யாக்யா கான்
ஆகா முகமது யாஃக்யா கான் (Agha Muhammad Yahya Khan, Urdu: آغا محمد یحییٰ خان; 4 பிப்ரவரி 1917 – 10 ஆகத்து 1980), பரவலாக யாக்யா கான், 25 மார்ச் 1969 முதல் திசம்பர் 1971இல் தனது பணித்துறப்பு வரை மூன்றாவது பாக்கித்தான் குடியரசுத் தலைவராக பொறுப்பாற்றிய பாக்கித்தானிய படைத்துறை தலைவர்.[1][2][3] பெரிய பிரித்தானியாவின் பிரித்தானிய இந்தியப் படையின் சார்பில் இரண்டாம் உலகப் போரின் நிலநடுக்கடல் அரங்கில் பங்கெடுத்தார். பின்னர் யாக்யா கான் 1947இல் ஐக்கிய இராச்சியம் இந்தியாவைப் பிரித்தபோது பாக்கித்தான் குடியுரிமைக்கு விருப்பம் தெரிவித்து பாக்கித்தானியப் படையில் சேர்ந்தார். 1965 இந்தியாவுடனான போருக்குகாரணமான இந்தியக் காசுமீரில் மறைமுகமாக உட்புகும் கிராண்டு இசுலாம் நடவடிக்கையில் உதவி புரிந்தார்.[4] 1966இல் பாக்கித்தானியப் படையின் தலைமை படைத்தலைவராக பல சர்ச்சைகளுக்கிடையே நியமிக்கப்பட்டார். முன்னாள் சர்வாதிகாரியும் தேர்வுபெற்ற குடியரசுத் தலைவருமான அயூப் கான் 1969 கிழக்குப் பாக்கித்தானில் எழுந்த போராட்டங்களால் மக்களாதரவு மங்கிய நிலையில் குடியரசுத் தலைவராக இவரிடம் பொறுப்பை ஒப்படைத்து பணி ஓய்வு கொண்டார். யாக்யா கான் பின்னர் படைத்துறை சட்டத்தை செயலாக்கி அரசியலமைப்புச் சட்டத்தை முடக்கினார். நாட்டின் முதல் பொதுத் தேர்தலை 1970இல் நடத்தினார். ஆனால் வெற்றி பெற்ற கிழக்குப் பாக்கித்தானின் சேக் முஜிபுர் ரகுமானுக்கு அதிகாரத்தை மாற்றுவதை தாமதித்தார். தொடர்ந்து கிழக்கில் எழுந்த வன்முறைப் போராட்டங்களை அடக்க கிழக்கு பாக்கித்தான் ஆளுநருக்கு தேடொளி நடவடிக்கை (ஆபரேஷன் சர்ச்லைட்) முன்னெடுக்க அனுமதி வழங்கினார். இது புரட்சி வெடிக்க காரணமாயிற்று. ஏறத்தாழ 10 மில்லியன் பேர் இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி இடம் பெயர்ந்தனர். தனி ஆய்வாளர்களின் கூற்றுப்படி 1971 வங்காளதேச இனப்படுகொலை எனப்படும் நிகழ்வில் 300,000 முதல் 500,000 வரை மக்கள் கொலையுண்டனர்.[5][6] பாக்கித்தானிற்கு வங்காளதேச விடுதலைப் போரில் பெரும் தோல்வி ஏற்பட்டது. பாக்கித்தானின் கிழக்கு படைப் பிரிவு கலைக்கப்பட்டது. கிழக்கு பாக்கித்தான் பிரிந்து வங்காளதேசம் என்ற நாடாக உருவானது. யாக்யா கானின் ஆட்சியே பாக்கித்தான் பிளவுபட முதன்மை காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.[7][8] இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து மேற்கு பாக்கித்தானின் முதன்மை அரசியல்வாதியாக விளங்கிய சுல்பிக்கார் அலி பூட்டோவிடம் ஆட்சியை ஒப்படைத்து பாக்கித்தானியப் படையின் தலைமை படைத்தளபதி பொறுப்பையும் துறந்தார். இரண்டு பொறுப்புகளையும் ஒரே நாளில், 20 திசம்பர் 1971இல் துறந்தார்.[1] யாக்யா கானின் அனைத்து இராணுவ சிறப்புகளும் பறிக்கப்பட்டு 1970களின் பெரும்பாலும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.[1][3] பாக்கித்தானிய வரலாற்றில் எதிர்மறையான நோக்குடனே பார்க்கப்படுகிறார்; நாட்டின் தலைவர்களிலேயே மிகவும் குறைந்தளவில் வெற்றி கண்டவராக கருதப்படுகிறார்.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia