ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் (α-Linolenic acid; ALA) என்னும் கரிமச்சேர்மம் பல்வேறு பொதுவான தாவர எண்ணெய்களிலும், கொழுப்புகளிலும் காணப்படுகின்றது. இதன் கட்டமைப்பைக் கொண்டு அனைத்து ஒருபக்க-9,12,15-ஆக்டாடெக்காடிரையீனோயிக் அமிலம் என்றும்[2], உடலியக்கவியலில் ஒமேகா-3 (18:3; n−3) என்றும் அழைக்கப்படுகின்றது.
ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் முதன்முதலாக ரோல்லெட் என்பவரால் பிரித்தெடுக்கப்பட்டது[3],[4]. கிரீன்-ஹில்டிட்ச்சின் 1930-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் குறிக்கப்பட்டுள்ளது[5]. ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் முதன்முதலாக 1995-ஆம் ஆண்டு செயற்கையான முறையில் தொகுக்கப்பட்டது[6].
விதைகளிலிருந்துப் பெறப்படும் எண்ணெய்கள் ஆல்ஃபா-லினோலெனிக் அமிலத்தின் வளமையான மூலங்களாகும்; உதாரணமாக, காட்டுக்கடுகு, ரேப் விதை, சோயா அவரை, அக்ரூட் பருப்பு, ஆளிவிதை எண்ணெய், சணல்விதை, பெரில்லா எண்ணெய், உருத்திர சடை(சப்ஜா) மற்றும் நார்ச்செடி. ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் அகன்றஇலைத் தாவரங்களின்பச்சைஇலைகளின், ஒளிச்சேர்க்கைக்குக் காரணியாக உள்ள, தைலகாய்டு சவ்வுகளிலிருந்தும் பெறப்படுகிறது[7]. ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் இரண்டு மணி நேரத்திற்கு வெண்ணெயைப் போன்று 177 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்டுள்ளதால், பல்வேறு சமையல்களில் உபயோகமாக உள்ளது [8].