இவர் 1999 செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கி, 2005 ஆகஸ்டு 18-ஆம் தேதி வரை சிங்கப்பூர் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்து வந்தவர். பின்னர் 2005 ஆகஸ்டு 18-ஆம் தேதி மறுபடியும் தேர்வு செய்யப்பட்டார்.
இவரின் அதிபர் பதவிக் காலம் 2011 ஆகஸ்டு 31-ஆம் தேதி முடிவடைந்தது. இவர் சிங்கப்பூரில் நீண்ட காலம் சேவை செய்த அதிபர் எனும் பெருமையையும் பெறுகிறார்.[2]
31 ஜூலை 2016-இல் இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (Singapore General Hospital's Intensive Care Unit) அனுமதிக்கப்பட்டார். 2016 ஆகஸ்டு 22-ஆம் தேதி, அவரின் 92 வயதில் உயிர் துறந்தார்.[3]
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாதன், 1924-ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி சிங்கப்பூரில் பிறந்தார். தந்தையார் பெயர் வி. செல்லப்பன். தாயாரின் பெயர் அபிராமி.
குழந்தைப் பருவத்தில் தன் மூத்த சகோதரர்களுடன் ஜொகூர், மூவார் நகரின் கடல்கரைப் பகுதியில் வாழ்ந்தார்.[4] அவரின் மூன்று மூத்தச் சகோதரர்கள் சிறுவயதிலேயே இறந்து விட்டனர். அவரின் தந்தையார் மலாயா ரப்பர் தோட்டங்களுக்கு சேவை செய்யும் ஒரு வழக்கறிஞர் நிறுவனத்தில் ஓர் எழுத்தராக வேலை செய்து வந்தார்.[5]
குடும்பத்தில் வறுமை
1930-களில் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் மலாயாவின் ரப்பர் விலைச் சரிவுகளின் காரணமாகக் குடும்பத்தில் வறுமை. நாதனின் தந்தையார் கடன் சுமைகளைச் சுமந்து குடும்ப வாழ்க்கையில் போராடினார். இருப்பினும் நாதனுக்கு எட்டு வயதாக இருக்கும் போது அவரின் தந்தையார் தற்கொலை செய்து கொண்டார்.[4]
தாயாருடன் தகராறு
சிங்கப்பூர் திரும்பிய நாதன், தன் ஆரம்பக் கல்வியை ஆங்கிலோ-சீனப் பள்ளியிலும் (Anglo-Chinese School) ரங்கூன் சாலை காலைப் பள்ளியிலும் (Rangoon Road Morning School) பெற்றார்.
விக்டோரியா பள்ளியில் இடைநிலைக் கல்வியைப் பயின்றார். இவர் இரண்டு முறை பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் தாயாருடன் தகராறு செய்து கொண்டு, 16 வயதில் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.[5]
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, வேலை செய்து கொண்டே, இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் வோல்சி கல்வி நிலையத்தில் (Wolsey Hall, Oxford) அஞ்சல் படிப்பின் மூலம் தன் இடைநிலைக் கல்வியை முடித்தார்.
அதோடு அப்போது சிங்கப்பூரில் இருந்த மலாயா பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றார். பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் படிக்கும் போது, பல்கலைக்கழக சோசலிஸ்டு மன்றத்தின் (University Socialist Club) செயலாளராக ஆனார்.[8][9]
1954-ஆம் ஆண்டில் சமூக ஆய்வுகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்று பட்டயம் பெற்றார்.[4]
சிங்கப்பூர் பொதுச் சேவை
ஜூலை 2005-இல் அதிபர் நாதன் மற்றும் அவரின் மனைவி ஊர்மிளா நந்தி.
1955-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பொதுச் சேவையில் சேர்ந்தார். 1962 - 1966 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தேசிய தொழிற்சங்கச் சம்மேளனத்தின் துணைத் தலைவராக இருந்தார். பின்னர் வெளியுறவு அமைச்சகத்திலும்; மற்றும் உள்துறை அமைச்சகத்திலும் பணியாற்றினார்.
1974-இல் லாஜு கடத்தல்(Laju Incident அல்லது Laju Ferry Hijacking) எனும் நிகழ்ச்சி நடந்தபோது, அவர் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகத்தின், பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் (Security and Intelligence Division of the Ministry of Defence) பணிபுரிந்து வந்தார். 1979 முதல் 1982 வரை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் முதன்மை நிரந்தரச் செயலாளராகவும் (First Permanent Secretary of the Foreign Ministry) பணியாற்றினார்.
அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர்
1950-களில், சிங்கப்பூர் புல்லர்டன் கட்டிடத்தில் நாதன் பணிபுரிந்தார். அதை அங்கீகரிக்கும் வகையில், அவரின் அரசு இறுதி ஊர்வலம், இந்தக் கட்டிடத்தின் வழியாகச் சென்றது.
1982-இல் சிங்கப்பூர் பொதுச் சேவையை விட்டு வெளியேறி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் (Straits Times Press) நிர்வாகத் தலைவராகப் பொறுப்பு ஏற்றார். 1988 மற்றும் 1996-க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதராகவும், அமெரிக்காவுக்கான தூதராகவும் பணியாற்றினார். 1999 முதல் 2011 வரை சிங்கப்பூரின் அதிபராக 12 ஆண்டுகள் பதவி வகித்தார்.
1974 ஜனவரி 31-ஆம் தேதி, லாஜு கடத்தல் (Laju Incident) நிகழ்ச்சி நடைபெற்றது. பயங்கரவாத ஜப்பானிய செம்படை(Japanese Red Army); மற்றும் பாலஸ்தீன விடுதலைக்கான முன்னணி (Popular Front for the Liberation of Palestine) படை உறுப்பினர்கள்; சிங்கப்பூர் புலாவ் புகோம் தீவில் (Pulau Bukom) இருந்த சிங்கப்பூர் பெட்ரோலியக் கொள்கலன்கள் மீது வெடிகுண்டுகளை வீசினர்.
சிறப்புச் சேவைப் பதக்கம்
அந்தக் கட்டத்தில் ஜப்பானிய செம்படைக்குப் பிணைக் கைதிகளாக இருக்க முன்வந்த அரசாங்க அதிகாரிகளின் குழுவில் நாதன் அவர்களும் ஒருவராக இருந்தார்.
மேலும் பணயக் கைதிகளை விடுவிக்கவும்; பயங்கரவாதிகளின் பாதுகாப்பான வழியை உறுதிப்படுத்தவும்; நாதன் அவர்கள் குவைத் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார். அந்தப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்து வைத்தார்.[10][11][12]
அவரின் துணிச்சலுக்காக, ஆகஸ்ட் 1974-இல் அவருக்கு பிங்காட் ஜசா கெமிலாங் எனும் சிறப்புச் சேவைப் பதக்கம் (Meritorious Service Medal) வழங்கப்பட்டது.[13]
மூன்றாவது முறையாக அதிபர் பதவி
2011 ஜூலை 1-ஆம் தேதி, மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்கப் போவது இல்லை என்று நாதன் அறிவித்தார். அவர் தன் வயதை ஒரு காரணமாகக் காட்டினார். தன்னுடைய 87-ஆவது வயதில் அதிபர் பதவியின் கனமான பொறுப்புகளச் சுமக்க இயலாது என்று அதிபர் பதவியை மறுத்து விட்டார்.
அதே ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி அவர் அதிபர் பதவியை விட்டு வெளியேறினார். புதிய அதிபராக டோனி டான் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.[14]
தனிப்பட்ட தகவல்
15 டிசம்பர் 1958-இல், ஊர்மிளா நந்தி (Urmila Nandey) (பிறப்பு 1929); என்பவரை அதிபர் நாதன் மணந்தார். அவருக்கு ஒரு மகன்; பெயர் ஒசித் (Osith). மற்றும் ஒரு மகள்; பெயர் ஜோதிகா (Juthika). மூன்று பேரக் குழந்தைகள்.[15][16]
அதிபர் நாதனுக்கு 31 ஜூலை 2016 காலை நேரத்தில் இதயப் பக்கவாதம் ஏற்பட்டது. சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். 22 ஆகஸ்ட் 2016 இரவு 9:48 மணிக்கு, அவரின் 92 வயதில் மருத்துவமனையில் உயிர் துறந்தார்.[17]
நாதன் அவர்கள் சிங்கப்பூருக்கு ஆற்றிய சேவைகளுக்கு வழங்கப்படும் மரியாதையின் அடையாளமாக, 2016 ஆகஸ்டு 23-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு, சிங்கப்பூரின் அனைத்து அரசுக் கட்டிடங்களிலும் சிங்கப்பூர் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் உத்தரவிட்டது.[2][18]
பொதுமக்களின் பார்வைக்காகவும்; மரியாதையைச் செலுத்துவதற்காகவும்; நாதனின் உடல் 2016 ஆகஸ்டு 25-ஆம் தேதி சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.[19]
இறுதி ஊர்வலத்தில் தஞ்சாவூர் மண்ணு எடுத்து பாடல்
2016 ஆகஸ்டு 26-ஆம் தேதி, அதிபர் நாதனைக் கௌரவிக்கும் வகையில் அரசு இறுதிச் சடங்கு நடைபெற்றது. அவரின் உடல் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. அரசு இறுதி ஊர்வலத்தில் அவரின் உடல், அவரின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைச் கடந்து சென்றது.[20][21]
சிங்கப்பூரின் பல்லினப் பாரம்பரியத்தை உருவகமாகக் கருதிய நாதனுக்கு மிகவும் பிடித்தமான பாடலான "தஞ்சாவூர் மண்ணு எடுத்து" எனும் பாடல் அவரின் இறுதி ஊர்வாத்தில் இசைக்கப்பட்டது. பொற்காலம் எனும் தமிழ்த் திரைப்படத்தின் பாடல்.[22]
அரசு இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து, அவரின் உடல் மண்டாய் மயானத்தில் (Mandai Crematorium) தகனம் செய்யப்பட்டது.[19]
விருதுகள்
சிறந்த சேவைப் பதக்கம் - Pingat Jasa Gemilang;(Meritorious Service Medal) 1975
பொதுச் சேவை நட்சத்திர விருது - Bintang Bakti Masyarakat(Public Service Star) 1964
பொது நிர்வாக விருது (பேராக்) - Pingat Pentadbiran Awam (Perak)(Public Administration Medal, Silver) 1967.[4]
துமாசிக் விருது - Darjah Utama Temasek(Order of Temasek) (First Class) 2013[23]
ஐக்கிய இராச்சிய வீர விருது - Order of the Bath 2006
↑"N-Day honours for Laju heroes", The Straits Times, p. 1, 9 August 1974.
↑"Nathan to join Straits Times board ... and will be nominated to be executive chairman", The Straits Times, pp. 1 and 11, 8 February 1982.
↑Yap Boh Tiong (10 February 1974), "Hijackers say: We are sorry", The Straits Times, p. 1; "Two get awards at ceremony", The Straits Times, p. 1, 11 January 1975.
Lee, Siew Hua (19 October 2007), "President's tip on ageing: Don't think about it", The Straits Times, p. 29.
Yap, Sonny; Lim, Richard; Leong, Weng Kam (2009), Men in White – The Untold Story of Singapore's Ruling Political Party, Singapore: Singapore Press Holdings, p. 145, ISBN978-981-4266-24-6.
நாதன் எழுதிய நூல்கள்
Nathan, S. R. (2008), Singapore's Foreign Policy: Beginnings and Future, Singapore: Ministry of Foreign Affairs (Singapore), ISBN978-981-0808-34-1.
Nathan, S. R. (2010), Tan, Bernard T. G.; Wee, Seo Lay (eds.), Why Am I Here?: Overcoming Hardships of Local Seafarers, Singapore: Centre for Maritime Studies, National University of Singapore, ISBN978-981-0850-91-3.
Nathan, S. R.; Auger, Timothy (2011), An Unexpected Journey: Path to the Presidency, Singapore: Editions Didier Millet, ISBN978-981-4260-73-2.
Nathan, S. R. (2011), Winning against the Odds: The Labour Research Unit in NTUC's Founding, Singapore: The Straits Times, ISBN978-981-4266-87-1.
Nathan, S. R. (2013), The Crane and the Crab, Singapore: Epigram Books, ISBN978-981-0735-90-6.
Nathan, S. R.; Auger, Timothy (2013), S. R. Nathan: 50 Stories from My Life, Singapore: Editions Didier Millet, ISBN978-981-4385-34-3.
Nathan, S. R.; Auger, Timothy (2015), S. R. Nathan in Conversation with Timothy Auger, Singapore: Editions Didier Millet, ISBN978-981-4610-03-2.