டி. டி. வி. தினகரன்
திருத்துறைப்பூண்டி திருவேங்கடம் விவேகானந்த தினகரன் (T. T. V. Dhinakaran,பிறப்பு: 13 திசம்பர், 1963) என்பவர் தமிழ்நாட்டு அரசியல்வாதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளரும் ஆவார்.[5] இவர் வி. கே. சசிகலாவின் மறைந்த அக்காளான வனிதாமணியின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார்.[6][7] இவரது தந்தை டி. விவேகானந்தம் முனையரையர் ஆவார்.[8] டி. டி. வி. தினகரன் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1999–2004) பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004 இல் தோற்ற இவர் 2004- (2004–2010)இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக, தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] அன்னியச் செலாவணி வழக்கில் தான் சிங்கப்பூர் நாட்டின் குடிமகன் என தினகரன் அறிவித்தார்.[10] ஜெயலலிதாவால், டிசம்பர் 16 2011-இல் டி. டி. வி. தினகரன் உள்ளிட்ட வி. கே. சசிகலாவின் 12 குடும்ப உறுப்பினர்கள் நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டனர்.[11] பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்காலிக பொதுச்செயலாளாராகப் பதவி ஏற்றுக் கொண்ட வி. கே. சசிகலா, டி. டி. வி. தினகரனை, பிப்ரவரி 2017-இல் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.[12][13] டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளராக போட்டியிட்டார்.[14] இத்தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரில், இந்தியத் தேர்தல் ஆணையம் இத்தொகுதியின் இடைத்தேர்தலை இரத்து செய்தது.[15] நவம்பர் 23, 2017இல் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில், அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் இவரிடம் இருந்தது பரிக்கப்பட்டது. அதில் இருந்து இதுவரை சின்னம் இல்லாத கட்சி தலைவராக இருந்து வருகிறார்.[16] 21 திசம்பர், 2017 அன்று நடைபெற்ற, டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 89,063 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[17] பின்பு மார்ச்சு 15, 2018 அன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதிமுக மற்றும் இரட்டை இலைச் சின்னம் மீட்கப்படும் வரை தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்பதால் இக்கட்சியைத் தொடங்கினேன் என்று கூறினார்.[18] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் கடம்பூர் ராஜூவிடம் தோல்வியடைந்தார். 2024 இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தனது கட்சி இணைவதாக 11 மார்ச், 2024இல் தினகரன் அறிவித்தார், அதற்கு நிபந்தனையற்ற ஆதரவை உறுதி செய்தார். அமமுக தமிழ்நாட்டில், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து பாஜக மற்றும் அமமுக இடையே மார்ச் 20, 2024இல் உடன்பாடு ஏற்பட்டது. தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தினகரன், இரண்டாம் இடத்தைப் பிடித்தார், மேலும் அமமுக இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தது.[19][20] வழக்குகள்1996-ஆம் ஆண்டில் இவர் மீதான அந்நிய செலாவனி மோசடி வழக்கில் 2016-இல் அமலாக்கத் துறை 28 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.[21][22] செயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டி. டி. வி. தினகரன் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.[23] முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தைத் தங்கள் அணிக்குப் பெறத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுக்க முயன்றார் என தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.[24] பின்பு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia