கருநிற மேனியும் வில்லம்புகள் விளங்கும் இருகரமும் கொண்டவராக சிவவேடன் திகழ்வார். புலித்தோலாடை இடையில் துலங்க, திருமுடியைப் பறவை இறகுகள் அலங்கரித்து நிற்கும்.[1]
தொன்மம்
ஈசனிடம் பாசுபதம் பெறுவதற்காக கடும்தவம் பு்ரிந்து வந்தான் அருச்சுனன். அவன் தவத்தைக் கலைக்க வந்த மூகாசுரன் என்பவன் பன்றி வடிவில் அருச்சுனனைத் தாக்க வந்த போது, ஈசன் வேடக் கோலம் பூண்டு வந்து பன்றியை வதைத்தான். அதேசமயத்தில் அருச்சுனனும் அம்பெய்ய, பன்றியைக் கொன்றது யாரென்ற வாக்குவாதம் எழுந்தது. வாய்ச்சண்டை கைச்சண்டையாக மாற, யாராலும் வெல்ல முடியாத அருச்சுனன், சாதாரண வேடனொருவனிடம் தோற்று விழுந்தான். இறுதியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஈசன், அவன் வீரத்தை மெச்சி, அவன் விரும்பிய பாசுபதத்தையும் அளித்தருள்கின்றார்.[2]
கோயில்கள்
கேரளாவில் அமைந்துள்ள வேட்டைக்கொருமகன் ஆலயங்கள், வேட்டுவக் கோலத்தில் ஈசனை மூலவராகக் கொண்ட கோயில்களாகும்.[3] இத்தெய்வத்தை, வேட்டுவ வடிவிலிருந்த சிவனுக்கும் உமைக்கும் பிறந்தவனாகவும் கொள்வதுண்டு.[4]திருவனந்தபுரம் திருப்பாதபுரத்து மகாதேவர் கோயிலிலும், சிவவேடனுக்கு வழிபாடுகள் இடம்பெறுகின்றது.[5]