யுகோசுலாவியா
யுகோசுலாவியா (Yugoslavia) என்பது தென்கிழக்கு, நடு ஐரோப்பா பகுதியில் 1918 முதல் 1992 வரை இருந்த ஒரு நாடு ஆகும். இது 1918 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து, "செர்பிய, குரோவாசிய, சிலோவீனிய இராச்சியம்" என்ற பெயரில், செர்பியா இராச்சியம், (முன்னாள் ஆத்திரியா-அங்கேரியில் இருந்து உருவான) தற்காலிக மாநிலமான சுலோவீனிய, குரோவாசிய, செர்பியா பிரதேசங்களில் இருந்து உருவாக்கப்பட்டது.[6] உதுமானியப் பேரரசு, ஆத்திரியா-அங்கேரி ஆகியவற்றின் கீழ் பல நூற்றாண்டுகளாக இருந்த வெளிநாட்டு ஆட்சியைத் தொடர்ந்து தெற்கு சிலாவிக் மக்களின் முதல் ஒன்றியத்தை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக அமைத்தது. செர்பியாவின் முதலாம் பீட்டர் மன்னர் அதன் முதல் இறையாண்மை கொண்ட தலைவர் ஆவார். 1922 சூலை 13 அன்று பாரிசில் நடந்த தூதர்கள் மாநாட்டில் இந்த இராச்சியம் பன்னாட்டு அங்கீகாரத்தைப் பெற்றது.[7] நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர் யுகோசுலாவிய இராச்சியம் என 1929 அக்டோபர் 3 இல் மாற்றப்பட்டது. 1941 ஏப்ரல் 6 அன்று அச்சு நாடுகளினால் இந்நாடு படையெடுக்கப்பட்டது. 1943-இல், ஒரு "யுகோசுலாவிய சனநாயகக் கூட்டாட்சி" அரசு சார்பு எதிர்ப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது. 1944-ஆம் ஆண்டில், பின்னர் நாடுகடத்தப்பட்ட இரண்டாம் பீட்டர் மன்னர், அதை முறையான அரசாங்கமாக அங்கீகரித்தார். நவம்பர் 1945 இல் ஒரு கம்யூனிச அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முடியாட்சி ஒழிக்கப்பட்டதை அடுத்து, அந்நாடு "யுகோசுலாவியக் கூட்டாட்சி மக்கள் குடியரசு" என மறுபெயரிடப்பட்டது. இது இத்தாலியிடமிருந்து இசுத்திரியா, ரிசேக்கா, சாதர் பிரதேசங்களைக் கைப்பற்றியது. சார்பாளர்களின் தலைவர் யோசிப் டீட்டோ 1944 முதல் பிரதமராகவும் பின்னர் 1980 இல் அவர் இறக்கும் வரை அரசுத்தலைவராகவும் நாட்டை ஆட்சி செய்தார். 1963-இல், நாடு கடைசித் தடவையாக "யுகோசுலாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு" என மறுபெயரிடப்பட்டது. சோசலிசக் கூட்டாசிக் குடியரசை உருவாக்கிய ஆறு தொகுதி குடியரசுகள் பொசுனியா எர்செகோவினா, குரோவாசியா, மக்கெதோனியா, மொண்டெனேகுரோ, செர்பியா, சுலோவீனியா ஆகிய சோசலிசக் குடியரசுகளாகும். செர்பிய சோசலிசக் குடியரசு கொசோவோ, வொய்வொதீனா ஆகிய இரண்டு சோசலிசத் தன்னாட்சி மாகாணங்களைக் கொண்டிருந்தது, அவை 1974-இற்குப் பிறகு கூட்டமைப்பின் மற்ற உறுப்பினர்களுக்கு சமமாக இருந்தன.[8][9] 1980களில் பொருளாதார, அரசியல் நெருக்கடி, தேசியவாத, இன மோதல்களின் எழுச்சிக்குப் பிறகு, யுகோசுலாவியா அதன் குடியரசுகளின் எல்லைகளில் முதலில் ஐந்து நாடுகளாக உடைந்து, யுகோசுலாவியப் போர்களுக்கு வழிவகுத்தது. 1993 முதல் 2017 வரை, முன்னாள் யுகோசுலாவியாவிற்கான பன்னாட்டுக் குற்றவியல் தீர்ப்பாயம், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் அந்தப் போர்களின் போது செய்யப்பட்ட பிற குற்றங்களுக்காக முன்னாள் யுகோசுலாவிய அரசியல், இராணுவத் தலைவர்களை விசாரணை செய்தது. இவ்வாறு பிரிந்த பிறகு, மொண்டெனேகுரோ, செர்பியக் குடியரசுகள் யுகோசுலாவியக் கூட்டாட்சிக் குடியரசு என்ற பெயரில் (2003 முதல் 2006 வரை செர்பியாவும் மொண்டெனேகுரோவும் என அறியப்பட்டது) உருவாக்கின. இந்த மாநிலம் யுகோசுலாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசுக்கு ஒரே சட்டப்பூர்வ வாரிசு என்ற நிலையை அடைய விரும்பியது, ஆனால் அந்தக் கோரிக்கைகளை மற்ற முன்னாள் குடியரசுகள் எதிர்த்தன. இறுதியில், அது பகிரப்பட்ட வாரிசு[10] என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு, 2003-இல் அதன் அதிகாரப்பூர்வ பெயர் செர்பியாவும் மொண்டெனேகுரோவும் என மாற்றப்பட்டது. 2006-இல் செர்பியாவும் மொண்டெனேகுரோவும் சுதந்திர நாடுகளாக மாறியபோது இந்த மாநிலம் கலைக்கப்பட்டது. கொசோவோ 2008 இல் அதன் விடுதலையை அறிவித்தது. யுகோசுலாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு1945 நவம்பர் 11 இல், கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மக்கள் முன்னணி மட்டுமே போட்டியிட்டு, அனைத்து 354 தொகுதிகளையும் கைப்பற்றியது. நவம்பர் 29 அன்று, நாடுகடத்தப்பட்ட நிலையில், இரண்டாம் பீட்டர் மன்னர் யுகோசுலாவியாவின் அரசியலமைப்புச் சபையால் பதவி நீக்கம் செய்யப்பட்டார், யுகோசுலாவியாவின் கூட்டாட்சி மக்கள் குடியரசு அறிவிக்கப்பட்டது.[11] ஆனால், அவர் பதவி விலக மறுத்துவிட்டார். மார்சல் டீட்டோ நாட்டை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார், அனைத்து எதிர்ப்பாளர்களும் அகற்றப்பட்டனர்.[12] 1946 சனவரி 31 இல், சோவியத் ஒன்றியத்தின் அரசியலமைப்பைப் பின்பற்றி யுகோசுலாவியாவின் கூட்டாட்சி மக்கள் குடியரசின் புதிய அரசியலமைப்பு, செர்பியாவின் ஒரு பகுதியாக இருந்த ஆறு குடியரசுகள், ஒரு தன்னாட்சி மாகாணம், ஒரு தன்னாட்சி மாவட்டம் ஆகியவற்றை நிறுவியது. கூட்டாட்சியின் தலைநகரம் பெல்கிரேட். இந்தக் கொள்கையானது கம்யூனிஸ்டுக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு வலுவான மத்திய அரசையும், பல தேசிய இனங்களை அங்கீகரிப்பதிலும் கவனம் செலுத்தியது.[12] குடியரசுகளின் கொடிகள் சிவப்புக் கொடி அல்லது சிலாவிக் மூவர்ணத்தின் பதிப்புகளைப் பயன்படுத்தின, மையத்தில் அல்லது மண்டலத்தில் ஒரு சிவப்பு நட்சத்திரம் இருந்தது. மார்சல் டீட்டோவின் பிராந்திய இலக்கானது தெற்கே விரிவடைந்து அல்பேனியாவையும், கிரேக்கத்தைன் சில பகுதிகளைக் கட்டுப்படுத்துவதாகும். 1947-இல், யுகோசுலாவியாவிற்கும் பல்கேரியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பிளெட் உடன்படிக்கைக்கு வழிவகுத்தது, இது இரு கம்யூனிச நாடுகளுக்கும் இடையே ஒரு நெருங்கிய உறவை உருவாக்க முன்மொழிந்தது, அத்துடன் யுகோசுலாவியா கிரேக்கத்தில் உள்நாட்டுப் போரைத் தொடங்கவும் அல்பேனியாவையும் பல்கேரியாவையும் தளங்களாகப் பயன்படுத்தவும் வழிவகுத்தது. இந்த ஒப்பந்தத்தை யோசப் இசுத்தாலின் வீட்டோ செய்ததால், அந்த உடன்படிக்கை ஒருபோதும் நிறைவேறவில்லை. பெல்கிரேடிற்கும் மாஸ்கோவிற்கும் இடையேயான இடைவெளி விரிவடைந்தது.[13] மாநிலங்களினதும் தேசிய இனங்களினதும் (தேசிய சிறுபான்மையினர்) தேசியப் பிரச்சினையை யுகோசுலாவியா அனைவரும் ஒரே மாதிரியான உரிமைகளைக் கொண்டிருக்கும் வகையில் தீர்த்தது. இருப்பினும், யுகோசுலாவியாவின் பெரும்பாலான செருமானிய சிறுபான்மையினரில், ஆக்கிரமிப்பின் போது ஒத்துழைத்த அல்லது செருமானியப் படைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள், செருமனி அல்லது ஆத்திரியா நோக்கி வெளியேற்றப்பட்டனர்.[14] யுகோசுலாவியா-சோவியத் பிளவும் அணிசேரா இயக்கமும்யுகோசுலாவியா 1948 இல் சோவியத்துகளிடம் இருந்து விலகி யோசிப் டிட்டோவின் அரசியல் தலைமையின் கீழ் சோசலிசத்திற்கு அதன் சொந்த வழியை உருவாக்கத் தொடங்கியது.[15] அதன்படி, தொழிலாளர்களின் சுய-நிர்வாகம், அதிகாரப் பரவலாக்கம் ஆகியவற்றுடன் சனநாயக மையவாதத்தை வலியுறுத்தும் வகையில் அரசியலமைப்பு பெரிதும் திருத்தப்பட்டது.[16] கம்யூனிஸ்டுக் கட்சியானது "கம்யூனிஸ்ட்களின் முன்னணி" என மறுபெயரிடப்பட்டது, முந்தைய ஆண்டின் அதன் மாநாட்டில் டீட்டோயிசத்தை ஏற்றுக்கொண்டது.[17] அனைத்து கம்யூனிச ஐரோப்பிய நாடுகளும் இசுத்தாலினுடன் ஒத்துழைத்தன, அவை 1947 இல் அமெரிக்காவின் மார்சல் திட்ட உதவியை நிராகரித்தன. டீட்டோ, முதலில் மார்சல் திட்டத்தை நிராகரித்தார். இருப்பினும், 1948 இல் டிட்டோ மற்ற பிரச்சினைகளில் இசுத்தாலினுடன் தீர்க்கமாக முறித்துக் கொண்டார், யுகோசுலாவியாவை ஒரு சுதந்திர கம்யூனிச நாடாக மாற்றினார். யுகோசுலாவியா அமெரிக்க உதவியைக் கோரியது. அமெரிக்கத் தலைவர்கள் உள்நாட்டில் பிளவுபட்டனர், ஆனால் இறுதியாக ஒப்புக்கொண்டு, மார்சல் உதவித் திட்டத்தின் கீழல்லாமல், வேறு வகைகளில் 1949 இல் சிறிய அளவிலும், 1950-53ல் மிகப் பெரிய அளவிலும் பணத்தை அனுப்பத் தொடங்கினர்.[18] டிட்டோ கிழக்கு அமைப்பையும், நேட்டோ நாடுகள் இரண்டையும் விமர்சித்தார், இந்தியா உட்பட்ட பிற நாடுகளுடன் சேர்ந்து, அணிசேரா இயக்கத்தை 1961 இல் தொடங்கி, யுகோசுலாவியா கலைக்கப்படும் வரை இவ்வியக்கத்தில் இணைந்திருந்தார். யுகோசுலாவிய சோசலிசக் கூட்டாசிக் குடியரசு![]() 1963 ஏப்ரல் 7 இல், நாடு தனது அதிகாரப்பூர்வ பெயரை "யுகோசுலாவிய சோசலிசக் கூட்டாசிக் குடியரசு" என்று மாற்றியது, டிட்டோ வாழ்நாள் அரசுத்தலைவராக நியமிக்கப்பட்டார்.[19] இக்கூட்டாட்சிக் குடியரசில், ஒவ்வொரு குடியரசும் மாகாணமும் அதன் சொந்த அரசியலமைப்பு, உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம், அரசுத்தலைவர், பிரதமர் ஆகியவற்றைக் கொண்டிருந்தன.[20] யுகோசுலாவிய அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் சனாதிபதி (டிட்டோ), கூட்டாட்சிப் பிரதமர், கூட்டாட்சி நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டது (1980 இல் டிட்டோவின் இறப்பிற்குப் பிறகு ஒரு கூட்டு சனாதிபதி உருவாக்கப்பட்டது).[20][21] ஒவ்வொரு குடியரசிற்கும், மாகாணத்திற்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்களும், கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளர் ஆகியோர் முக்கியமானவர்கள்.[20] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: யுகோசுலாவியா
|
Portal di Ensiklopedia Dunia