வி. டேவிட்
வி. டேவிட் என அழைக்கப்படும் டேவிட் எஸ். வேதமுத்து (ஆங்கிலம்: David S. Vethamuthu; மலாய்: V. David) என்பவர் மலேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு மூத்த அரசியல்வாதி; மலேசியத் தொழிலாளர்கள் நலன்களுக்காகவும்; மலேசியத் தமிழர் உரிமைகளுக்காகவும் போராட்டங்கள் நடத்திய மூத்த தொழிற்சங்கவாதி ஆவார். மலேசிய இந்தியர் சமுதாயத்திற்காக; குறிப்பாக மலேசியத் தமிழர்களின் உரிமைகளுகாகப் போராட்டம் நடத்தியவர் என்று மலேசிய வரலாற்றில் அறியப்படுகிறார். மக்கள் தொண்டன் என்று மலேசிய இந்தியர்களால் புகழப் படுகிறார்; மலேசிய இந்தியர்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற தலைவர்களில் ஒருவராக இன்றும் அறியப்படுகிறார். 1958-ஆம் ஆண்டில் மலேசிய அவசர காலச் சட்டத்தின் கீழ் (Emergency Ordinance in 1958) முதன்முறையாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் 1964-ஆம் ஆண்டில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (Internal Security Act in 1964) கீழ், இரண்டாவது முறையாக மீண்டும் கைது செய்யப்பட்டார். அடுத்து 1987 அக்டோபர் மாதம் மூன்றாவது முறையாக, லாலாங் நடவடிக்கை மூலமாகக் கைது செய்யப்பட்டு 222 நாட்கள் சிறையில் வைக்கப் பட்டார்.[1][2] பொதுபங்சார், டத்தோ கெராமாட், டாமன்சாரா மற்றும் பூச்சோங் ஆகிய நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளை மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துப் பணியாற்றி உள்ளார். நாடாளுமன்றத்தில் இருந்தபோது, மலேசிய இந்தியர்ச் சமூகம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து அச்சமின்றி குரல் கொடுப்பவராக அறியப் பட்டார். வி. டேவிட் அவர்கள், தொழிலாளர் தினத்தை மலேசியாவில் ஒரு பொது விடுமுறை நாளாக மாற்றியதன் மூலமாகப் பிரபலம் அடைந்தவர். 1984-இல் உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டார். தொழிற்சங்கங்கள்1953-ஆம் ஆண்டில் சிலாங்கூர் தொழிற்சாலைகள் சங்கத்தை (Selangor Factories Association) நிறுவிய வி. டேவிட், அதன் செயலாளராகவும் சேவை செய்தார். தவிர 1976-ஆம் ஆண்டு தொடங்கி 1992-ஆம் ஆண்டு வரை 16 ஆண்டுகள் வரை மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (Malaysian Trades Union Congress) பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். 1958 முதல் 1995 வரை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (Transport Workers Union) பொதுச் செயலாளராகவும் இருந்தார். உள்ளூர் மற்றும் பன்னாட்டுத் தொழிற்சங்க வட்டாரங்களில் இவர் 'கிங் டேவிட்' (King David) என்று அழைக்கப்பட்டார். பணியாளர் தொழில்நுட்பப் பயிற்சி நிலையம்1970-களின் முற்பகுதியில் கிள்ளான் துறைமுகத்தில் பணியாளர் தொழில்நுட்பப் பயிற்சி நிலையத்தை (Workers Institute of Technology) அமைத்துக் கொடுத்தார். இந்த கல்வி நிலையம், பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, பல ஆண்டுகளாகக் கல்வி வாய்ப்புகளை வழங்கியது.[3] அனைத்துலக அளவிலும் நன்கு அறியப் பட்டவராகத் திகழ்ந்தார். அனைத்துலப் போக்குவரத்து கூட்டமைப்பு (International Transport Federation); மற்றும் கட்டற்ற தொழிற் சங்கங்களின் அனைத்துலக் கூட்டமைப்பு (International Confederation of Free Trade Union); ஆகியவற்றின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடந்த பல அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு (International Labour Organization) மாநாடுகளில் மலேசியத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்து உள்ளார். அரசியல்மலேசியப் பொதுத் தேர்தல், 19591958-இல், கோலாலம்பூர் நகராட்சி மன்ற உறுப்பினராகத் (Kuala Lumpur Town Councillor) தேர்ந்து எடுக்கப்பட்ட வி. டேவிட், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (Transport Workers Union) செயலாளராக ஆனார். 1959-இல், மலாயா மக்கள் சோசலிச முன்னணி (Malayan Peoples' Socialist Front) எனும் அப்போதைய அரசியல் முன்னணியில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பின்னர் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் பந்தாய் (Pantai) தொகுதியிலும்; மலேசிய நாடாளுமன்றத்தின் பங்சார் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மலேசியப் பொதுத் தேர்தல், 19641964 மலேசியப் பொதுத் தேர்தலில், அவர் தன் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் பந்தாய் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டாலும், மலேசிய நாடாளுமன்ற பங்சார் தொகுதியை மக்கள் செயல் கட்சியின் தேவன் நாயரிடம் (Devan Nair) இழந்தார். மலேசியப் பொதுத் தேர்தல், 19691969 மலேசியப் பொதுத் தேர்தலில், அவர் பினாங்கு, டத்தோ கெராமாட் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குத் திரும்பினார். மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட கெராக்கான் கட்சியின் கீழ் இணைந்து, மூன்றாவது முறையாகத் தன் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் பந்தாய் தொகுதிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1973-ஆம் ஆண்டில் கெராக்கான் கட்சி; ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியில் சேர்ந்தது. டேவிட் அவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. அதனால் கெராக்கான் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். அத்துடன் பெகெமாஸ் (Malaysian Social Justice Party) கட்சியில் இணைந்தார். மலேசியப் பொதுத் தேர்தல், 19741974 மலேசியப் பொதுத் தேர்தலில், அவரின் டத்தோ கெராமாட் நாடாளுமன்றத் தொகுதியும்; மற்றும் பந்தாய் சட்டமன்றத் தொகுதியும்; எல்லை மறுவரையறை (Re-delineation) செய்யப்பட்டன. அதன் பின்னர் பினாங்கு ஜெலுத்தோங் (Jelutong) நாடாளுமன்றத் தொகுதியில்; கெராக்கான் கட்சியின் இராசையா ராஜசிங்கத்திற்கு (Rasiah Rajasingam) எதிராகப் போட்டியிட்டார். ஆனாலும் தோல்வி அடைந்தார். மலேசியப் பொதுத் தேர்தல், 19781978 மலேசியப் பொதுத் தேர்தலில், இந்த முறை ஜனநாயக செயல் கட்சியின் வேட்பாளராக, டாமன்சாரா நாடாளுமன்றத் தொகுதியில் டேவிட் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் மலேசிய இந்திய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட துணை அமைச்சர் சுப்பிரமணியம் சின்னையா (S. Subramaniam) என்பவரைத் தோற்கடித்தார். மலேசியப் பொதுத் தேர்தல், 19821982 மலேசியப் பொதுத் தேர்தலில், அதே டாமன்சாரா நாடாளுமன்றத் தொகுதியில் மலேசிய சீனர் சங்கத்தின் தலைவர் டான் கூன் சுவான் (Tan Koon Swan) என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். எனினும் தோல்வி கண்டார். மலேசியப் பொதுத் தேர்தல், 19861986 மலேசியப் பொதுத் தேர்தலில்; சிலாங்கூர், பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியில் இவரை எதிர்த்து மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர். டேவிட்டை எதிர்த்துப் போட்டியிட்ட மலேசிய சீனர் சங்கத்தின் லூய் தாய் ஹெங் (Lui Thai Heng); மலேசிய இஸ்லாமிய கட்சியின் அஸ்ரி ஜனாங்; மலேசிய சோசலிச ஜனநாயகக் கட்சியின் (Social Democratic Party (Malaysia) இயோ போ சான் (Yeoh Poh San) ஆகிய மூவரும் தோல்வி கண்டனர். மலேசியப் பொதுத் தேர்தல், 19901990 மலேசியப் பொதுத் தேர்தலில்; மீண்டும் அதே சிலாங்கூர், பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை மலேசிய சீனர் சங்கத்தின் தான் இயீ கிவ் (Tan Yee Kew) என்பவர் மட்டுமே போட்டியிட்டார். அதன் பின்னர் டேவிட்டின் உடல்நலம் பாதிக்கப் பட்டது. அதனால் 1995-ஆம் ஆண்டில் அரசியல் வாழ்க்கையில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார். மக்கள் தொண்டன் டேவிட் அவர்கள் மலேசியப் பொதுத் தேர்தல்களில் எட்டு முறை போட்டியிட்டவர். மறைவு2005 ஜூலை 19-ஆம் தேதி கோலாலம்பூரில் டேவிட் காலமானார். 1958-ஆம் ஆண்டு தொடங்கி 1995-ஆம் ஆண்டு அவர் நோய்வாய்ப்படும் வரையில் ஏறக்குறைய 40 ஆண்டுகள் மலேசியத் தொழிலாளர்களுக்காகச் சேவை செய்துள்ளார்.[4] மலேசியத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும்; கல்வி வாய்ப்புகளுக்காகவும்; தமிழர்களின் வேலை வாய்ப்புகளுக்காகவும்; போராடி இருக்கிறார். மலேசியத் தமிழர்களின் உரிமைகளைத் தக்க வைக்கும் பொருட்டு மலேசிய நாடாளுமன்றத்தில் அனல் தெறிக்கும் குரல் எழுப்பி உள்ளார். மலேசியத் தமிழர்கள் என்றும் அவரை மறக்க மாட்டார்கள்.[5][6] அங்கீகாரம்மலேசியாவின் மூத்த தொழிற்சங்கவாதியான மறைந்த வி. டேவிட், அவரின் வாழ்நாளில் பெரும்பகுதியை மலேசியத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி இருக்கிறார்.[7] வி. டேவிட்டின் போராட்டத்தைப் பாராட்டி அவரின் பெயரில் ஒரு சாலைக்குப் பெயர்ச் சூட்டுமாறு சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (MTUC) அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.[8][9] மேற்கோள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia