பரமேசுவரா கல்லூரி, யாழ்ப்பாணம்
பரமேசுவரா கல்லூரி (Parameshwara College) 1921 முதல் 1974 வரை இலங்கையின் முதன்மையான சைவப் பாடசாலைகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. இப்பாடசாலை 1921 ஆம் ஆண்டில் சேர் பொன். இராமநாதனால் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது. சேர் பொன். இராமநாதன் தனது கல்விப்பணியாக யாழ்ப்பாணத்தில் இரு முக்கிய பாடசாலைகளை நிறுவினார். அவற்றிலே, பெண்களுக்காக இராமநாதன் கல்லூரியை உடுவிலில் ஆரம்பித்ததோடு, ஆண்களுக்காக பரமேசுவராக் கல்லூரியை திருநெல்வேலியில் ஆரம்பித்தார். அவை பிரித்தானியக் குடியேற்றக் கால யாழ்ப்பாணத்தில் சைவப் பண்பாட்டினையும், சமயத்தையும் பேணுவதை நோக்கமாகக் கொண்டு இயங்கின. இப்பாடசாலையை பல்கலைக்கழகமாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது. பரமேசுவரா கல்லூரி 1921 ஆகத்து 22 இல் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது ஆசிரியப் பயிற்சிப் பாடசாலையாகவும், பின்னர், இலண்டன் மெட்ரிக்குலேசன், கேம்பிரிட்ச் தேர்வுகளை நடத்தும் பாடசாலையாகவும் விளங்கியது. பின்னர், தரம் 10 இற்கான தேர்வுகளும், பல்கலைக்கழக புகுமுகத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இப்பாடசால 36 ஏக்கர் (150,000 சதுரமீ) பரப்பளவு நிலத்தில், மேலும் விரிவாக்கம் செய்ய ஏதுவாகக் கட்டப்பட்டது. பின்னர் மாணவர்களின் வசதிக்காக ஒரு சிவன் கோவில் இதன் வளாகத்தில் கட்டப்பட்டது. 1974 ஆம் ஆண்டில் இவ்வளாகம் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண வளாகத்திற்காக இலங்கை அரசினால் கையகப்படுத்தப்பட்டது.[1][2] இக்கல்லூரியின் படித்த மாணவர்களும் ஆசிரியர்களும் அருகிலுள்ள ஏனைய அரசுப் பாடசாலைகளுக்கு மாற்றப்பட்டனர். பழைய மாணவர்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia