நாமக்கல் (Namakkal) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும், மாநகராட்சி ஆகும். நாமக்கல் மாநகராட்சி ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றதாகும். இது "குப்பை இல்லா நகரம்" என்னும் சிறப்பையும் பெற்றதாகும். 2011-இல் நகராட்சியானது கொண்டிசெட்டிப்பட்டி, கொசவம்பட்டி, பெரியப்பட்டி, காவேட்டிப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், தும்மங்குறிச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலைப்பட்டி, சின்ன முதலைப்பட்டி ஊர்களை இணைத்து விரிவுபடுத்தப்பட்டது. 2024 ல் நாமக்கல் நகராட்சிக்கு அருகாமையில் உள்ள வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசானம், மரூர்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய ஊராட்சிகள், நாமக்கல் நகராட்சியுடன் இணைத்து நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
வரலாறு
நாமக்கல் மலைக்கோட்டை
"நாமகிரி" என்று அழைக்கப்படும் 65 மீட்டர் உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இவ்வூரின் பழைய பெயர் 'ஆரைக்கல்' என்பதாகும். இப்பெயர் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாறையின் மீது கோட்டை ஒன்று உள்ளது இதை ராமச்சந்திர நாயக்கர் கட்டியது என கருதப்படுகிறது. இதை மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது.[1] பின்னாளில் திப்பு சுல்தான் இப்பாறைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார் என்றும் நம்பப்படுகிறது. மகாத்மா காந்தியின் பொதுக்கூட்டம் இப்பாறை அருகே நடைபெற்றது.[2] அரிசனம் இயக்கத்திற்கு ஆதரவு வேண்டி 1934 பிப்ரவரி 14 அன்று நாமக்கலில் மகாத்மா காந்தி பேசிய கூட்டத்திற்கு 15,000 மக்கள் வந்திருந்தனர்.[3]
இப்பாறையின் ஓரு புறம் அரங்கநாத பெருமாள் குகைக்கோயில் உள்ளது, மறுபுறம் நரசிம்ம பெருமாள் குகைக்கோயில் உள்ளது. இக்கோயில்கள் கி.பி 784இல் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.[4]
நாமகிரி என்பதே தமிழில் நாமக்கல் எனப்படுவதாக கருதப்படுகிறது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 55,145 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 27,366 ஆண்கள், 27,779 பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 90.76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.04%, பெண்களின் கல்வியறிவு 86.58% ஆகும். மக்கள் தொகையில் 5,002 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[5]
உள்ளூர் மக்களின் சுய முயற்சியால் சரக்கு போக்குவரத்து துறையில் நாமக்கல் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. 10,000 க்கும் அதிகமான லாரி (Lorry) என்னும் சுமையுந்து வண்டிகள் இங்கு உள்ளன. சுமையுந்து வண்டிகளின் உடல் அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது. சுமையுந்து தொடர்பான பட்டறை என்னும் தொழில் கூடங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் இங்கு உள்ளது.
நகர்ப்புறத்தில் சுமையுந்து தொழில் சிறப்படைந்ததை போல கிராமப்பகுதியில் கோழி வளர்ப்பு சிறப்படைந்துள்ளது. கோழி வளர்ப்பில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தொடர்பான கோழி & மாடு தீவன (Feeds) ஆலைகள் பத்துக்கும் மேல் இங்கு உள்ளன. தமிழகத்தின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 விழுக்காட்டை பூர்த்தி செய்கிறது.[6]
மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் சேக்கோ (Sago) எனப்படும் சவ்வரிசி ஆலைகள் அதிக அளவில் உள்ளன.
கோவில்கள்
நாமக்கல் ஆஞ்சநேயர்
இராமசந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய[சான்று தேவை] நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் சிறிய படிகளை பாறையை (மலையை) செதுக்கி செய்துள்ளனர். இம்மலையில் இருந்து பார்த்தால் நாமக்கலின் சுற்று வட்டாரம் தெளிவாக தெரியும்.
அருள்மிகு நரசிம்மர்-நாமகிரி தாயார் கோயில் நுழைவாயில்
நாமக்கல் மலைகோட்டையின் கிழக்கில் ஒரு பூங்காவும் (நேரு பூங்கா) தென் மேற்கில் ஒரு பூங்காவும் (செலம்ப கவுண்டர் பூங்கா) உள்ளது. நேரு பூங்காவில் புதியதாக படகு சவாரியும் உள்ளது.
நாமக்கல் நரசிம்மர் திருக்கோயில் நாமக்கல் மலையின் (மலைக்கோட்டை) மேற்கு புறம் உள்ளது. நரசிம்மரின் சிலை மலையை குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரித் தாயாரின் கோயில் மலையை குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஒரு குடைவரை கோயில், இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
புகழ்மிக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் நரசிம்மர் நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இவர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள ஆஞ்சனேயருக்கு கோபுரம் கிடையாது. உயர்ந்த ஆஞ்சநேயர் சிலைகளுள் இச்சிலையும் ஒன்று.
மலையின் கிழக்குபுறம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு திருவரங்கன், 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடன் மீது படுத்தவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இது ஒரு குடைவரை கோயில், இதுவும் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
நாமக்கலில் இருந்து துறையூர் செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் கூலிப்பட்டி என்ற இடத்தில் சிறிய குன்றில் முருகன் கோயில் உள்ளது.
நாமக்கலிருந்து கரூர் செல்லும் வழியிலுள்ள கீரம்பூர் எட்டுக்கை அம்மன் கோவில், வட நாட்டில் வணங்கப்படும் விஷ்ணு துர்க்கைக்கு ஒப்பாகும்.
நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் தத்தகிரி முருகன் ஆலயம் உள்ளது. இங்கு தத்தாஸ்வரேயர் சன்னதியும் உள்ளது. இக்கோயில் சேந்தமங்கலத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு சுயம்பிரகாச அவதூத சரஸ்வதி சுவாமிகள் சமாதி நிலையை அடைந்துள்ளார்.
பெரியசாமி கோவிலின் நுழைவு வாசல் இதன் அதிகாரபூர்வ பெயர் ஒட்டடி பெரியசாமி கோவில்.
நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் முத்துக்காப்பட்டிக்கு அருகில் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள புதுக்கோம்பை என்ற இடத்தில் பெரியசாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கட்டடம் ஏதும் இல்லை. கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள தோப்பில் இக்கோயில் அமைந்துள்ளது. வார இறுதி நாட்களில் ஏராளமான மக்கள் வருவர். இக்கோயிலுக்கு முத்தக்காப்பட்டியில் இருந்து சிறிது தொலைவு உள்ளே செல்ல வேண்டும். இங்கு செல்வதற்கு சிற்றுந்து (Mini Bus) வசதி உள்ளது.
நைனாமலை உச்சியிருள்ள வரதராச பெருமாள் கோவில்
நைனாமலை உச்சியில் நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. மலை மீது ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும். 2500லிருந்து 3000 படிக்கட்டுக்கள் வரை உள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமை பெருந்திரளான மக்கள் இங்கு வருவர். இக்கோயில் புதன்சந்தையிலிருந்து, சேந்தமங்கலம் செல்லும் வழியில் உள்ளது. தற்போது மலை உச்சியிலுள்ள கோவிலுக்கு கார் போன்ற ஊர்திகள் செல்ல பாதை அமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது.
ஆகாயகங்கை அருவி நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது. கொல்லி மலையில் அமைந்துள்ள கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் அருகில் ஆகாயகங்கை அருவி உள்ளது. இங்கு செல்ல தமிழக அரசின் சுற்றுலா துறை படிக்கட்டுக்கள் அமைத்துள்ளது. இதில் சுமார் 1500 படிகள் உள்ளது. அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது.
நாமக்கலிருந்து - கரூர் செல்லும் வழியில் பரமத்தி-வேலூர் அருகேயுள்ள கொளக்காட்டுப்புதூரிலுள்ள தங்காயி அம்மன் கோவில் உள்ளது.
நாமக்கலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைதோட்டம் (நருவலூர் புதூர் கிராமம்) என்ற பகுதி இருக்கும் ஸ்ரீ ஏரிக்கரை முத்துசாமி / கருப்பண்ண சாமி மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு மும்பை மற்றும் டெல்லி இருந்து பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் இப்பகுதி மக்கள் ஏரிக்கரை முத்துசாமிக்கு திருவிழா நடத்துகின்றனர்.
நாமக்கல்லில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வையப்பமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகோவில்.முருகன் திருவிளையாடல் நடந்தபுகழ்பெற்ற, பழனிக்குநிகரான தலமாகும்
நாமக்கல் வழியாக சேலத்தில் இருந்து கரூருக்கு அகலப் பாதை அமைக்கும் திட்டம் 1996-97 ல் ஒப்புதல் பெற்று நிறைவடைந்துள்ளது. மல்லூர், இராசிபுரம், புதுச்சத்திரம், நாமக்கல், லத்துவாடி, மோகனூர், வாங்கல் வழியாக புதிய சேலம் - கரூர் இருப்புப்பாதை திட்டம் செல்கிறது. காலையிலும் மாலையிலும் இத்தடத்தில் சேலம்-கரூர், கரூர்-சேலம் பயணிகள் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. பழனி - சென்னை தொடர் வண்டி இயக்கப்படுகின்றன.[7] தற்போது நாகர்கோவில் - பெங்களூர் தொடர் வண்டி இயக்கபடுகின்றது.[8] 2014 ஆம் ஆண்டு முதல் வாரம் இருமுறை நாகர்கோவில் - கச்சிக்குடா விரைவு தொடர் வண்டி நாமக்கல் வழியாக செல்கிறது.[9][10]