பி. சுந்தரய்யா

பி. சுந்தரய்யா
பொதுச் செயலாளர், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
பதவியில்
1964–1978
பின்னவர்எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1913-05-01)1 மே 1913
நெல்லூர் மாவட்டம்,ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு19 மே 1985(1985-05-19) (அகவை 72)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்லேலா
சமயம்கொள்கைகள் இல்லை

பி. சுந்தரய்யா (1 மே 1913 – 19 மே 1985) இந்திய பொதுவுடமை (மார்க்சிஸ்டு) கட்சியின் நிறுவன உறுப்பினரும் , தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டத்தின் தலைவர்களுள் ஒருவரும் ஆவார். பி. எஸ். என்று மக்களால் நேசத்துடன் அழைக்கப்பட்டார்.[1][2]

பிறப்பு, ஆரம்ப வாழ்க்கை

புச்சலப்பள்ளி சுந்தரராம ரெட்டி என்ற பெயரைக் கொண்ட பி. சுந்தரய்யா 1 மே 1913 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டம் அழகின்படுவில் பிறந்தார் .சிறுவனாக இருந்த போது அவருடைய முதல் பொது நடவடிக்கை என்பது தன்னுடைய கிராமத்தில் தலித்துகளுக்கு எதிராக நடைமுறைப் படுத்தப்பட்டு வந்த சாதிய ஒடுக்குமுறை களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து உண்ணாவிரதம் மேற்கொண்டதாகும். தென்னிந்தியாவிற்கு விஜயம் செய்த முதல் கம்யூனிஸ்ட்டான அமீர் ஹைதர் கான் மூலம், கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொதுவுடைமை இயக்கத்தில்

சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் பொழுது சுதந்திர போராட்ட இயக்கத்திலும், பின்னர் பொதுவுடைமை இயக்கத்திலும் அதிக ஆர்வம் கொண்டார். 1932ம் ஆண்டு உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று தஞ்சாவூர் சிறுவர் சிறை, திருச்சி மற்றும் இராஜமகேந்திரபுரம் சிறைகளில் தண்டனைக் காலத்தை கழித்தார். 1933-34ம் ஆண்டுகளில் தென்னியதியாவில் பொதுவுடைமைக் கட்சியை உருவாக்க வந்த தோழர் அமீர் ஹைதர்கானின் தொடர்பால் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஈர்க்கப்பட்டார். பின்னர் 1934ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார். அவருக்கு கட்சி ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கட்சியை உருவாக்கும் பணியை அளித்தது. அதை அவர் வெற்றிகரமாகச் செய்து முடித்தார். 24 வயது இருக்கும் போதே 1936-ல் அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக மாறினார். நாட்டில் கட்சி மத்தியத்துவப்படுத்தப்பட்ட கட்சியாக மறுசீரமைப்பு செய்யப்பட்டபின் அமைக்கப்பட்ட முதல் மத்திய குழுவாக அதுஇருந்தது. தென்னிந்தியாவில் பொதுவுடமைக் கட்சியைக் கட்டும் பணி அவரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. ‘‘கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு’’ என்ற நூலில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதியிருப்பது போல, கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளின் முதல் பிரிவைத் தெரிவு செய்ததில் பி.சுந்தரய்யா முக்கிய பங்கு ஆற்றியிருக்கிறார். 1939ம் ஆண்டில் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியவுடன் கம்யூனிஸ்ட் கட்சி அந்த யுத்தத்தை எதிர்த்தது. இதனால் ஆத்திரம் கொண்ட ஆங்கிலேய அரசாங்கம் 1940ம் ஆண்டில் நாடு முழுவதிலும் கம்யூனிஸ்டுகளை கைது செய்த பொழுது சுயதரய்யா கைதாகாமல் தப்பினார். சென்னையில் தென்னிந்தியாவுக்கான கட்சியின் தலைமறைவு மையத்தை உருவாக்கி வழிகாட்டினார். 1942ம் ஆண்டில் தடை நீங்கிய பின், அவர் கட்சியின் முடிவுப்படி பம்பாயிலிருந்த கட்சியின் தலைமையகத்திலிருந்து செயல்பட்டார். கட்சிக்கென ‘பீப்பிள்ஸ் பப்ளிசிங் ஹவுஸ்’ என்ற புத்தக நிலையத்தை உருவாக்கினார். 1943ம் ஆண்டில் ஜப்பானியப் படைகள் இந்தியக் கடற்கரைப் பகுதிகளில் நுழைந்து இந்த நாட்டை கைப்பற்றக் கூடும் என்ற நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் சென்று கட்சி ஊழியர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்க முடிவு செய்து, அந்தப் பணியை சுந்தரய்யாவிடம் ஒப்படைத்தது. அவர் நாடு முழுவதும் சென்று தோழர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தார்.

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)இல் அவரது பணி

1952ம் ஆண்டில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரய்யா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1955ம் ஆண்டில் நடைபெற்ற முதல் ஆந்திர மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற சுந்தரய்யா சட்டமன்றத்தில் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.1955ம் ஆண்டிலிருயது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தோன்றிய வர்க்க சமரசப் போக்கு தொடர்ந்து நீடித்து, கட்சி 1964ம் ஆண்டில் பிளவுபட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பது உருவாயிற்று.அவ்வாண்டு நவம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் ஏழாவது அகில இந்திய மாநாட்டில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 1977ம் ஆண்டு வரை(பன்னிரண்டு ஆண்டு காலம்) அப்பொறுப்பில் செயல்பட்டார். பின்னர் அவர் ஆந்திராவிற்கு திரும்பி, அங்கே கட்சியின் மாநிலச் செயலாளர் ஆனார்.1967இல் அக் கட்சியின் மத்திய குழுவால் நிறைவேற்றப் பட்ட ‘கட்சி ஸ்தாபனத்தின் பணிகள்’ என்கிற புரட்சிகர அமைப்பிற்கான செயல் திட்டத்தில் அவரது முத்திரையைப் பெற்றிருக்கிறது. 1968ம் ஆண்டிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சிக்குள் தோன்றிய இடது அதிதீவிரப் போக்கிற்கு எதிராக அவர் இதரதோழர்களுடன் சேர்ந்து பெரும் அரசியல் தத்துவார்த்தப் போராட்டத்தை நடத்தினார். 1975-76ம் ஆண்டுகளில் அவசரநிலை பிரகடனம் நாட்டில் அமலில் இருந்த போது தலைமறைவாகச் சென்று கட்சிப்பணியாற்றினார்.

பிற சிறப்பம்சங்கள்

பி. சுந்தரய்யா, விவசாயப் புரட்சிக்கான போர்த்தந்திரங்களை வளர்த்தெடுப்பதில் பெருமளவில் பங்களிப்பினைச் செய்திருக் கிறார். 1936இல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டபோது அதன் நிறுவனத் தலைவர்களில் அவரும் ஒருவர். அப் போது அவர் அதன் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘‘தெலுங்கானா ஆயுதப் போராட்டமும் அதன் படிப்பினைகளும்’’ என்கிற அவரது நூல், தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் குறித்த முழுமையான நூலாகும். கம்யூனிச இயக்கத்திற்குள்ளிருந்த திருத்தல்வாதத்திற்கு எதிராகப் போராடினார். அதேபோன்று அதற்கு இணையாக ‘அதிதீவிர இடதுசாரி’ திரிபுகளுக்கு எதிராகவும் கடுமையாகப் போராடினார்.[3]

இறப்பு

உடல் நலக் குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 1985ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி அதிகாலையில் உயிர் நீத்தார்.

மேற்கோள்கள்

  1. History on the verge of collapse in Hindu on 3 May 2006.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-06-05. Retrieved 2021-10-28.
  3. "பி.சுந்தரய்யா பிறந்தநாள் நூற்றாண்டு :: நிகரற்ற கம்யூனிஸ்ட் தலைவர்". தீக்கதிர். 30 ஏப்ரல் 2012. Archived from the original on 2016-03-06. Retrieved 27 ஏப்ரல் 2014.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya