கோடைக்கால தலைநகரம்கோடைகால தலைநகரம் (Summer capital) என்பது குறிப்பாக வெப்பம் மிகுந்த கோடைக் காலங்களில் பாரம்பரியமாக தலைநகராக பயன்படுத்தப்படும் ஒரு நகரம் ஆகும். கோடைகால தலைநகருக்கு இடம்பெயரும் ஆளும் வர்க்கங்களைக் கொண்ட அரசமைப்பு முறைமைகளின் வரலாற்றுச் சூழல்களில் இந்தச் சொல் பெரும்பாலும் பொருத்தமானதாக இருந்தது. இது நவீன காலங்களில் குறைவாகவே உள்ளது. வளிப் பதன அமைப்புகள் பரவலாக உள்ளதால் கோடைக் கால தலைநகருக்கு அவ்வப்போது இடம்பெயர வேண்டிய நிலையை ஏறக்குறைய இல்லாமல் ஆக்கியுள்ளது. உலகம் முழுவதும் கோடைக்கால தலைநகரங்கள்சீனா13 ஆம் நூற்றாண்டில் குப்லாய் கானின் ஆட்சியின் போது ஷங்டு ஒரு "மேல் தலைநகரம்" ஆக இருந்தது. [1] சிங் அரசமரபால், செங்டேயில் உள்ள செங்டே மலை விடுதி கோடை மாதங்களில் பேரரசர்கள் தங்கள் உத்தியோகபூர்வ செயல்பாட்டை மேற்கொள்ள அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. சீனக் குடியரசு காலத்தில், சீன தேசியவாதக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கோடையில் குலிங்கில், ஜியுஜியாங்கில் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்காக அடிக்கடி கூட்டங்களை நடத்தினர். வெளிநாட்டு வணிகர்கள் மற்றும் சமயப்பரப்பு குழுவினர் சீனக் குடியரசு அரசாங்கத்தின் ஆட்சியின் போது கோடைக் காலத்தை குலிங்கில் கழிக்க விரும்பினர். சீன மக்கள் குடியரசின் காலத்தில், சீனப் பொதுவுடமைக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கோடையில் பெய்டெய்ஹே மாவட்டத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்காக அடிக்கடி கூட்டங்களை நடத்தினர். இந்திய துணைக்கண்டம்முகலாயப் பேரரசர் பாபரின் ஆட்சியின் போது, முகலாயப் பேரரசின் வடமேற்கில் உள்ள காபுல் நகரம் ஆக்ரா மற்றும் தில்லியுடன் ஒப்பிடும்போது குளிர்ச்சியான வெப்பநிலை காரணமாக கோடைகால தலைநகராக பயன்படுத்தப்பட்டது. பேரரசர் ஔரங்கசீப் காலத்தில் இந்த நடைமுறை முடிவுக்கு வந்தது. [2] பித்தானிய இந்தியாவில் ஆண்டுதோறும் கோடை மாதங்களில் தலைநகரம் சிம்லாவிற்கு மாற்றப்பட்டது. [3] அதிகார இயந்திரத்தைக் கொண்டு செல்வதில் உள்ள சிரமம் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் கோடையில் இத்தகைய இடங்களில் தங்கி இருப்பது குறித்த பொதுமக்களுக்கு ஏற்படும் எதிர்மறையான கருத்துக்கள் காரணமாக இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தின் கோடைகால தலைநகரம் சிறிநகர் ஆகும். அதேபோல நாக்பூர் இந்திய மாநிலமான மகாராட்டிரத்தின் குளிர்கால தலைநகரம் ஆகும். ஊட்டியில் உள்ள அரன்மோர் அரண்மனை, சென்னை இராசதானியின் கோடைகால தலைநகராக செயல்பட்டது; இது ஒரு பிரபலமான கோடைகால ஓய்வு விடுதியாக காலனித்துவ காலத்தில் பிரித்தானிய அதிகாரிகளால் பயன்படுத்தபட்டது.[4] இந்திய விடுதலைக்குப் பிறகும் சென்னை மாநிலத்தின் கோடைக்கால தலைநகராக ஊட்டி செயல்பட்டது. சென்னை சட்டமன்றத்தின் கோடைக்கால கூட்டத் தொடர்கள் ஊட்டியில் நடத்தப்பட்டன. இதை விமர்சித்து திமுக போன்ற எதிர்கட்சிகள் கும்பி எரியுது.. குடல் கருகுது.. குளு குளு ஊட்டி ஒரு கேடா? என்று முழங்கின. இதன் தொடர்ச்சியாக காலபோக்கில் ஊட்டி கோடைக்கால தலைநகர் என்ற அந்தஸ்தை இழந்தது. என்றாலும் தமிழ்நாடு ஆளுநருக்கு ஊட்டியில் ஆளுநர் மாளிகை தற்போதும் உள்ளது. பிலிப்பைன்ஸ்20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது லுசோனின் வடக்கு மலைகளில் உள்ள பாகியோ மலைப்பகுதி பிலிப்பைன்சின் கோடைகால தலைநகராக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் குளிர்ந்த காலநிலை, நடைமுறை தலைநகரான மணிலாவின் வெப்பமான, ஈரப்பதமான காலநிலையிலிருந்து விரும்பத்தக்க மாற்றாக இருந்தது. தற்போதைய இறையாண்மையுள்ள அரசாங்கம் நீண்ட காலமாக இங்கு மொத்தமாக இடம்பெயர்வதை நிறுத்திவிட்டாலும், இந்த நகரத்தில் இன்னும் பிலிப்பைன்சு சனாதிபதியின் அதிகாரப்பூர்வ கோடைகால இல்லம் செயல்படுகிறது. [5] மேலும் பிலிப்பைன்சின் உச்ச நீதிமன்றம் அதன் "கோடைகால அமர்வுகளை" இன்னும் இந்த நகரத்தில் பராமரிக்கிறது. குறிப்பாக கிறிஸ்துமஸ் காலத்தில், மற்ற தீவுக்கூட்டங்களை விட வெப்பநிலை கணிசமாகக் குறைவாக இருப்பதால், இது ஒரு பிரபலமான விடுமுறைக்கால ஓய்வு இடமாக உள்ளது. உருசியாகிரிமியாவின் பாரம்பரியமான பிரபலமான ஓய்வு விடுதிகளை உருசியா இழந்ததைத் தொடர்ந்து (உருசிய சோவியத் கூட்டமைப்பு சோசலிச குடியரசிலிருந்து, உக்ரேனிய சோவியத் சோசலிச குடியரசுக்கு 1954 இல் நிகித்தா குருசேவால் மாற்றப்பட்டது ), சோச்சி நாட்டின் அதிகாரப்பூர்வமற்ற கோடைகால தலைநகராக உருவெடுத்தது. [6] கூடுதலாக, சோச்சி பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான இடமாகவும் செயல்பட்டது. குறிப்பாக சியர்சியன், பிரிவினைவாத அப்காசியன் மற்றும் பிரிவினைவாத தெற்கு ஒசேத்தியன் ஆளும் பிரிவினருக்கு இடையேயான ஒப்பந்தங்கள் இங்கு மேற்கொள்ளப்பட்டன. சவூதி அரேபியாசவூதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ தலைநகரான ரியாத்தை விட கோடை மாதங்களில் மக்காவிற்கு அருகிலுள்ள மலை நகரமான தைஃப் நகர் மிகவும் குளிராக இருக்கும். இதனால் சவுதி அரச குடும்பம் வரலாற்று ரீதியாக இங்கு இடம் பெயர்ந்துள்ளது . எசுபானியாஎசுப்பானியாவின் குளிர்ச்சியான, வடக்குக் கடலோரப் பகுதியில் பிரெஞ்சு எல்லைக்கு அருகில் சான் செபாஸ்டியன் அமைந்திருப்பதால், அது மத்ரித்துக்கு மாற்றாக கோடைகால தலைநகராக அமைந்தது. ஆஸ்திரியாவின் அரசரின் மனைவியும் அரச பிரதிநிதியுமான மரியா கிறிஸ்டினா 1887 முதல் இங்கு விடுமுறை காலத்தில் வந்தார். பின்னர் அரசவையையும் கூட்டினார். [7] சர்வாதிகாரி ஃபிரான்சிஸ்கோ ஃபிராங்கோ 1941 மற்றும் 1975 க்கு இடைப்பட்ட கோடைகாலத்தை அயெட் அரண்மனையில் கழித்தார். [8] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia