நீலகிரி காட்டுப் புறா (Nilgiri Wood Pigeon) என்பது மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் ஒரு பெரிய வகை புறாவகும். இந்த புறா அடர் நிறங்களில் காணப்படுகிறது.
பெயர்கள்
தமிழில்: நீலகிரி காட்டுப்புறா
ஆங்கிலப் பெயர்: Nilgiri wood Pigeon
விலங்கியல் பெயர்: கொலம்பா எல்பின்சுடோனி (Columba elphinstonii)[3]
உடலமைப்பு
நீலகிரி காட்டுப்புறாவின் உடல் நீளம் 42 செ.மீ. வரை இருக்கும். சிவப்பு தோய்ந்த கரும்பழுப்பு நிற உடலுடன், பச்சையும் ஊதாவுமான பளபளப்பு மிதமான தோற்றம் தரும். கழுத்தில் கருப்பும் வெள்ளையுமான சதுரங்கப்பலகை ஒத்த அமைப்பு உண்டு. இளஞ்சிவப்புத் தோய்ந்த சாம்பல் நிற மார்பைக் கொண்டது. நீலகிரி காட்டுபுறாவுடன் மிகவும் குழப்பமடையக்கூடிய மற்றொரு சிற்றினம் மந்திப் புறா ஆகும்.[4] ஆனால் மந்திப்புறாவின் கீழ்பகுதி வெளிறி காணப்படும். அலகும் பாதங்களும் சிவப்பு நிறத்தில் உள்ளன.[5][6]
இந்த சிற்றினம் பரிணாம ரீதியாக இலங்கை மரப்புறா, கொலம்பா தொரிங்டோனி மற்றும் சாம்பல் மரப் புறா, கொலம்பா புல்கிரிகோலிசு ஆகியவற்றுடன் பழைய உலக பேரினத்தில் அடித்தளமாக இருக்கும் ஒரு இனக்கிளையினை உருவாக்குகிறது.[7][8][9] இதனுடைய விலங்கிய பெயர், மவுண்ட்சுடுவர்ட் எல்பின்சுடோனை (1779–1859) நினைவுகூருகின்றது.
நீலகிரி காட்டுப்புறா
பரவல்
நீலகிரி காட்டுப்புறா முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மலைகளிலும்நீலகிரி மலைகளிலும் காணப்படுகிறது.[4] முக்கியமாக மலைகளில் காணப்பட்டாலும், சில சமயங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குள் குறைந்த உயர இடங்களிலும் காணப்படுகிறது.[10]பெங்களூருக்கு அருகிலுள்ள பிலிகிரிரங்கன் மலைகள்[11] மற்றும் நந்தி மலைகள் போன்ற தீபகற்பத்தின் உயரமான மலைகளிலும் காணப்படுகின்றன.[12][13] அடிக்கடி இடம் பெயரும் பழக்கம் உடையது. ஒரு வாரத்தில் ஒரு சோலையில் மிகுந்த எண்ணிக்கையில் காணப்பட்ட இது அடுத்த ஒரு வாரம் ஒன்று கூடக் கண்ணில் படாததாக அளவிற்கு இடம் பெயரும் தன்மையுடையது. ஹு ஹு எனத் தொடர்ந்து அடித் தொண்டையில் ஆந்தை போலக் குரலெழுப்பும்.[14][15]
இந்திய தபால் தலையில் நீலகிரி கருப்பு புறா
உணவு
நீலகிரி, கொடைக்கானல் மலைசார்ந்த பகுதிகளில் பசுமை மாறாக் காடுகள், ஏலத் தோட்டங்களில் நிற்கும் நிழல் தரும் மரங்கள் ஆகியவற்றில் பழங்களைத் தேடித்தின்னும்.[16] இவை பெரிய பழங்களை உண்கின்றன. வன மரங்களின் விதைகளை பரப்புவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.[17] அவ்வப்போது தரையில் உள்ள உதிர்ந்த பழங்களைப் பொறுக்கவும் சிறு நத்தைகளைப் பிடித்துத் தின்னவும் தரைக்கு இறங்கும்.[4] இவை கனிம ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடிய அல்லது செரிமானத்திற்கு உதவும் மண்ணை உட்கொள்வதாகப் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[18]
இனப்பெருக்கம்
மார்ச் முதல் சூலை வரை பசும் சோலைகளில் உள்ள மரங்களில் குச்சிகளால் தட்டுப்போலக் கூடமைந்து ஒரே ஒரு முட்டையிடும்.
↑தமிழ்நாட்டுப் பறவைகள். முனைவர் க.ரத்னம். மெய்யப்பன் பதிப்பகம். பக்கம்:62
↑"Foraging ecology of the globally threatened Nilgiri Wood Pigeon (Columba elphinstonii) in the Western Ghats, India". Chinese Birds1 (1): 9–21. 2010. doi:10.5122/cbirds.2009.0017.