ஓல்கா தோக்கர்சுக்கு (Olga Nawoja Tokarczuk, போலிய: Olga Nawoja Tokarczuk[1], பிறப்பு: 29 சனவரி 1962) ஒரு போலந்திய எழுத்தாளர். பொது அறிவாளி என்றும் ஆர்வலர் என்றும் அறியப்படுகின்றார்.[2][3][4] இவர் எழுதிய யாக்கோபின் நூல்கள் என்னும் புதினத்துக்கு 2015 இல் நைக்கி விருது வழங்கப்பெற்றது. 2018 ஆம் ஆண்டிற்கான அனைத்துலக புக்கர் பரிசைஓடுதளங்கள் என்ற படைப்புக்காக வென்றார்.[4] 2019 ஆம் ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசை வென்றார்.[5][6][7]
ஓல்கா தோக்கர்சுக்கு, 1993 இல் முதன்முதலாக "நூல் மக்களின் செலவு (பயணம்)" என்ற கதையை எழுதினார். இக்கதை பிரான்சிலும் எழுப்பானியாவிலும் 17 ஆவது நூற்றாண்டில் நடப்பதாக அமைப்பட்டுள்ளது. பைரீனில் உள்ள ஒரு மருமமான நூலைத் தேடிப் போகின்றார்கள் கதை மாந்தர்கள். இது போலந்திய பதிப்பாளர்களின் சிறந்த முதனூல் பரிசை வென்றது (1993-4). இவருடைய கிளர்ந்தெழுந்த நூலாகக் கருதுவது, இவரின் மூன்றாம் கதை 1996 இல் எழுதிய தொடக்கவூழியும் பிற காலங்களும் என்பதாகும். இது 2010-இல் ஆங்கிலத்தில் Primeval and Other Times என்று வெளியிடப்பட்டது.
வாழ்க்கைப் பின்புலம்
தோக்கர்சுக்கு போலந்தில் சிலோன கோரா அருகே உள்ள சுலேச்சோவ் என்னும் ஊரில் 1962 இல் பிறந்தார். தன் இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கும் முன் வார்சா பல்கலைக்கழகத்தில்உளத்தியலாளராகப் பயிற்சி பெற்றார். தான் படிக்கும் காலத்தில் சரியான பழக்க வழக்கங்களைக் கற்றிராத பதின்ம அகவையாளர்களுக்கான புகலிடத்தில் இலவச உதவியாளராக இருந்து உதவியுள்ளார்.[8] தான் 1985 இல் பட்டம் பெற்ற பின்னர் முதலில் உவுரோக்கிளாவ் என்னும் ஊருக்கும் பின்னர் வல்பிருசிச்சு என்னும் ஊருக்கும் சென்று உளவியல் நோய் தீர்ப்பவராகப் பணியாற்றினார். இவர் தன்னை காரல் யுங்கு என்னும் புகழ்பெற்ற உளத்தியலாளரின் கருத்துவழி மாணவராகக் கருதினார். தன் இலக்கிய படைப்புகளில் காரல் யுங்கை உள்ளுக்கம் தருபவராகக் கூறுகின்றார். 1998 முதல் கிராயனோவ் என்னும் ஊருக்கு இடம்பெயர்ந்து அங்கே "உரூத்தா" என்னும் பெயரில் ஒரு தனியார் பதிப்பகம் வைத்து நடத்தினார். இவர் "இடதுசாரி" அரசியல் கருத்துகளும் கொள்கைகளும் உடையவர்.[9]
நூல்கள்
இவர் எழுதிய நூல்கள்:
1989: Miasta w lustrach, Kłodzko: Okolice. ("கண்ணாடி நிழலில் நகரங்கள்")
1993: Podróż ludzi księgi. Warszawa: Przedświt. ("நூல் மக்களின் செலவு (பயணம்)")
1995: E. E. Warszawa: PIW.
1996: Prawiek i inne czasy. Warszawa: W.A.B. ("தொடக்கவூழியும் மற்ற காலங்களும்")
1997: Szafa. Lublin: UMCS. ("ஆடையகம்")
1998: Dom dzienny, dom nocny. Wałbrzych: Ruta. (பகலின் வீடு, இரவின் வீடு)