முசுத்தாபிசூர் ரகுமான் (Mustafizur Rahman, பிறப்பு: 6 செப்டம்பர் 1995) வங்காளதேச பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இடக்கை விரைவுப்பந்து வீசாளராக அடையாளம் காணப்படுகிறார். இவர் தான் விளையாடிய முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் தொடர்ப் போட்டிகளில் அதிக இலக்குகளைக் (13) கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். முதலாவது தேர்வு மற்றும் ஒருநாள் போட்டிகளில் "சிறந்த ஆட்டக்காரர்" என்ற விருதையும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
ரகுமான் 2015 ஏப்ரலில் பாக்கித்தான் அணிக்கு எதிராக இ20 போட்டியில் முதன் முதலில் பன்னாட்டுப் போட்டியாளராக அறிமுகமானார்.[1] அதே ஆண்டில் தனது முதலாவது ஒருநாள் போட்டியை இந்தியாவுக்கு எதிராகவும்,[2][3] தேர்வுப் போட்டியை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும் விளையாடினார்.[4]
பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்னர், ரகுமான் 19-அகவைக்குட்பட்டோருக்கான 2014 உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் 2016 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார்.[5]