கரமனையாறுகரமனா ஆறு (Karamana River, கரமனையாறு) என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் நகரின் வழியாகப் பாயும் ஒரு ஆறு ஆகும். இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் (சகாயாத்ரி மலைகள்) தெற்கு முனையில் அகத்திய மலையில் உற்பத்தியாகிறது. இந்த ஆறு 66 கி. மீ. மேற்கு நோக்கிச் சென்று கோவளம் அருகே பாணத்துரா என்ற இடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது.[1] திருவனந்தபுரம் நகரின் புறநகர்ப் பகுதியான கரமனா பகுதியில் பாய்வதன் மூலம் இந்த ஆற்றிற்கு கரமனா எனப் பெயரிடப்பட்டது. நீர்ப்பிடிப்புப் பகுதி பெரும்பாலும் காடுகளாகவும், தென்னை, மரவள்ளிக்கிழங்கு, மிளகு, வாழைப்பழம், நெல் போன்ற கலப்பு வறண்ட காலப்பயிர் பயிரிடப்படும் இடங்களாக உள்ளது.[2] ![]() ஆற்றோட்டம்கரமனா ஆறு திருவனந்தபுரம் மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அகத்தியமலையில் உற்பத்தியாகிறது. கரமனா ஆரம்பத்தில் பேப்பரா காட்டுயிர் உய்விடம் வழியாக பெப்பரா நீர்த்தேக்கத்தில் பாய்கிறது. இது திருவனந்தபுரம் மாவட்டத்தின் பல மலைப்பாங்கான கிழக்கு நகரங்களான மீனங்கால், சேரப்பள்ளி, உத்தரம்கோடு, ஆரியநாடு, உழமலக்கல், முண்டேலா, பெரும்குளம் மற்றும் அருவிக்கரை வழியாகச் செல்கிறது. அருவிக்கரையில் கரமனா ஆற்றின் குறுக்கே அருவிக்கரை அணை கட்டப்பட்டுள்ளது. கீழ்நோக்கி ஆறு திருவிதாங்கூர் சமவெளியில் நுழைந்து இரும்பா, நெட்டாயம், பேயாடு, கரிமாங்குளம், பெருகாவு, விளாவூர்க்கல், சூழட்டுக்கோட்டா, பாப்பனம்கோடு, நேமம் மற்றும் திருவல்லம் போன்ற நகரங்களைக் கடந்து செல்கிறது. திருவல்லம் என்ற இடத்தில் கரமனா ஆறு இரண்டாகப் பிரிகிறது. இதில் வடக்குப் பகிர்மானம் பூந்துறை அருகே அரபிக்கடலிலும், தெற்குப் பகிர்மானம் பொழிக்கரை முகத்துவாரத்திலும் கடலில் கலக்கின்றது. எடையார் தீவு இரண்டு கிளையாறுகளுக்கிடையே அமைந்துள்ளது. துணை ஆறுகள்கடல் மட்டத்திலிருந்து சுமார் 1600 மீ உயரத்தில் அகத்தியர் மலையில் கரமனா ஆறு உற்பத்தியாகிறது. ஆற்றின் பிறப்பிடமான சிகரங்கள் செம்முஞ்சி மொட்டை மற்றும் அதிரமலை என்றும் அழைக்கப்படுகின்றன. இதன் மேல் கிளை ஆறுகள் காவிரியாறு, ஆட்டையாறு, வையப்படையாறு மற்றும் தொடையாறு ஆகியனவாம். இந்த ஆறு தென்மேற்கு திசையில் 66 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது.[3] ![]() கரமனா ஆறின் மிக நீளமான கிளை ஆறு கிள்ளியாறு ஆகும். இது 24 கிலோமீட்டர் தூரம் நீளமுடையது. கரமனா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஐந்து அணைக்கட்டுகள், ஆற்றின் நீரோட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதன் மூலம் ஆற்று நீரின் ஒரு பகுதி கோச்சார் வாய்க்காலில் திருப்பி விடப்படுகிறது. இதன் மூலம் பத்மநாபசுவாமி கோயிலின் வெளியே உள்ள பத்மதீர்த்தம் நீர் பெறுகிறது. கிள்ளியாற்றின் கரையோரத்தில் பல கோயில்கள் உள்ளன, அவற்றில் மிகவும் பிரபலமானது ஆற்றுக்கல் கோயில்.[4] கிள்ளியாறு நெடுமங்காடு வழியாகச் செல்கிறது. இதன் படுகையில் பறவை விலங்கினங்கள் நிறைந்துள்ளன. இந்த ஆறு பொழிக்கரை முகத்துவாரம் வழியாக அரபிக்கடலில் கலக்கிறது. இதன் இறுதிப் பகுதியில், ஆறு கடலுக்கு இணையாக ஓடுகிறது. இங்குள்ள ஆறு இடையாறு என்று அழைக்கப்படுகிறது.[1] அணைகள்கரமனா ஆற்றில் இரண்டு முக்கியமான அணைகள் உள்ளன. இவை 1930களில் கட்டப்பட்ட அருவிக்கரை அணை மற்றும் 1983இல் கட்டப்பட்ட மேல் நீரோடையில் அமைந்துள்ள பேப்பரா அணை ஆகும். நகருக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் நோக்கில் அருவிக்கரை அணைக் கட்டி முடிக்கப்பட்டது. திருவனந்தபுரம் நீர்ப் பணிகள் 1933-ல் வெல்லிங்டன் பிரபுவால் திறக்கப்பட்டு இன்றும் நகரத்திற்கு கரமனா ஆற்றிலிருந்து தண்ணீரைப் பெற்று விநியோகிக்கும் பயன்பாட்டில் உள்ளது.[5] நகரத்தில் நீர் விநியோக வலையமைப்பை அதிகரிக்க ஜப்பான் நாட்டுப் பன்னாட்டு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பேப்பாரா அணையானது கரமனா ஆற்றின் அனைத்து மேல் துணை ஆறுகளையும் ஒருங்கிணைத்து அருவிக்கரை அணைக்கு நீர் வருவதை ஒழுங்குபடுத்துவதாகும். ஒரு காலத்தில் கரமனா சிறப்பம்சமாக இருந்த வெள்ளப்பெருக்கை நீக்குவதில் பேப்பாறை அணை முக்கிய பங்காற்றியுள்ளது. பேப்பாறையில் 3 மெகாவாட் நீர்மின் நிலையமும் உள்ளது.[5] பாலங்கள்கரமனா ஆற்றின் குறுக்கே பல பாலங்கள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை 66 கரமனா ஆற்றைக் கடக்கும் இடத்தில் மிகப்பெரிய பாலம் உள்ளது. இது லெப்டினன்ட் கர்னல் ஹார்ஸ்லி என்பவரால் கட்டப்பட்டது. திருவிதாங்கூர் வரலாறு பற்றிய ஆரம்பக்கால ஆங்கிலக் கட்டுரையின் ஆசிரியர் இவராவார். மேலும் இப்பணிகள் 1853-ல் தொடங்கப்பட்டது.[6] மற்ற முக்கியமான பாலங்கள் திருக்குண்ணாபுரம், மாங்காட்டுக் கடவு, குண்டமன் கடவு, வெள்ளைக்கடவு, ஜகதி பாலம், ஆரியநாடு பாலம், அருவிக்கரை (அணையில்), மருதூர் கடவு முதலியன.[7] பல்லுயிர்கரமனா ஆற்றுப் படுகையானது வெப்பமண்டல பொதுவான தாவரங்களைக் கொண்டுள்ளன. காட்டுக் கரும்பு, மூங்கில், அலையாத்தி தாவரங்கள், அல்லி மற்றும் தென்னை மரங்கள் ஆகியவை இதில் அடங்கும். திருகு பைன் அல்லது பாண்டனஸ் என்பது ஆற்றின் கரையில் காணப்படும் மற்றொரு பொதுவான இனமாகும். செர்பெரா ஒடோலம், மலையாளத்தில் ஓதலம் என்று அழைக்கப்படும். ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் காணப்படுகிறது.[8] முத்துப்புள்ளி மீன், செக்காலி, கரியிடா, பருமினலி, செறுமீன், வாளை, நெடுமீன், ஆரல், மாலவு மற்றும் பாவல் போன்ற மீன் சிற்றினங்கள் கரமனா ஆற்றில் காணப்படுகின்றன.[1] சூழலியல் சீர்சேடுகள்கரமனா ஆறு சமீப ஆண்டுகளாக மாசுபாடு காரணமாக, அமிலத்தன்மை மற்றும் மீன் இறப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. ஆற்றின் நீரின் தரம் மோசமடைந்ததற்கான காரணங்களாக, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மற்றும் வீட்டு மற்றும் தொழிற்சாலை கழிவுகளை ஆற்றில் வெளிறும் கழிவுகள் ஆற்றில் கலப்பது, ஆற்றுப்படுகை பகுதியில் சுற்றுலாவின் ஒழுங்குபடுத்தப்படாத வளர்ச்சி ஆகியவை அடங்கும். இதன் விளைவாக ஆற்றின் நீரில் கரைந்த பிராணவாயுவின் அளவு குறைந்து, ஆற்றின் கீழ்ப்பகுதியில் மீன்கள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.[9] ஆற்று மணல் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது மற்றொரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது.[5] இலக்கியம் மற்றும் இசையில்கரமனா ஆற்றின் அழகும், காடுகளின் வழியாகச் செல்வதும் சமசுகிருதத்தில் காட்டின் மாலை என்பதைக் குறிக்கும் வகையில் வனமாலா என்ற பெயரைப் பெற்றது. சமண துறவியான உத்யோதன சூரியின் 8ஆம் நூற்றாண்டின் பிராகிருத நூலான குவலயமாலாவில் இது 'மகரகர' ஆறு என்று குறிப்பிடப்படுகிறது.[7] கரமனா ஆறு கேரளாவில் இசையின் வளர்ச்சியுடன் நெருக்கமான தொடர்புடையது. ஆற்றுடன் தொடர்புடைய பாடகர்கள், வாத்தியக் கலைஞர்கள் மற்றும் இசையமைப்பாளர்களாக, இரவிவர்மன் தம்பி, வடிவேலு, நீலகண்ட சிவன் மற்றும் கே. எஸ். சித்ரா ஆகியோர் அடங்குவர். இவர்களைத் தவிர, இசையமைப்பாளர்-ராஜா சுவாதி திருநாளும் நதியின் இயற்கை அழகால் ஈர்க்கப்பட்டார். ஆற்றின் கரையில் உள்ள கரமனா கிராமத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் இவரது அரசவையிலிருந்தனர்.[10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia