தின் மையத்தில் வைத்து, சோதிடத்தில் கிரகங்களின் இயக்கங்கள் கணிக்கப்படுகின்றன. பண்டைய இந்தியப் பண்பாட்டில் இராகு, கேது தவிர்ந்த ஏழு கிரகங்களும் தேவர்கள் எனவும், அவர்கள் வெவ்வேறு குண இயல்புகளைக் கொண்டவர்கள் எனவும் கருதினார்கள். இக்கிரகங்கள், அவரவர் குண இயல்புகளுக்கு ஏற்ப உலகுக்கும் அதில் வாழும் மக்களுக்கும் நன்மையையோ தீமையையோ செய்கிறார்கள் எனச் சோதிட நூல் கூறுகிறது.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில், புவிக்குச் சார்பாக விண்வெளியில் கிரகங்கள் இருக்கும் நிலையும், ஒவ்வொரு கிரகமும் ஏனைய கிரகங்களின் நிலைகளோடு கொண்டுள்ள தொடர்பும் புவியில் இடம்பெறும் நிகழ்வுகள் மீது அவை ஏற்படுத்துகின்ற தாக்கத்தைப் பாதிக்கின்றன என்று சோதிடம் கருதுகிறது.
நவகிரகங்களை வழிபடுதல் மிகத் தொன்மையான வழிபாடாக இருந்துள்ளது. வரலாற்று ஆய்வின்படி புத்தர் காலத்திலும் இந்த வழிபாடு இருந்துள்ளது. இருப்பினும் நவக்கிரகங்களை தனித்தே அக்காலத்தில் வழிபட்டு வந்திருக்கிறார்கள்.[2] அனைத்தையும் ஒரு சேர வழிபடும் வழமை பொ.ஊ. 11ம் நூற்றாண்டில் தோன்றியது. அப்போது முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிகாலமாகும். தஞ்சை மாவட்டத்தில் குலோத்துங்க சோழ மார்த்தாண்ட ஆலயம் என்ற கோயில் அமைக்கப்பட்டது. தற்போது அதனை சூரியனார் கோயில் என அழைக்கிறோம். இந்தக் காலத்தின் தொடர்ச்சியாக சண்டேள ஆட்சியாளர்கள் ஒடிசா மாநிலத்தில் கோனார்க் எனுமிடத்தில் சூரியனுக்கு தனிக் கோயில் அமைத்தனர்.[2]
பல்லவர்கள் மற்றும் சோழர்களின் காலத்தில் கற்றளிகளாக உயரமமான மேடையின் மீது நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தற்போது இந்த வழமையே பெரும்பாலான சிவாலயங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.[2]
மேலத்திருமணஞ்சேரி லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில், நாகப்பட்டிணம்
சின்னவெண்மணி பீமேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்
திருவாலந்துறை சோழீசுவரர் கோயில், பெரம்பலூர்
பாளையங்கோட்டை பகவதி அம்மன் கோயில், திருநெல்வேலி
வெள்ளலூர் தேனீஸ்வரர் கோயில், கோயம்புத்தூர்
முட்டம் நாகேசுவரர் கோயில், கோயம்புத்தூர்
மூலனூர் சோழீஸ்வரர் கோயில், திருப்பூர்
திண்டுக்கல் தண்டாயுதபாணி திருக்கோயில்
சின்னாளப்பட்டி சதுர்முக முருகன் கோயில், திண்டுக்கல்
ராஜபதி கைலாசநாதர் கோயில், துத்துக்குடி
சவுகார்பேட்டை ஏகாம்பரேசுவரர் கோயில், சென்னை
திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோயில், திருவள்ளூர்
கொழுமம் தாண்டேசுவரர் கோயில், கோயம்புத்தூர்
கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோயில், காஞ்சிபுரம்
வடநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்
காங்கேயநல்லூர் சுப்பிரமணியசாமி கோயில், வேலூர்
திருக்குன்றத்துா் எனும் குன்னத்துாரில் நவக்கிரக லிங்க கோவில்கள். மதுரை கிழக்கு.
சிறப்பான நவக்கிரக அமைப்புகள்
எட்டியத்தளி அகத்தீசுவரர் கோயில், அறந்தாங்கி - இக்கோயிலில் நவக்கிரகங்கள் பத்மபீடத்தில் உள்ளன. அவற்றின் மீது மந்திரங்களும் பொறிக்கப்பட்டு உள்ளன.[4]
வேதாரண்யம் திருமறைக்காடார் கோயில், நாகப்பட்டினம் - இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே முகத்தோடு தனித்தனி விக்ரமாக அமைந்துள்ளன. இவ்வாறு இருப்பதற்கு அம்பாளின் திருமணக் கோலத்தினை காணவே இவ்வாறு இருப்பதாகக் கூறுகின்றனர்.[5][6]
சித்திரவாடி நயா திருப்பதி கோயில், காஞ்சிபுரம் - இக்கோயிலில் நவ நரசிம்மரும், நவ கிரகங்களும் ஒரே பீடத்தில் அமைந்துள்ளன.[7]
இந்து சமயத்தில் வழிபடுவதைப் போன்றே சமண சமயத்திலும் நவக்கிரக வழிபாடு காணப்படுகிறது. சமணர்கள் தங்களுடைய தீர்த்தங்கரர்களின் தன்மைகளோடு நவக்கிரகங்களை ஒப்பிட்டு வகைப்படுத்துகின்றனர்.