கல்பனா (கன்னட நடிகை)

கல்பனா
பிறப்புலலிதா
(1943-07-18)18 சூலை 1943
தெற்கு கன்னட மாவட்டம், கருநாடகம், இந்தியா
இறப்பு12 மே 1979(1979-05-12) (அகவை 35)[சான்று தேவை]
சங்கேஷ்வர், கருநாடகம், இந்தியா
மற்ற பெயர்கள்"மின்னுகு தாரே"
பணிநடிகை
வாழ்க்கைத்
துணை
பி. என். விஸ்வநாத், குடிகேரி பசவராஜ்

கல்பனா (பிறப்பு: லதா, 18 சூலை 1943 - 12 மே 1979) என்பவர் ஒரு கன்னடத் திரைப்பட நடிகை ஆவார். இவர் திரைப்பட வட்டாரத்தில் செல்லமாக மினுகு தாரே ("ஒளிரும் நட்சத்திரம்") என்று அழைக்கப்பட்டார். கன்னடத் திரையுலகில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்பட்டு, ரசிகர்களின் ஆதரவையும் விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றார். 1963 இல் பி. ஆர். பந்துலு இயக்கிய சாக்கு மகளு என்ற திரைப்படத்தில் முன்னணி நடிகையாக திரையுலகில் அறிமுகமானார். 1960களின் முற்பகுதியிலிருந்து 1970களின் பிற்பகுதி வரை நீடித்த தன் திரைப்பட வாழ்வில், கல்பனா வணிக ரீதியாக வெற்றிபெற்ற, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பல படங்களில் தோன்றினார். அவற்றில் பல நடிகர் ராஜ்குமாருடன் இணைந்து நடித்தவையாகும். இவர் ஒரு சில தமிழ், துளு, மலையாள படங்களிலும் பணியாற்றியுள்ளார். [1] இவரது பல வெற்றிப் படங்கள் பெண்களை மையமாகக் கொண்டவை. அவை இவரது நடிப்புக்கு ஏராளமான வாய்ப்புகளைத் தந்தன.

1971 ஆம் ஆண்டு வெளியாகி பல விருதுகளைப் பெற்ற ஷரபஞ்சரா திரைப்படத்தில் இவர் நடித்த "காவேரி" என்ற கதாபாத்திரம் இவரது மிகவும் பிரபலமான வேடங்களில் ஒன்றாகும். அந்தப் படத்தில் இவரது நடிப்புக்காக அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான கருநாடக அரசு திரைப்பட விருதைப் பெற்றார். தனக்கு ஏற்பட்ட மன அதிர்ச்சியை எதிர்த்துப் போராடும் மிகவும் உற்சாகமான மற்றும் சிக்கலான பெண் கதாபாத்திரத்தின் சித்தரிப்பாக அது இருந்தது. கன்னட நடிகைகளில் அதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை அது பெற்றுத் தந்தது. 1970களில், மூத்த திரைப்படப் படைப்பாளி புட்டண்ணா கனகலுடனான இவரது தொடர்பு தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் பேசுபொருளாக மாறியது. அவர்கள் இருவரும் விமர்சன ரீதியாக பாராட்டபட்ட, வெற்றி பெற்ற பல படங்களில் பணியாற்றினர். பின்னர் இருவரும் பிரிந்தனர். கல்பனா தனது திரை வாழ்க்கையில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை - கன்னடத்தில் ஒரு முறையும், சிறந்த நடிகைக்கான கருநாடக அரசு திரைப்பட விருதை மூன்று முறையும் பெற்றார்.

துவக்க கால வாழ்க்கை

லதா 1943 சூலை 18 அன்று கருநாடகத்தின் தட்சிண கன்னடத்தில் கிருஷ்ணமூர்த்தி, ஜனகம்மா இணையருக்குப் பிறந்தார். குடும்பத்தினரால் இவர் கல்பனா என்று அன்பாக அழைக்கப்பட்டார். இவருக்கு திவாகர் என்ற சகோதரர் உண்டு. கல்பனா தனது இளமைப் பருவத்தின் பெரும்பகுதியை நடிகையான அத்தை சீதம்மாவுடன் கழித்தார். சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆர்வம் கொண்டார். அந்த நேரத்தில் இவர் இந்திய பாரம்பரிய நடனத்திலும் பயிற்சி பெற்றார். ஒரு போட்டியில் மாநில அளவில் ஒரு விருதைப் பெற்றார். 1961 ஆம் ஆண்டு கன்னட மொழித் திரைப்படமான கிட்டூர் சென்னம்மாவில் பி. சரோஜா தேவியின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு கல்பனா திரைப்படங்களில் நடிக்க விரும்பினார்.[2]

1960களின் முற்பகுதியில், கல்பனா தன் தாய் மற்றும் சகோதரருடன் உத்தர கன்னடத்திற்கு திரைப்படம் மற்றும் மேடை நிகழ்ச்சிகளின் அடிப்படைகளைக் கற்கச் சென்றார். பின்னர் இவர் தாவண்கரேக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவரது உறவினரான சிவகுமாரை சந்தித்தபோது, நடிகர் நரசிம்மராஜு மூலம் நாடக ஆசிரியரும் திரைப்படத் தயாரிப்பாளருமான பி. ஆர். பந்துலுவின் அறிமுகம் கிடைத்தது. பந்துலு 1963 ஆம் ஆண்டு தனது கன்னட திரைப்படமான சாகு மகலுவில் இவரை நடிக்க வைத்தார்.[1][2]

தொழில்

காதல் நாடகத் திரைப்படமான சாகு மகளு (1963) படத்தில், கல்பனா, ராஜ்குமார் ஏற்ற ரகுராம் என்ற பாத்திரத்தின் வளர்ப்பு சகோதரியான உமா என்ற பாத்திரத்தில் நடித்தார். காவலரேடு குலவந்து (1965), பால நாகம்மா (1966) ஆகிய படங்களில் எதிரி கதாபாத்திரங்களில் தோன்றினார். 1964 ஆம் ஆண்டு வெளியான நாந்தி படத்தில், ராஜ்குமார் கதாபாத்திரத்தின் முதல் மனைவியாக நடித்தார். பின்னர் இருவரும் மொத்தம் 19 கன்னட படங்களில் ஒன்றாக நடித்தனர்.[3] பந்துலு பின்னர் இவரை வைத்து சின்னதா கோம்பே (1964) என்ற படத்தை உருவாக்கினார். 1960களின் நடுப்பகுதியில் கன்னடப் படங்களில் வாய்ப்புகள் குறைந்து வந்ததால், கல்பனா ஒரு சில தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் தோன்றினார்.[2]

இருப்பினும், 1967 ஆம் ஆண்டு வெளியான புட்டண்ணா கனகல் இயக்கிய பெள்ளி மோடா படம்தான் இவரை முன்னணி நடிகையாக்கியது. இந்தப் படத்தில் இவரது நடிப்பு புகழைப் பெற்றுத்தந்தது. விரைவில் இவர் 1960களின் நடிகைகளில் உச்சத்திற்குச் சென்றார். 1960களின் பிற்பகுதியிலும் 1970களிலும் கன்னடத் திரையுலகில் ஆதிக்கம் செலுத்திய இவர், ஷரபஞ்சரா, கெஜ்ஜே பூஜே, பெள்ளி மோடா, எரடு கனசு, கப்பு பிலுபு, பயலு தாரி , பங்காத ஹூவு போன்ற திரைப்படங்களில் நடித்த இவரது சில சிறந்த பாத்திரங்களுக்காக விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டார். தனது காலத்தின் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடனும் பணியாற்றினார். இவருடன் அடிக்கடி நடித்தவர்களில் ராஜ்குமார், கங்காதர், உதய குமார் ஆகியோர் அடங்குவர். படங்களில் இவரது பாத்திரங்களின் பாடல்களுக்குப் பி. சுசீலாவும் எஸ். ஜானகியும் பின்னனணிப் பாடகர்களாக இருந்தனர். ஜெயந்தி, பாரதி, சந்திரகலா போன்ற தனது சமகாலத்திய நடிகைகளுக்கு இவர் கடுமையான போட்டியைக் கொடுத்தார்.

துவக்கத்தில் இவர் பிரபல இயக்குநர் கனகலின் மிகவும் விரும்பதக்க நடிகையாக இருந்தார். அவர்களின் கூட்டணி கன்னட திரைப்பட வரலாற்றில் மிகச்சிறந்த திரைப்படங்களில் சிலவற்றை தந்தது. அவர்களின் பல படங்கள் வலுவான, தீவிரமாக கருத்துகளைக் கொண்டிருந்தன, அவை திரைப்பட வரலாற்றில் பொக்கிசமாகப் பார்க்கப்பட்டன. கனகல் கல்பனாவை பெருமளவில் வளர்த்தார். ஊடகங்கள் அவர்களுக்குள் காதல் இருந்ததாக கிசுகிசுத்தாலும், அவர்களின் உறவு குரு-சிஷ்ய உறவுதான் என்று தொழில்துறையினர் ஒருமனதாக நம்புகின்றனர். நாகரஹாவு படத்தில் கனகல் இவருக்கு முக்கியமான ஒரு வேடத்தை வழங்க மறுத்ததால் அவர்கள் பிரிந்தனர். கனகல் ஆர்த்தியைத் திருமணம் செய்து கொண்டார், கல்பனா பின்னர் சில சராசரி படங்களில் நடித்தார். [1] தனது வாழ்க்கையை மீண்டும் மேலே கொண்டுவர இவர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ராஜ்குமார் ( பிடுகதே, கந்தத குடி, தாரி தப்பித மகா , எரடு கனசு ) மற்றும் அனந்த் நாக் ( பயலு தாரி ) ஆகியோருடன் இவர் நடித்த பிற்காலத் திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும், அவை இவரது தொழில் வாழ்க்கையை தூக்கி நிறுத்தத் தவறிவிட்டன. 1977 ஆம் ஆண்டு வாக்கில் கல்பனாவுக்கு எந்தப் படவாய்ப்புகளும் இல்லாத நிலை ஏற்பட்டது. பின்னர் இவர் உத்தர கருநாடகத்தில் நாடகங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினார். முக்கியமாக குடிகேரி பசவராஜின் நாடக மன்றத்தில் பணியாற்றினார். அதிகரித்து வந்த கடன்களாலும், குறைந்து வரும் திரைப்பட வாய்ப்புகளாலும், மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார்.

மதராஸ் டு பாண்டிச்சேரி மற்றும் சாது மிரண்டால் போன்ற சில தமிழ் படங்களிலும் இவர் நடித்திருந்தார். பின்னர் அவை இந்தியில் பாம்பே டு கோவா மற்றும் சாது அவுர் ஷைத்தான் என மறுஆக்கம் செய்யப்பட்டன. விசு குமார் இயக்கிய துளு படமான கோடி சன்னய்யாவிலும், ஸ்கூல் மாஸ்டர் போன்ற சில மலையாள படங்களிலும் நடித்தார். இவர் 35 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார், அதில் 15 ஆண்டுகள் கன்னடத் திரைத் துறையில் கழித்தார். பெள்ளி மோடா, ஹன்னெலே சிகுரிதாகா, ஷரபஞ்சாரா ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகைக்கான கருநாடக அரசு திரைப்பட விருதை மூன்று முறைப் பெற்றார். இவரது திரைப்பட வாழ்க்கையில், எண்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவற்றில் பெரும்பாலானவை கன்னடப் படங்களாகும்.[1]

மரபு

"மினுகு தாரே" (மின்னும் நட்சத்திரம்) என்ற பட்டத்தைப் பெற்ற நடிகை கல்பனா, கன்னட திரைப்பட ஆர்வலர்கள் மீது செலுத்திய செல்வாக்கு, அவரது மறைவுக்குப் பிறகும் முழுமையாக மறைந்துவிடவில்லை. சிக்கலான மற்றும் சோகமான பாத்திரங்களில் நடிப்பதற்காக அறியப்பட்ட இவர், மருமமான சூழ்நிலையில் இறந்தார். இவர் 1967 முதல் 1972 வரை கன்னடத் திரையுலகத்தை ஆண்டார்.

மைசூருவைச் சேர்ந்த ஆசிரியரான வி. ஸ்ரீதரா, 79 படங்களில் இவரது வாழ்க்கையையும் பணியையும் விவரிக்கும் 1,114 பக்க நூல் தொகுதியான "ராஜத ரங்கத துருவதரே" என்னும் நூலை வெளியிட்டுள்ளார். அதில் இவர் நடித்த கதாபாத்திரங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் பல்வேறு இயக்குநர்கள், சக கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்றோரின் கருத்துக்கள் உள்ளன. அவர் 21 வயதில் புத்தகம் எழுதும் பணியைத் தொடங்கி, 27 வயதை எட்டும்போது அதை முடித்தார். "இவ்வளவு காலம் இதில் ஈடுபட்ட பிறகும், கல்பனாவின் ஆளுமையை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை, ஏனெனில் அவர் ஒரு சிக்கலான பெண்" என்று அவர் கூறுகிறார்.[சான்று தேவை] இந்தப் புத்தகம் கருநாடக சலனசித்ரா அகாதமி ஏற்பாடு செய்த விழாவில் பெங்களூரில் வெளியிடப்பட்டது.[4]

நாகரிகப்போக்கின் அடையாளம்

கல்பனா தனது காலத்தின் ஒரு நாகரிகப்போக்கின் அடையாளமாக (ஃபேஷன் ஐகான்) இருந்தார். இவரது நேர்த்தி, ரசனை, உடை அலங்கார நுட்பம் ஆகியவற்றை அக்காலத்திய மற்ற பெண் நட்சத்திரங்களால் ஈடுசெய்ய முடியவில்லை. மெகா ஸ்லீவ் ரவிக்கைகள், பிரில் ரவிக்கைகள் கருநாடக பாணிக்கு இவர் அளித்த பங்களிப்பாகும். அவரது சில நாகரீகப்போக்கு கூற்றுகளில் விரிவான சிகை அலங்காரங்கள், விரல்களில் பெரிய மோதிரங்கள், ஆடம்பர சரிகை புடவைகள், ஷிஃபான் புடவைகள், பல வளையல்கள், நீண்ட நெக்லஸ்கள் போன்றவை அடங்கும்.[1]

இறப்பு

கல்பனா 1979 மே 12 அன்று இறந்தார். உடல்நலப் பிரச்சினைகள், மோசமான நிதி நிலைமை, காதல் தோல்வி போன்ற பல காரணங்கள் தற்கொலைக்கான காரணங்களில் கூறப்பட்டன. இருப்பினும் எதுவும் நிறுவப்படவில்லை. பிணக் கூறாய்வு அறிக்கைகளின்படி, கல்பனா 56 தூக்க மாத்திரைகளை உட்கொண்டிருந்தார். கருநாடகத்தின் பெலகாவியில் உள்ள சங்கேஷ்வர் அருகே உள்ள கோதூரில் உள்ள ஒரு ஆய்வு மாளிகையில் இவர் தனது கடைசி நாட்களைக் கழித்தார்.[சான்று தேவை]

திரைப்படவியல்

விருதுகள்

தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
  • சிறந்த நடிகை – கன்னடம் – யாவ ஜன்மத மைத்ரி (1972)
கருநாடக அரசு திரைப்பட விருதுகள்
  • சிறந்த நடிகை - பெள்ளி மோடா (1967)
  • சிறந்த நடிகை - ஹன்னெலே சிகுரிடாகா (1968)
  • சிறந்த நடிகை - ஷரபஞ்சாரா (1971)

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Archived copy". Archived from the original on 17 May 2014. Retrieved 20 February 2012.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. 2.0 2.1 2.2 ಶರತ್‌ಲತ ಎಂಬ ತುಳುನಾಡ ಹುಡುಗಿ "ಮಿನುಗುತಾರೆ ಕಲ್ಪನಾ" ಆದ ಕಥೆ..! | Cinema Swarasyagalu Part 27.Total Kannada.
  3. ರಾಜ್‌ಕುಮಾರ್-ಕಲ್ಪನಾ ಕೆಮಿಸ್ಟ್ರಿ | Naadu Kanda Rajkumar Ep 44 | Hariharapura Manjunath | Total Kannada.Total Kannada.
  4. "'Abhinetri' to finally hit screens today - the Hindu". 30 January 2015 இம் மூலத்தில் இருந்து 12 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201012033217/https://www.thehindu.com/news/cities/bangalore/abhinetri-to-finally-hit-screens-today/article6838074.ece. 

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya