தமிழ்நாடு நில அபகரிப்பு வழக்குகள் என்பது ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 2011 ஆம் ஆண்டு பதவியேற்றவுடன் பொதுமக்களிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்கப்பட்ட அல்லது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை உரியவர்களிடமே ஒப்படைப்பதற்காக எடுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளைக் குறிக்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள நில உரிமையாளர்களிடமிருந்து நிலத்திற்கான முழுத்தொகையைக் கொடுக்காமலோ அல்லது போலி ஆவனங்கள் தயாரித்தோ அல்லது மிரட்டியோ நிலத்தைச் சட்டத்திற்குப் புறம்பாக அபகரித்துக் கொள்தல் அல்லது ஆக்கிரமிப்பு செய்து கொள்தல் போன்ற நடவடிக்கைகள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக 2006-2011 காலகட்டத்தில் (திமுக ஆட்சிகாலத்தில்) அதிகமாக நடைபெற்றதாக் தமிழக அரசு குற்றம் சாட்டியது. இப்படி நிலங்களை இழந்த நிலங்களின் உரிமையாளர்கள் கொடுத்த புகார்களின் மேல் பதிவு செய்யப்படும் வழக்குகள், அதன் மீதான நடவடிக்கைகள் ”தமிழ்நாடு நில அபகரிப்பு வழக்குகள்” என்று அழைக்கப்படுகின்றன. நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக சூலை 10, 2011 அன்று தமிழக அரசு தனிப்பிரிவு ஒன்றை நிறுவியது. அதன்படி காவல் துறையில், தனியாக சிறப்பு பிரிவு ஒன்று காவல் தலைமை அலுவலகத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கும்.[1]
தனிப்பிரிவு
அதிமுக2011 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் 'கருணாநிதியின் குடும்பத்தினராலும், தி.மு.க., அமைச்சர்களாலும், அவர்களது கூலிப்படைகளாலும் மக்களை அநியாயமாக மிரட்டி, பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு, உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்திருந்தது. இதன்படி அதிமுக தலைமையிலான அரசு 2011 ஆம் ஆண்டு பதவியேற்றவுடன் பொதுமக்களிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்கப்பட்ட அல்லது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை உரியவர்களிடமே ஒப்படைப்பதற்காக எடுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைப் பற்றியதாகும். நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக சூலை 10 அன்று தமிழக அரசு தனிப்பிரிவு ஒன்றை நிறுவியது. அதன்படி காவல் துறையில், தனியாக சிறப்புப் பிரிவு ஒன்று காவல்துறையின் மாவட்டத் தலைமை அலுவலகத்திலும் தொடங்கப் பெற்று செயல்பட்டு வருகிறது.[1]
திமுக கட்சியினர்
சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அங்கம்மாள் காலனி பொதுமக்கள் சிலர் தங்களது நிலத்தை சிலர் மிரட்டி அபகரித்து கொண்டதாக திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 13 பேர் மீது புகார் செய்தனர். இதனைத் தொடர்ந்து தான் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக அவர் உயர்நீதிமன்றத்தில் பிணை பெற முயற்சித்தார். அதனை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ராஜசூர்யா வரும் திங்கட்கிழமை சூலை 25, 2011 காலை பத்துமணிக்குள் சேலம் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகவும் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து மூன்று நாட்கள் காவல்துறை விசாரணை செய்யவும் அனுமதித்தார்.[2]
மதுரையில் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் பறிப்பு புகார் தொடர்பான வழக்கில் தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலர் கோ.தளபதி உள்ளிட்ட 4 பேர் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர். தேனி, வேங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சிவனாண்டி-பாப்பா தம்பதி மாவட்ட போலீஸ் எஸ்.பி. அஸ்ரா கர்க்கிடம் புகார் மனு அளித்தனர். அதில் திருமங்கலம் அருகே உள்ள தங்களது 5.14 ஏக்கர் நிலத்தை தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் மிரட்டி எழுதி வாங்கியிருப்பதாக கூறியிருந்தனர். தி.மு.க. மதுரை மாநகர் மாவட்டச் செயலர் கோ.தளபதி, திருமங்கலம் ஒன்றிய தி.மு.க. பிரமுகர் கொடி சந்திரசேகர், திருப்பரங்குன்றம் தி.மு.க. நகர்ச் செயலர் கிருஷ்ணபாண்டி, சுரேஷ்பாபு, எஸ்.ஆர். கோபி, உள்ளிட்ட 7 பேர் மீது புகார் கூறப்பட்டிருந்தது. அவர்களுக்கு புறநகர் போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. சம்மனைப் பெற்றுக் கொண்டவர்களில் கோ.தளபதி, கொடி சந்திரசேகர், கிருஷ்ணபாண்டி, சுரேஷ்பாபு ஆகியோர் எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்தனர். விசாரணைக்குப் பின்னர் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.[3]
நிலமோசடி வழக்கில் மதுரை தி.மு.க., மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் வி.கே.குருசாமி மற்றும் அவரது மருமகன் பாண்டியனும் கைது செய்யப்பட்டனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.[4]
திருப்பூரில் மில் ஒன்றை அபகரித்தாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜே. அன்பழகன் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டமன்றத்தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் பிணையில் விடுவிக்கவேண்டும் என நீதிமன்றத்தில் கோரினார். சென்னை தி.நகரில் நடந்த ஒரு நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாகவும் முன்பிணை கோரியிருந்தார். இந்த இரு வழக்குகளையும் ஆராய்ந்த நீதிபதி அவரை சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு வசதியாக கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றி, அங்கிருந்து தினமும் சட்டசபைக்கு அவரை அழைத்துவர வேண்டும் என்று கூறினார்.[5]
கரூர் தளவாபாளையம் பகுதியை சேர்ந்த, மணி & அவரது மனைவி பார்வதியின் நிலத்தை மோசடி செய்துவிட்டதாக கூறப்படும் வழக்கில் தி.மு.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளர் வாசுகியின் கணவர் முருகேசன் மற்றும் அவரது தம்பி ரவிக்குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.[6]
ஈரோட்டுக்கு அருகிலுள்ள பெருந்துறையில் ராமசாமி, மலர்விழி தம்பதியின் நிலத்தை அபகரித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் என்கேகேபி ராஜா, ஈரோடு மேயர் முருகேஷ், திமுக மாவட்ட துணைச் செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.[7]
மதிமுக நிர்வாகி கண்ணையன் என்பவர் பொன்மலை திமுக செயலாளர் தர்மராஜ் மீது நில மோசடி புகார் கொடுத்ததின் விளைவாக தர்மராஜ் கைது செய்யப்பட்டார் [8]
நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் கதிர்வேல் என்பவர் திருச்சி போலீஸ் ஆணையரிடம் கொடுத்துள்ள புகாரில் திருச்சியில் உள்ள ஓட்டல் காஞ்சனா தனக்குச் சொந்தமானது என்றும் அதை முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தூண்டுதலின்பேரில் சிலர் பறித்துக்கொண்டதாக கூறியுறள்ளார். அதைத்தொடர்ந்து தான் கைது செய்ப்படக்கூடும் என்று முன்பிணை கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி மாலா, ஆகத்து 14, 2011ம் தேதி வரை கே.என்.நேருவை கைது செய்ய காவல்துறையினருக்கு தடை விதித்தார்.[9]
முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதனும் அவரது கூட்டாளி கவுரிசங்கரும் இணைந்து போலி ஆவணம் தயாரித்து சென்னை முகப்பேரை அடுத்த நொளம்யூர் பகுதியிலுள்ள அண்ணாமலை அவென்யூ என்ற குடியிருப்பு பகுதியின் 20 ஏக்கர் நிலத்தை அபகரித்துக் கொண்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக கைது செய்யப்பட்டனர்.[10][11] இவர்கள் இருவரும் ஆகத்து 8, 2011 முதல் குண்டர் சட்டத்தின் படி கைதாகியுள்ளனர்.[12][13][14][15]
மு. க. அழகிரி இயக்குநராக உள்ள தயா சைபர் பார்க் அதிகாரி காவல்துறை அழகிரி மற்றும் அவர் குடும்பத்தினரை கைது செய்ய தடை விதிக்க கோரிய வழக்கை உயர் நீதி மன்றம் அவர்கள் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை எதையும் சுமத்தவில்லை என்பதால் நிராகரித்தது.[16]
பல்லடத்திற்கு அருகிலுள்ள அவினாசிபாளையத்திற்கு அருகிலுள்ள வெள்ளம்பட்டி ஊரிலுள்ள வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான 15.16 ஏக்கர் நிலத்தை அபகரித்ததிற்காக முன்னாள் பொங்கலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ எசு மணி கைது செய்யப்பட்டார்.[17] இவ்வழக்கு தொடர்பாக முன்னாள் திமுக அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ் பாரி கோவையில் [18] கைது செய்யப்பட்டார்.[19]
மதுரையை சேர்ந்த திமுக பொதுக் குழு உறுப்பினர் மின்னல்கொடி காவல்துறையினரால் கைது செய்துப்பட்டுள்ளார். ராஜபாளையத்தில் உள்ள தனக்குச் சொந்தமான 40 சென்ட் நிலத்தை மோசடியாக தனது பெயரில் பதிவு செய்து விட்டார் என உச்சம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த முருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.[20]
திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவும் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமியும் திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்காக தனது நிலத்தை பறித்துக் கொண்டதாக துறையூரைச் சேர்ந்த மருத்துவர் சீனிவாசன் என்பவர் புகார் கொடுத்தித்ததின் விளைவாக கைது செய்யப்பட்டனர் [21] இவ்வழக்கில் லால்குடி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செளந்தரபாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார் [22] இவ்வழக்கு தொடர்பாக கே.என்.நேருவின் தம்பி இராமஜெயம் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.[23] கே. என். நேருவின் பிணை மனுவை விசாரித்த நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து விட்டது.[24] கே என் நேருவுக்கு மதுரை உயர் நீதிமன்றக்கிளை அனைத்து வழக்குகளிலும் பிணை வழங்கியது.[25]
விழுப்புரத்தில் அரசு ஊழியர் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான பூங்கா உள்ளிட்ட இடங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார் என்று அந்த சங்கத்தின் அப்போதைய தலைவர் நாராயணசாமி அளித்த புகாரின் காரணமாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டார்.[26][27] பொன்முடியின் பிணை மனுவை விசாரித்த நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து விட்டது.[28]
நாமக்கல்லை அடுத்த கீரம்பூரைச் சேர்ந்த வசந்தி போலி ஆவணம் தயார் செய்து தங்கள் நிலத்தை பறித்துக்கொண்டதாக புகார் கொடுத்த வழக்கி காரணமாக திருச்செங்கோடு நகராட்சித் தலைவர் நடேசன் கைது செய்யப்பட்டார். இவர் திமுக நகரச் செயலாளராகவும் உள்ளார் [29].[30]
சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில், கோயம்புத்தூர் ஜூவல்லர்ஸ் பெயரில் 2,100 சதுர அடியில் உள்ள இடத்தை தங்களுக்கு வேண்டும் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவரது மகன் ராஜேந்திரன், அவரது உதவியாளர் சேகர் மற்றம் சிலர் (மொத்தம் 16 பேர்) மிரட்டியதாக கோயம்பத்தூர் ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடையை நடத்தி வரும் பிரேம்நாத் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.[31]
முன்னாள் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன், நடுவக்குறிச்சியை சேர்ந்த குப்பையா பாண்டியன் தனது 3 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.[32]
வேளச்சேரியில் காலி இடங்களை அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பெருங்குடி திமுக செயலாளர் & கவுன்சிலர் எஸ்.வி. ரவிச்சந்திரன் குண்டர்கள் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.[33]
ஆத்தூர் (சேலம்) நகர திமுக துணைச் செயலாளர் ஏ.பி.சேகர் (51), ஆத்தூர் புதுக்கடை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஆனந்தன் (40) என்பவர் கொடுத்த புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டார்.[34]
திமுகவின் குற்றச்சாட்டுக்கள்
திமுகவினரை மட்டுமே குறிவைத்து நில அபகரிப்பு வழக்குகள் தொடரப்படுவதாகவும், 2006 முதல் 2011 வரையிலான சம்பவங்கள் மட்டுமே விசாரிக்கப்படுவதாகவும், 2001ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற குற்றங்கள் பற்றி விசாரிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.[35]
அதிமுக கட்சியினர்
சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராம்மூர்த்தி என்பவரின் நிலத்தை அவரது உறவினர்கள் மூவர் அதிமுக நகரச்செயலாளர் ரவிசேகர் என்பவருக்கு விற்றுவிட்டதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.[36]
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் பஞ்சாயத்து துணை தலைவர் அ.தி.மு.க.,மாவட்ட பிரதிநிதியான மூர்த்தி, பரசுராமன் மற்றும் மாரிமுத்து ஆகிய மூவருக்கும் திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள தென்பள்ளிப்பட்டு சாலையில் இருந்த சொந்தமான நிலம் 4 ஏக்கர் 60 சென்ட்டை, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மோசடி செய்து பெற்று கொண்டு, பணத்தை கொடுக்க மறுத்து வருகிறார், எனக்கு பணத்தையோ அல்லது மோசடி செய்து எழுதி வாங்கி கொண்ட நிலத்தையோ திரும்ப பெற்று தர வேண்டும் என, கடந்த 20ம் தேதி போலீசில் புகார் செய்தார். புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அ.தி.மு.க., தலைமையும் இந்த புகார் மீது விசாரணை நடத்தியது. இந்த புகார் தொடர்பாக அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், அ.தி.மு.க., சார்பில் மூர்த்தி மற்றும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருதரப்பையும் அழைத்து நேற்று விசாரணை நடத்தினர்.அப்போது, புகாரை வாபஸ் பெறுமாறு மூர்த்திக்கு, பன்னீர்செல்வம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மூர்த்தி, எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்து புகார் மனுவை வாபஸ் பெறுவதாக எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தார்.மனுவை பெற்று கொண்ட போலீஸார், எஸ்.பி., சாமுண்டீஸ்வரி அலுவலக வேலை காரணமாக சென்னை சென்றுள்ளார். அவரிடம் நீங்கள் நேரில் சந்தித்து காரணத்தை கூறி புகார் மனுவை வாபஸ் பெற்று செல்லுமாறு கூறி அனுப்பி விட்டனர்.[37]
அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது மேலும் ஒரு நிலஅபகரிப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கோயில் அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த சிவாஜி என்பவருக்கு சொந்தமான நிலத்தை மிரட்டி எழுதி வாங்கியதாக சிவாஜியின் மருமகன் அரவிந்தன் புகார் தெரிவித்துள்ளார். ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.10 லட்சத்திற்கு வாங்கியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.[38]
முன்னாள் பாமக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நெடுஞ்செழியன் காந்தி டிரஸ்ட் நிலத்தை அபகரித்ததாக பொத்தனூர் மக்கள் குடிமை இயத்தை சேர்ந்த மதியழகன் என்பவர் புகார் கொடுத்ததின் பேரில் கைது செய்யப்பட்டார்.[40][41]
தொழில் துறையினர்
கோவையைச் சேர்ந்த பரிசுசீட்டு அதிபர் மார்ட்டின் மீது ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த எம்.அங்குராஜ் என்பவர் பூந்தமல்லி நசரத்பேட்டை காவல் நிலையத்தில் தனது மாமாவுடன் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் 2 ஏக்கர் 35 சென்ட் நிலத்தை அபகரித்துக் கொண்டார் என புகார் கொடுத்தார். இந்த வழக்கில் மார்ட்டின் அவரது உறவினர் பெஞ்சமின் உள்பட 7 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பிணை பெற்றுள்ளனர். அவர்கள் தினமும் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்து போட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. மார்ட்டின் மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், மேலும் மேலும் நிலமோசடி புகார்கள் வருவதாலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.[42] மார்ட்டின் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.[43]
மதுரை காளவாசல் பகுதியில் ஸ்ரீ என்ற மருத்துவமனையை மருத்துவர் நவநீதகிருஷ்ணன், அரசு மருத்துவர் சரவணப்பெருமாள், அவரது மனைவி, பதிவுத்துறை டிஐஜி அண்ணாமலை மற்றும் அழகிரி வட்டாரத்தைச் சேர்ந்த பொட்டு சுரேஷ் ஆகியோர் மிரட்டி வாங்கி விட்டதாக அந்த மருத்துவமனையை முன்பு வைத்திருந்தவர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரையும் கைது செய்தனர் [44]