உண்மையே உன் விலை என்ன? (Unmaiye Un Vilai Enna?) என்பது 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை சோ எழுதி இயக்கினார். இது இதே பெயரிலான அவரது மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் சோவுடன்முத்துராமன், பத்மப்பிரியா, எஸ். ஏ. அசோகன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். கொலைக் குற்றம் சாட்டப்படும் ஒரு இளைஞனைக் காப்பாற்ற ஒரு பாதிரியார் எடுக்கும் முயற்சிகளைச் சுற்றியே படம் சுழல்கிறது. இது 30 ஏப்ரல் 1976 அன்று வெளியானது.
கதை
மகளிர் சங்கத்துக்கு நன்கொடை தருவதாக அதன் தலைவியை வீட்டிற்கு அழைக்கிறான் ஒரு பணக்கார இளைஞன். அப்பெண் ஒரு வாடகைத் தானுந்தில் அவன் வீட்டிற்கு வருகிறாள். வீட்டில் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க அப்பணக்கார இளைஞன் முயல்கிறான். வாடகைத் தானுந்து ஓட்டுநர் அப்பெண்ணை அவனிடம் இருந்து காப்பாற்ற முயல்கிறார். அம்முயற்சியில் அந்த இளைஞனைக் கொன்றுவிடுகிறார். தேவாலயத்தில் பாதிரியாரிடம் பாவமன்னிப்புக் கேட்டு சரணடைய முடிவெடுக்கிறார் அந்த ஒட்டுநர். ஆனால் பாதிரியார் நீ செய்தது தவறல்ல என்று கூறுகிறார். மேலும் கொலைக்குக் காரணமான சூழ்நிலையைக் காட்டத் தேவையான ஆதாரங்களைச் சேகரிக்கும் வரை ஓட்டுநரை காவல்துறையினரிடம் இருந்து மறைத்து வைக்கிறார். இதற்கிடையில் தன் மகனைக் கொன்றவன் தூக்கில் தொங்கவேண்டும் என்று பணக்காரத் தந்தை விரும்பி அதற்கான பணிகளில் ஈடுபடுகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவள் குடும்பத்தாரையும் பணத்தால் விலைக்கு வாங்குகிறார். ஓட்டுநரின் உயிரைக் காக்கப் பாதிரியார் தனது நற்பெயரையும், வேலையையும் இறுதியில் தனது உயிரையும் கூட பணயம் வைத்து தனது முயற்சியில் வெற்றி பெறுகிறார்.[1][2]
உண்மையே உன் விலை என்ன? என்பது சோ ராமசுவாமி தனது விவேகா பைன் ஆர்ட்ஸ் கிளப் நாடகக் குழு மூலம் அரங்கேற்றிய பிரபலமான நாடகமாகும்.[3][4]நீலுவும் நடித்த இந்நாடகம்,[5] விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது.[6] சோ அதைத் தழுவி அதே பெயரில் ஒரு திரைப்படமாக்கி இயக்குநராகவும், எழுத்தாளராகவும், நடிகராகவும் பணியாற்றினார்.[7] இப்படத்தை மொஹிந்த் மூவிஸ் என்ற பதாகையின் கீழ் டி.ஏ.பி. மற்றும் ராணா தயாரித்தனர்.[8][9] ஒளிப்பதிவை சம்பத் கையாண்டார், படத்தொகுப்பை ஈ. வி. சண்முகம் செய்தார்.[8] இத்திரைப்படம் பெங்களூரில் படமாக்கப்பட்டது.[10][11] இதன் இறுதி நீளம் 3,948.22 மீட்டர் (12,953.5 அடி) ஆகும்.[12]
பாடல்
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு வரிகளை கண்ணதாசன் எழுத, எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[13]
உண்மையே உன் விலை என்ன? 30 ஏப்ரல் 1976 அன்று வெளியானது.[14]கல்கியின் காந்தன் படத்தைப் பாராட்டி எழுதினார். குறிப்பாக முத்துராமனின் நடிப்பையும், சோவின் எழுத்தையும் பாராட்டினார்.[15]