மகளிர் டென்னிசு சங்கத்தின் தரவரிசைப் பட்டியலில் ஒற்றையர் ஆட்டத்தில் முதல் நிலையை ஏழு முறை எட்டியவர். முதன்முதலாக முதல் நிலையை சூலை 8, 2002 இல் பெற்றார்; ஏழாவது முறையாக சனவரி 30, 2017இல் எட்டினார்.[2]
செரீனா கிராண்ட் சிலாம்களில் 39 பட்டங்களைப் பெற்றது சாதனையாகும். 23 ஒற்றையர் பட்டங்கள், 14 இரட்டையர் பட்டங்கள், இரண்டு கலப்பினப் பட்டங்கள். நான்கு கிராண்ட் சிலாம் பட்டங்களையும் ஒரே நேரத்தில் வென்ற ஐந்தாவது பெண் டென்னிசு ஆட்டக்காரராக திகழ்கிறார். அண்மைக்கால விளையாட்டாளர்களில் இவரே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருடைய அக்கா வீனசு வில்லியம்சுடன் இரட்டையர் ஆட்டத்தில் ஒரேநேரத்தில் நான்கு கிராண்ட் சிலாம் பட்டங்களைப் பெற்ற சாதனையையும் நிகழ்த்தி உள்ளார். இவர் ஒற்றையர் ஆட்டங்களில் 23 கிராண்ட் சிலாம் வெற்றிகளைப் பெற்றது இவரை ஆறாம் இடத்தில் வைத்துள்ளது.[3]செப்டம்பர் 10, 2012 இல் மகளிர் டென்னிசு சங்கம் கூட்டமைப்பின்படி இவரின் தர வரிசை நான்கு ஆகும் [4], இரட்டையரில் இவரின் தரவரிசை 35 ஆகும்.[5]
செரீனா வில்லியம்ஸ் இரட்டையர் ஆட்டங்களில் மூன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.[6] ஒற்றையர் ஆட்டத்தில் ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் [7]. மற்றெந்த பெண் விளையாட்டாளரை விட மிகக் கூடுதலான பணிவாழ்வு பரிசுத்தொகை வென்றுள்ளார்.[8] தமது சகோதரியுடன் 1998ஆம் ஆண்டு முதல் 23 முறை நேரடியாக விளையாடி 13 முறை வென்றுள்ளார். இவற்றில் எட்டு கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டிகளில் ஆறில் வென்றுள்ளார். ஆறு ஆஸ்திரேலிய ஓப்பன் ஒற்றையர் பட்டங்களைப் பெற்ற ஒரே விளையாட்டாளராக, ஆண்/பெண் இருவரிலும், உள்ளார்.
ஆரம்ப வாழ்க்கை
பிறப்பு
செரீனா வில்லியம்ஸ் செப்டம்பர் 26, 1981 இல் சகினா, மிச்சிகனில் பிறந்தார். இவரின் தந்தை ரிச்சர்டு வில்லியம்ஸ், தாய் ஆரசின் பிரைஸ் ஆவர். இவர்களுக்கு மொத்தம் ஐந்து பெண்குழந்தைகள் பிறந்தனர். இதில் நான்காவது பெண் குழந்தையாக செரீனா வில்லியம்ஸ் பிறந்தார். இவர் சிறுவயதாக இருக்கும் போதே காம்ப்டன், கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தனர். தனது மூன்றாம் வயது முதலாக வில்லியம்ஸ் டென்னிசு விளையாடி வருகிறார்.[9] இவரின் தந்தை ரிச்சர்டு , செரீனா மற்றும் வீனஸ் ஆகிய இருவருக்கும் வீட்டிலிருந்தே கல்வி பயில ஏற்பாடு செய்திருந்தார்.[10]
பயிற்சி
செரீனாவிற்கு ஒன்பது வயதாக இருக்கும் போது இவர்களின் குடும்பம் புளோரிடாவிலுள்ள கிழக்கு பாம் பீச் மாகாணத்திற்கு குடியேறினர்.[9] அங்குள்ள ரிக்கி மக்சியின் டென்னிசு அகாதமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். மக்சி இவருக்கு சிறப்புப் பயிற்சி வழங்கினார். செரீனாவின் தந்தையின் கருத்தில் மசிக்கு உடன்பாடில்லை. அவர்களை சிறு பிள்ளைகளாக பார்ப்பதை விட்டு பெண்களாக அவர்களின் விருப்பத்தின் படி விளையாட அனுமதிக்க வேண்டும் என்று மக்சி விரும்பினார்.[11] இனப்பாகுபாடு காரணமாக ரிச்சர்டு , செரீனாவை அவரின் பத்தாவது வயது முதல் தேசிய டென்னிசு வாகையாளர் போட்டிகளில் விளையாட அனுமதிக்கவில்லை. அவர்களை படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். ஒரு சமயம் ஒரு வெள்ளை நிறக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் , வில்லியம் சகோதரிகளின் செயல்பாடு போட்டிகளின் போது தரக்குறைவாக உள்ளதாகக் கூறியதை அறிந்தார்.[12] இந்த நேரத்தில் அமெரிக்க டென்னிசு சங்கத்தின் சிறந்த பத்து வீரர்களில் முதலாவது இடத்தில் இருந்தார்.[13]1995 ஆம் ஆண்டில் மக்சியின் அகாதமியில் இருந்து ரிச்சர்டு தனது இரு மகள்களையும் விலகச் செய்தார். அதன் பின் அவர்கள் இருவருக்கும் தனது வீட்டில் வைத்தே பயிற்சி பெற வழி செய்தார்.
தொழில் வாழ்க்கை
செரீனா வில்லியம்சினுடைய பெற்றோர் , இவரின் 16 ஆவது வயதில் தான் தொழில்முறை டென்னிசு பந்தய விளையாட்டுக்களில் பங்குபெற வேண்டும் என விரும்பினர். ஆனால் தனது 14 வயதில் முன்புரைக்க முடியாத காரணி வாய்ப்பைப் பயன்படுத்தி கலிபோர்னியா, ஓக்லாந்தில் நடைபெற்ற பேங்க் ஆஃப் தெ நெஸ்ட் கிளாசிக் எனும் பந்தய விளையாட்டில் விளையாடத் தீர்மானித்தார். ஆனால் மகளிர் டென்னிசு சங்கம் வயதுக் குறைவு காரணமாக இவரை விளையாட அனுமதிக்கவில்லை.[14]
1999- 2001
1999 ஆண்டு நடைபெற்ற அவுத்திரேலிய ஓப்பன் போட்டியில் மூன்றாவது சுற்றில் தோல்வி அடைந்தார். அதற்கு அடுத்த மாதம் பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற தொழில்முறை பந்தயப் போட்டியில் முதல் முறையாக வெற்றி பெற்றார். பின் வீனஸ் வில்லியம்சுடன் இணைந்து மெம்பிசில் நடைபெற்ற ஐ ஜி ஏ சூப்பர் திரிஃப்ட் கிளாசிக் போட்டியில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஒரே வாரத்தில் தொழில்முறைப் போட்டிகளில் வெற்றிபெற்ற சகோதரிகள் எனும் சாதனையைப் படைத்தனர்.[15]
திருமணம்
இவருக்கும் நியூயார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட ரெட்டிட் -ஐ என்ற இணைய நிறுவனத்தில் இணை நிறுவனரான அலெக்சிசு ஒகானியன் என்பவருக்கும் 2016 டிசம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.[16] இவர் 20 வாரங்கள் கருத்தரித்திருப்பதாக ஏப்ரல் 20 அன்று டுவிட்டரில் தெரிவித்தார். ஆனால் இவர் கருத்தரித்திருப்பதாக இவரது அணி அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.[17]