இரத்தினகிரி பாலமுருகன் கோயில்
இரத்தினகிரி பாலமுருகன் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இரத்தினகிரி கீழ்மின்னல் கிராமப் பகுதியின் திருமணிகுண்டத்தில் உள்ள முருகன் கோவில் ஆகும்.[1][2] இது 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, மேலும் 14 ஆம் நூற்றாண்டின் கவிஞர் அருணகிரிநாதரால் குறிப்பிடப்பட்டது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற தமிழ் பழமொழிக்கு ஏற்ப, இது ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது.[3] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 215.09 மீ. உயரத்தில், (12°56′28″N 79°14′42″E / 12.9412°N 79.2451°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இரத்தினகிரி கீழ் மின்னல் என்ற பகுதியில் சிறு குன்றின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. வரலாறுஇரத்தினகிரி குன்றின்மீது செங்கற்களாலும், சுதையாலும் கட்டப்பட்ட ஒரு பழமையான முருகன் கோயில் இருந்தது. அதில் பால முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோரின் சிறிய சிலைகள் இருந்தன. இக்கோயிலுக்கு அருகிலுள்ள கீழ்மின்னல் கிராமத்தில் இருந்து சென்றுவர சரியான பாதை கிடையாது. அந்தப் பழடைந்த முருகன் கோயிலுக்கு அர்ச்சகர் வாரத்திற்கு இரண்டு நாட்கள் பூசை செய்வார். இந்நிலையில் 1968 மார்ச் 20 ஆம் நாள் சச்சிதானந்தம் என்னும் மின்வாரிய ஊழியர் குன்றேறி கோயிலுக்கு வந்தார். கோயில் அச்சகரிடம் கற்பூரம் காட்டச் சொன்னார். அவர் கற்பூரம் இல்லை என்றார். சரி ஊதுபத்தியையாவது காட்டுங்கள் என்றார். அவர் அதுவும் இல்லை என்றார். இதனால் மனம் கொதித்த சச்சிதானந்தம் முருகா உனக்கு ஒரு கற்பூரத்துக்கு கூட வழி இல்லையா என ஆவேசப்பட்டுள்ளார். பிறகு தன் ஆடையைக் கிழித்து கோவணம் கட்டிக் கொண்டு அங்கேயே அமர்ந்துவிட்டார். தன் பெயரை பாலமுருகனடிமை என்று மாற்றிக் கொண்டார். பேசுவதை நிறுத்திக் கொண்டார். யாராவது தங்கள் குறைகளையும் துன்பங்களையும் பற்றிக் கூறினால் அதற்கு தகுந்த பதிலை காகிதத்தில் எழுதிக் கொடுப்பார். அதன் பிறகு பாலமுருகன் கோயிலை நல்லமுறையில் கட்டி வேண்டிய வசதிகள் செய்வதை தன் வாழ்நாள் நோக்கமாக கொண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். கணபதி ஸ்தபதியைக் கொண்டு கோயிலை கட்டி விரிவுபடுத்தினார். 1968 இல் நித்திய பூசைக்குக் கூட வழியில்லாமல் இருந்த கோயிலை 1984 வாக்கில் நாள்தோறும் இருகால பூசை, ஆண்டு வருமானம் மூன்று இலட்சத்துக்கு மேல், இருபது இலட்சம் ரூபாய் மதிப்பிற்கு மேற்பட்ட தங்க வெள்ளிக் கவசங்கள், ஆபரணங்கள் என்று பணக்கார கோயிலாக உயர்த்தினார்.[4] சிறப்புகள்ஆடிக் கிருத்திகை அன்று இரத்தினங்களால் ஆன ஆடையால் மூலவர் பாலமுருகன் அலங்கரிக்கப்படுகிறார். ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று மூலவர் பாலமுருகனுக்கு அன்னாபிசேகம் நடைபெறுகிறது.[5][6] கந்த சஷ்டி விழா நடைபெறும் போது பாலமுருகனுக்கு நவரத்தின அங்கி அணிவித்து சிறப்பு செய்யப்படுகிறது.[7] அறுங்கோண வடிவில் தெப்பக்குளம் ஒன்று உருவாக்கப்பட்டு 2023ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 12ஆம் நாள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.[8] திருவிழாக்கள்ஆடிக் கார்த்திகை, கார்த்திகை விளக்கீடு, கந்த சஷ்டி, வைகாசி விசாகம், ஐப்பசி அன்னாபிசேகம், தைப்பூசம் மற்றும் பங்குனி உத்தரம் ஆகியவை இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களாகும். இதர தெய்வங்கள்துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், நந்தி மற்றும் சிம்ம வாகனங்களுடன் வாராகி, கற்பக விநாயகர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[9] பராமரிப்புதமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இக்கோயில் இயங்குகிறது.[10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia