இரிசி சுனக்கு
இரிசி சுனக்கு (Rishi Sunak, பிறப்பு:12 மே 1980)[1] ஐக்கிய இராச்சியத்தின் அரசியல்வாதி ஆவார். இவர் 2022 முதல் 2024 வரை ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவும், 2022 அக்டோபர் 24 முதல் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் உள்ளார். 2024 சூலை முதல் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றுகிறார். இவர் மக்களவையில் 2015 முதல் ஓர் உறுப்பினராகவும், நான்கு முக்கிய துறைகளில் ஒன்றான கருவூலத்துறையின் தலைவராகவும் 2020 முதல் 2022 வரை இருந்தவர்.[2] இவர் ஐக்கிய இராச்சியத்தில் சவுத்தாம்டனில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து 1960களில் குடியேறிய இந்திய (பஞ்சாபு) வமிசாவளி பெற்றோர்களுக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.[3][4][5] வின்செசுட்டர் கல்லூரியில் படித்தார், பிறகு ஆக்குசுபோர்தில் இலிங்கன் கல்லூரியில் மெய்யியல், அரசியல் பொருளாதரம் ஆகிய துறைகளில் படித்து பின்னர் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் புல்பிரைட்டு புலமைப்பரிசில் பெற்று முதுகலை வணிக மேலாண்மைத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பயிலும் பொழுது தன் எதிர்கால மனைவியாகிய அட்சதா மூர்த்தியைச் சந்தித்தார். அட்சதா இந்தியத் தொழில் அதிபரும், இன்போசிசு நிறுவனருமான நா. ரா. நாராயணமூர்த்தியின் மகள் ஆவார். படிப்பு முடிந்ததும், சுனக்கு கோல்டுமன் சாக்சு நிறுவனத்தில் கூடுதல் ஈட்டம் தரும் பாதுகாப்பு முதலீட்டுத் துறை நிறுவனங்களில் பணியாற்றினார். சுனக்கும் அவர் மனைவி அட்சதா மூர்த்தியும் ஐக்கிய இராச்சியத்தில் 222 ஆவது பெரிய பணக்காரர், அவர்களின் மொத்த மதிப்பு £730 மில்லியன் என்று கணக்கிட்டிருக்கின்றார்கள்.[6] இரிசி சுனக் பிரதமராகப் பணியாற்றிய காலத்தில், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தேசிய அரசியலைத் திடப்படுத்தவும் முயன்றார். ஐந்து முக்கிய முன்னுரிமைகளைக் கோடிட்டுக் காட்டினார்: பணவீக்கத்தைப் பாதியாகக் குறைத்தல், பொருளாதாரத்தை வளர்ப்பது, கடனைக் குறைத்தல், தேசிய சுகாதார சேவை காத்திருப்புப் பட்டியலைக் குறைத்தல், ருவாண்டா புகலிடத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் ஆங்கிலேயக் கால்வாயின் சட்டவிரோத சிறிய படகுக் கடவை நிறுத்துதல் போன்றவையாகும். வெளியுறவுக் கொள்கையில், சுனக் உக்ரைன் மீதான உருசியப் படையெடுப்பிற்கு விடையிறுக்கும் வகையில் வெளிநாட்டு உதவி, ஆயுத ஏற்றுமதிகளை அங்கீகரித்தார், இசுரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய தாக்குதல்களுக்குப் பிறகு இசுரேலுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார், அதே வேளையில், காசாப் பகுதியில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார். 2023, 2024 உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சி பெரும் பின்னடைவுகளைச் சந்தித்தது.[7][8][9] இலையுதிர்காலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும், சுனக் சூலை 2024 க்கு உடனடிப் பொதுத் தேர்தலுக்கு அழைத்தார்;[10] பழமைவாதிகள் இந்தத் தேர்தலில் கீர் இசுட்டார்மர் தலைமையிலான எதிர்க்கட்சியான தொழிற் கட்சியிடம் பெரும் தோல்வியடைந்தனர்.[11] இதன்மூலம் 14 ஆண்டுகால பழமைவாத அரசாங்கம் முடிவுக்கு வந்தது. பிரதமர் பதவியை விட்டு வெளியேறிய பிறகு, சுனக் எதிர்க்கட்சித் தலைவரானார், ஒரு நிழல் அமைச்சரவையையும் உருவாக்கினார்.[12][13] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia