கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள், 2024
18 சூன் 2024இல், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தை குடித்ததால் 67 பேர் இறந்தனர்,[1]100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.[2] தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தால் அதிக உயிர்களை பலி வாங்கியது, இந்த கள்ளக்குறிச்சி சாவாகும். இதற்கு முன் கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 2001ஆம் ஆண்டு 53 பேர் பலியானது அதிகபட்ச பாதிப்பாக இருந்தது. அதே ஆண்டு செங்குன்றம் அருகே கோட்டூர் உள்ளிட்ட இடங்களில் 30-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து இறந்தனர்.[3] காரணம்கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று துவக்கத்தில் மாவட்ட ஆட்சியர் கூறினார். அதுவே உயிரிழப்பு அதிகமானதற்குக் காரணமாக கூறப்படுகிறது.[4] [5] [6] கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சுரேசு வயிறு வலிக்கிறது என்று துடித்தவரை தூக்கிக்கொண்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கியும், இவர் இறந்துவிட்டார். இவரே கள்ளச்சாராயம் குடித்ததால் முதலில் இறந்தவர்.[7] கருணாபுரத்தை சேர்ந்த சுரேசு என்பவர் கள்ளச்சாராயம் குடித்து முதலில் உயிரிழந்துள்ளார். பின் சுரேசின் இறுதி சடங்கிற்கு சென்றவர்களும் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். அவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.[8] சூன் 18 இரவு 11 மணிக்கு பிரவீன் என்பவர் விசச்சாராயம் குடித்துள்ளார். நள்ளிரவு 12.30 மணிக்கு அவரது உடல்நலம் பாதிக்கப்படுகிறது. வயிற்றுவலி, கண்பார்வை எரிச்சல் போன்றவை பாதிப்பிற்கு உள்ளானதால் பிரவீனை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், பிரவீன் மது அருந்தி இருப்பதால் சிகிச்சை அளிக்க முடியாது என கூறி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். உடல்நலம் எதனால் பாதிக்கப்பட்டது என்பதை மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்திருந்தால் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களை தடுத்திருக்கலாம் என அக்குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். பிரவீன் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில், சூன் 19 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு பிரவீனின் உறவினர் சுரேசும் விஷச்சாராயம் குடித்துள்ளார்.[9] விமர்சனம்கள்ளச்சாராயம் காரணமாக பெற்றோரை இழந்த மூன்று குழந்தைகளின் கல்வி செலவை அதிமுக அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஏற்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இக்குழந்தைகளுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.[10] 2023 ஆம் ஆண்டு செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச் சாராயம் குடித்து 22 இக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தபோது, 'கள்ளச் சாராயம் விற்பனை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அதனை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்' என்று அப்போதும் நான் சொன்னேன். அதற்கு முதலமைச்சர் தாலின் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி, வழக்கை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையிடம் (CBCID) ஒப்படைத்தார். அந்த வழக்கு இதுவரை என்ன ஆனது என்று தெரியவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி தெரிவித்தார்.[11] கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.[12] கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் நடுவண் புலனாய்வுச் செயலகம் (CBI) விசாரணை கோரி சென்னையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி க. பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நேரில் கலந்துகொண்டு அ.தி.மு.க-வின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விசயகாந்த், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும்" என வலியுறுத்தினார். அ.தி.மு.க-வினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று சீமான் ட்வீட் செய்தார்.[13] தமிழக சட்டமன்றம் கூடி, நடந்து வந்தது. 29 ஆம் தேதி அன்று சட்டசபையில், காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறை தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக பேசியபோது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அரசின் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாசுமாக்) கடைகளில் விற்கப்படும் மதுபானம் குளிர் பானம் போல உள்ளதாகவும் அதில் அதிக போதை இருப்பதில்லை என்பதற்காக சிலர் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள் என்று கூறினார்.[14] கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சூன் 21 எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.[15] கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதை கண்டித்தும், புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணாசிலை அருகில் சூன் 24 அன்று நடந்தது.[16] நிவாரணம்கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000மும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். முழுமையான விசாரணை மேற்கொண்டு, கள்ளச்சாராயத்திற்கான அனைத்து காரணங்களையும் கண்டறிந்து எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாசு தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்தார்.[17] எதிர்ப்புமுதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது பெரும் விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. அரசு கருவூலத்திலிருந்து கோடிக்கணக்கில் நிவாரணம் அறிவிப்பது எந்த வகையில் நியாயம்? என சமூக ஆர்வலர்களும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அரசியல்வாதிகள் பிரேமலதா விசயகாந்த், சீமான்; திரைப்படத்துறையின் பார்த்திபன், கசுத்தூரி ; எழுத்தாளர் பா. ராகவன் ; சட்டப் பஞ்சாயத்து இயக்கம் ; உயர் நீதிமன்ற நீதிபதி சுரேசு குமார் முதலியோரும் இதில் அடக்கம். [18] [19] [20] கைதும் வழக்கும்கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய சாவுகள் குறித்த விசாரணையை, தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புப் புலனாய்வு குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.[21] இவ்வழக்கில் விஷசாராயம் விற்ற கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜன், விஜயா மற்றும் தாமோதரன் மற்றும் விஷசாராயத்தை விநியோகம் செய்த சின்னதுரை, மாதேஷ் மற்றும் ஜோசப் என்ற ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.[22] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia