சரோஜாதேவி
பை. சரோஜாதேவி (7 சனவரி 1938 - 14 சூலை 2025) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கருநாடகத்தைச் சேர்ந்த சரோஜாதேவி, ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உள்ளார். 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைப்படத்துறையினரால் “கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய சரசுவதி” போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். பல திரைப்பட விருதுகளையும், இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார். குடும்ப வாழ்க்கைசரோஜாதேவியின் இயற்பெயர் இராதாதேவி. பெங்களூரில் பிறந்தார். இவருடைய தந்தை பைரப்பா காவல் துறையில் பணிபுரிந்தார். தாயார் ருத்ரம்மா. சரோஜாதேவி இவர்களின் நான்காவது மகளாகப் பிறந்தார். இவருக்கு சரஸ்வதிதேவி, பாமாதேவி, சீதாதேவி என்று மூன்று அக்காக்களும் வசந்தாதேவி என்கிற ஒரு தங்கையும் உள்ளனர். சரோஜா தேவி 1967 மார்ச் 1 அன்று பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியலாளர், ஸ்ரீ ஹர்ஷாவுடன் திருமண வாழ்க்கையை மேற்கொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை 1986-இல் கணவர் இறக்கும் வரை நீடித்தது. இவர்களுக்கு கௌதமராமச்சந்திரன், இந்திரா ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்களுடன் தனது அக்கா சீதாதேவியின் மகளான புவனேஸ்வரி என்பவரையும் தத்தெடுத்து வளா்த்தார். புவனேஸ்வரி இளம் வயதில் இறக்கவே, அவரது நினைவாக புவனேஸ்வரி விருது என்கிற பெயரில் இலக்கியத்திற்கான விருது ஒன்றினை நிறுவி வழங்கிவந்தார். திரையுலக வாழ்க்கைசரோஜாதேவியின் தந்தை பைரப்பா இவரை நடனம் கற்றுக் கொள்ளவும், நடிப்பை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்ளவும் ஊக்குவித்தார். சரோஜாதேவி இளம் வயதில் இருந்தே, தனது தந்தையுடன் அடிக்கடி திரைப்படக் கலையகங்களுக்கு வந்திருந்தார். இராதாதேவி என்ற பெயரை திரை உலகிற்காக சரோஜாதேவி என்று மாற்றி கொண்டு ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப்படத்தில் (1955) கதாநாயகியாக அறிமுகமானார். முதற் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப் படத்திற்குத் தேசிய விருதும் கிடைத்தது. கன்னடப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிப் புகழ்பெற்ற சரோஜாதேவிக்கு, தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் (1958) பெரும் புகழைத் தேடித்தந்தது. இதன்பின் ஸ்ரீதரின் கல்யாணப் பரிசு (1959) படத்தில் நடித்து நட்சத்திர நிலையை எட்டினார். சரோஜாதேவி எம்.ஜி.ஆர் உடன் 26 படங்களிலும் சிவாஜி கணேசன் உடன் 22 படங்களிலும் நடித்துள்ளார். ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ரவிச்சந்திரன் ஆகிய பிரபல நடிகர்கள் உடனும் நடித்துள்ளார். 1965-க்குப் பிறகு தமிழ் திரையுலகில் கே. ஆர். விஜயா, ஜெயலலிதா வருகையை அடுத்து, இவருக்கான திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன. திருமணத்திற்குப் பிறகு கணவரின் அனுமதியுடன் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இந்தி, தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்தார். பெண் என்றால் பெண் இவரது 100-ஆவது திரைப்படம் ஆகும். ஜெய்சங்கர் உடன் கே. சங்கர் இயக்கத்தில் சாட்டையடி என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்நேரத்தில் சரோஜா தேவிக்கு குழந்தை பிறந்து விட்டதால் ஜெய்சங்கர்–சரோஜா தேவி நடிப்பில் சாட்டையடி திரைப்படம் வெளிவராமல் போனது. இறப்புசரோஜாதேவி மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2025 சூலை 14 இல், தனது 87-ஆவது அகவையில் காலமானார்.[1] திரைப்படங்கள்தமிழ்
விருதுகள்தேசிய விருதுகள்
பிற விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia