கீர் இசுட்டார்மர்
சர் கீர் ரொட்னி இசுட்டார்மர் (Sir Keir Rodney Starmer; கீர் ஸ்டார்மர், பிறப்பு: 2 செப்டம்பர் 1962) என்பவர் பிரித்தானிய அரசியல்வாதியும், வழக்குரைஞரும் ஆவார். இவர் 2024 சூலை முதல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியில் உள்ளார். 2020 முதல் ஐக்கிய இராச்சியத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இவர் தொழிற்கட்சித் தலைவராகவும், 2015 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 2024 பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரிசி சுனக்கிற்குப் பிறகு ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக இசுட்டார்மர் பதவியேற்றார்.[1] இலண்டனில் பிறந்து சரேயில் வளர்ந்த இசுட்டார்மர்,[2] மாநில ரீகேட் இலக்கணப் பள்ளியில் பயின்றார், இப்பள்ளி அவர் மாணவராக இருந்தபோது ஒரு தனியார் பள்ளியாக மாறியது. தாய் யோசபீன் ஒரு செவிலியர், தந்தை ரொட்னி இசுட்டார்மர் ஒரு கருவிசெய்நர் ஆவார்.[3][4] சிறுவயதிலிருந்தே அரசியலில் தீவிரமாக இருந்தார், 16 வயதில் தொழிற்கட்சியின் இளம் சோசலிச அமைப்பில் சேர்ந்தார்.[4] 1985-இல் லீட்சு பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டத்தில் பட்டம் பெற்று, 1986-இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் செயின்ட் எட்மண்ட் ஹாலில் குடிமைச் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[5] வழக்குரைஞராக அழைக்கப்பட்ட பிறகு, இசுட்டார்மர் மனித உரிமைகளில் சிறப்புத் தகைமை பெற்று குற்றவியல் பாதுகாப்புப் பணிகளில் முக்கியமாகப் பயிற்சி பெற்றார். இவர் வட அயர்லாந்து காவல் வாரியத்தின் மனித உரிமைகள் ஆலோசகராகப் பணியாற்றினார்.[5] 2002 இல் அரச ஆலோசகராக நியமிக்கப்பட்டார். வட அயர்லாந்தில் காவல் துறையில் அவரது பணி ஒரு அரசியல் வாழ்க்கையைத் தொடரும் முடிவில் முக்கிய செல்வாக்கு செலுத்தியதாக இசுட்டார்மர் குறிப்பிட்டார்.[6] அவர் பொதுமக்கள் வழக்குகளின் இயக்குநராக இருந்த காலத்தில், பல முக்கிய கொலை வழக்குகளை கையாண்டார். 2015 பொதுத் தேர்தலில் 17,048 வாக்குகள் பெற்று மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] ஒரு பின்வரிசை உறுப்பினராக, இவர் 2016 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் வாக்கெடுப்பில் தோல்வியுற்ற "ஐரோப்பாவில் பிரித்தானியாவின் வலிமை" பரப்புரையை ஆதரித்தார்.[8] அன்றைய தொழிற்கட்சித் தலைவர் செரமி கோர்பின் இவரை குடியேற்றத்திற்கான நிழல் அமைச்சராக நியமித்தார், ஆனால் கோர்பினின் தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நிழல் அமைச்சர்களின் பரந்த பதவி விலகல்களின் ஒரு பகுதியாக சூன் 2016 இல் இந்தப் பொறுப்பிலிருந்து விடுபட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான (நிழல் வெளியுறவுச் செயலாளராக கோர்பினின் கீழ் அந்த ஆண்டு ஒரு புதிய பதவியை ஏற்றுக்கொண்ட இசுட்டார்மர், பிரெக்சிட்டு மீதான இரண்டாவது வாக்கெடுப்பை முன்மொழிந்தார். 2019 பொதுத்தேர்தலில் தொழிற்கட்சியின் தோல்விக்குப் பிறகு செரமி கோர்பின் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, இசுட்டார்மர் 2020 இல் கட்சித் தலைவரானார்.[9][10][11] தொழிற்கட்சித் தலைவராக, இசுட்டார்மர் கட்சியை இடதுசாரி அரசியலில் இருந்து விலகி மைய அரசியலை நோக்கி மாற்றினார்.[12] கோர்பினின் தலைமையின் போது சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருந்த கட்சிக்குள் இருக்கும் யூத எதிர்ப்புக் கொள்கையை ஒழிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அவரது ஆதரவாளர்கள் அவரது யூத எதிர்ப்பு சீர்திருத்தங்களுக்காகவும், முந்தைய தலைமையின் பின்னர் வாக்காளர்களிடம் தொழிலாளர் நம்பகத்தன்மையை மேம்படுத்த உதவியதற்காகவும் அவரைப் பாராட்டியிருந்தனர், அதே வேளையில் அவரது விமர்சகர்கள் இடதுசாரி தொழிலாளர் உறுப்பினர்களை நியாயமற்ற முறையில் நடத்துவதாக குற்றம் சாட்டினர்.[13][14] 2023 ஆம் ஆண்டில், இசுட்டார்மர் தனது அரசாங்கத்திற்காக பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம், சுத்தமான எரிசக்தி, குற்றம் மற்றும் கல்வி போன்ற பிரச்சினைகளை இலக்காகக் கொண்டு ஐந்து திட்டங்களைத் தொடங்கினார். 2024 பொதுத் தேர்தலில் தொழிற்கட்சியை மகத்தான வெற்றிக்கு அழைத்துச் சென்று, பதினான்கு ஆண்டுகால பழமைவாத ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.[15] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia