சூஜித் சிர்க்கார்

சூஜித் சிர்க்கார்
விக்கி டோனர் திரைப்பட வெளியீட்டு விழாவில் சர்கார்
பிறப்புஅண். 1966 – 1967
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்சாகித் பகத்சிங் கல்லூரி
பணிஇயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர்
வாழ்க்கைத்
துணை
ஜூமா
பிள்ளைகள்2

சூஜித் சிர்க்கார் (Shoojit Sircar) (பிறப்பு அண். 1966 – 1967 [1]) ஒரு இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குநரும் ஆவார். இவர் பாலிவுட் படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார். ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டு மூன்று முறை தேசிய திரைப்பட விருதுகளையும், இரண்டு முறை பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

திரைப்படங்கள்

சிர்க்கார் யஹான் (2005) என்ற போர் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதிக வசூல் செய்த விக்கி டோனர் (2012) என்ற காதல் நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் விமர்சன ரீதியான வெற்றியைப் பெற்றார். இப்படத்திற்காக இவர் முழுமையான பொழுதுபோக்கை வழங்கும் சிறந்த பிரபலமான படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். அதைத் தொடர்ந்து ஒரு வருடம் கழித்து மதராஸ் கஃபே (2013) என்ற அரசியல் அதிரடித் திரைப்படத்தை இயக்கினார்.

இவரது அடுத்த படமான பிக்கு (2015) வெளியானதும் பரவலான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் ஒரு பெரிய வெற்றியானது. இப்படம் இவருக்கு சிறந்த படத்திற்கான (விமர்சகர்கள்) பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது. பின்னர் தனது சொந்த தயாரிப்பான சட்டம் தொடர்பான பிங்க் (2016) என்ற அதிரடித் திரைப்படம் பிற சமூகப் பிரச்சினைகள் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. பின்னர் அக்டோபர் (2018) என்ற திரைப்படத்தையும், அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான குலாபோ சிதாபோ (2020) என்ற நகைச்சுவைத் திரைப்படத்தையும் இயக்கி தயாரித்தார். 2021 ஆம் ஆண்டில் சர்தார் உதாம் என்ற வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் மேலும் முக்கியத்துவம் பெற்றார். இது பரவலான விமர்சனங்களைப் பெற்றது. இவர், ரைசிங் சன் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனரும் ஆவார்.

இளமை வாழ்க்கை

சர்கார் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள கொல்கத்தாவில் ஒரு வங்காளக் குடும்பத்தில் பிறந்தார். 1985 ஆம் ஆண்டு பராக்பூர் விமானப்படையின் கேந்திரிய வித்யாலயாவில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். மேலும் தில்லி பல்கலைக்கழகத்தின் சாகித் பகத் சிங் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார்.[2] சர்கார் 2004 ஆம் ஆண்டு தனது பெற்றோர் இருவரையும் இழந்தார்; இவரது தந்தை புற்றுநோயாலும், தாயார் மூளை பக்கவாதத்தாலும் இறந்தனர்.

தனது ஆரம்ப ஆண்டுகளில், டெல்லியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் கணக்காளராகவும், விளம்பரத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தில்லியில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பின்னர் திரைப்படங்களின் மீது தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அமெரிக்க ஆவணப்படமான டியர் அமெரிக்கா: லெட்டர்ஸ் ஹோம் ஃப்ரம் வியட்நாம் மற்றும் சத்யஜித் ராயின் பதேர் பாஞ்சாலி ஆகிய இரண்டு படங்களும் தனது திரைவாழ்க்கையைத் தொடங்கத் தூண்டுதலாக அமைந்ததாக குறிப்பிடுகிறார். 1990 களின் முற்பகுதியில், சர்கார் ஆக்ட் ஒன் என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். அதில் மனோஜ் பாஜ்பாய், பியூஷ் மிஸ்ரா மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் குழு உறுப்பினர்களாக இருந்தனர்.

குடும்பம்

சர்கார், ஜூமா என்பவரை மணந்தார். இவர்களுக்கு கோய்னா மற்றும் அனன்யா என்ற இரண்டு மகள்கள் பிறந்தனர்.[3] சர்கார் ஒரு கால்பந்து ஆர்வலரும் ஆவார். ஆல் ஸ்டார்ஸ் என்ற கால்பந்து சங்கத்தின் ஒரு உறுப்பினராக இருக்கிறார். இது தொண்டு பணிகளுக்காக பணம் திரட்டும் ஒரு பிரபல கால்பந்து சங்கமாகும்.[3]

மேற்கோள்கள்

  1. Bhutia, Lhendup G (9 May 2018). "Shoojit Sircar: The Outlier". openthemagazine.com. Archived from the original on 18 April 2022. Retrieved 25 March 2022. His earliest memories are as a four-year- old at an Air Force station in the border town of Hasimara, West Bengal, watching his father paint the windowpanes of his official quarters black during the 1971 war, lest enemy bombers spot the light in the house.
  2. Sharma, Riya (31 July 2017). "Shoojit Sircar: 'I chose Shaheed Bhagat Singh college over KMC as my best friend took admission here'". The Times of India (in ஆங்கிலம்). Archived from the original on 15 January 2020. Retrieved 23 May 2020.
  3. 3.0 3.1 Ghosal, Sharmistha (24 December 2021). "Cover Story: Filmmaker Shoojit Sircar believes that art can never happen in a mad rush". www.indulgexpress.com. Archived from the original on 25 March 2022. Retrieved 25 March 2022.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Shoojit Sircar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya