பண்டுங்
பண்டுங் (Bandung) இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாநிலத்தின் தலைநகரமாகும். இது 2007ஆம் ஆண்டில் 7.4 மில்லியன் மக்கள் தொகையின்படி நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகவும் இரண்டாவது பெரும் நகரப்பகுதியாகவும் விளங்குகிறது.[1] கடல் மட்டத்திலிருந்து 768 மீ (2,520 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் ஜகார்த்தாவிலிருந்து தென்கிழக்கே ஏறத்தாழ 140 கி.மீ. தொலைவில் உள்ளது. பிற இந்தோனேசிய நகரங்களை விட பண்டுங்கில் ஆண்டு முழுமையும் குளிர்ந்த வெப்பநிலை நிலவுகிறது. ஆற்று முகவாயில் எரிமலைக் குன்றுகள் சூழ அமைந்துள்ளதால் இயற்கையான அரண் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே டச்சு கிழக்கிந்தியக் கம்பனி தனது குடியேற்றத்தின் தலைநகரை பத்தாவியாவிலிருந்து பண்டுங்கிற்கு மாற்றியது. டச்சு காலனியவாதிகள் பதினெட்டாம் நூற்றாண்டில் சுற்றியுள்ள மலைகளில் தேயிலைத் தோட்டங்களையும் அவற்றை தலைநகருடன் இணைக்க நெடுஞ்சாலைகளையும் நிறுவினர். ஐரோப்பிய குடியேறிகள் தங்களுக்கு ஓர் நகராட்சியை வேண்டி 1906ஆம் ஆண்டில் இதற்கான அனுமதி பெற்றனர். இதன்பின்னர் தேயிலைத் தோட்ட முதலாளிகளுக்கான ஆடம்பர கேளிக்கை நகரமாக பண்டுங் மாறியது. ஆடம்பர தங்குவிடுதிகள், உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் ஐரோப்பிய ஆடை அங்காடிகளுமாக ஜாவாவின் பாரிசு என்று கூறுமளவில் புகழ் பெற்றது. 1945ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் விடுதலைக்குப் பின்னர் விரைவான வளர்ச்சியைக் கண்டு இன்று பெருநகரப்பகுதியில் சதுரகி.மீ.க்கு 16500 பேர் அளவிலான மக்களடர்த்தியையும் 2 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொகையையும் கொண்டுள்ளது. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்![]() விக்கிப்பயணத்தில் Bandung என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
|
Portal di Ensiklopedia Dunia