கே. டி. குஞ்சுமோன்
கே. டி. குஞ்சுமோன் (K. T. Kunjumon, பிறப்பு: 15, நவம்பர், 1953) என்பவர் ஒரு முன்னாள் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் தீவிரமாக இயங்கியவர். இவர் பல மலையாளப் படங்களில் இணை தயாரிப்பாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். மலையாளத்தில் இயக்குநர் பிஜி விஸ்வம்பரனுடன் அவ்வப்போது இணைந்து பணிபுரிந்தார். இவரது முதல் தமிழ்த் திரைப்படமாக சரத்குமார் தனி கதாநாயகனாக அறிமுகமாகி பவித்ரன் இயக்கிய சூரியன் படம் வெற்றிப் படமாக அமைந்தது. குஞ்சுமோனின் இரண்டாவது தமிழ்ப் படமாக சங்கர் இயக்குநராக அறிமுகமான ஜென்டில்மேன் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பில் பல சாதனைகளைப் படைத்தது. இவரது அடுத்தடுத்த படங்களான காதலன் (1994), காதல் தேசம் (1996) ஆகியவையும் வெற்றி பெற்றன, அதே சமயம் ரட்சகன் (1997) அதுவரை வெளியான தமிழ்ப் படங்களிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டது. தொழில்பள்ளிக் கல்வியை முடித்த குஞ்சுமோன் திரைப்படத் தயாரிப்பாளராக ஆவதற்கு முன்பு பயண முகமை வணிகத்திலும், பின்னர் விடுதித் தொழில் துறையிலும் பணியாற்றினார். இவர் ஒரு விநியோகஸ்தராக திரைப்படத் துறையில் நுழைந்தார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் சுமார் 350 படங்களை விநியோகித்தார். தமிழில் இருந்து மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளுக்கு படங்களை மொழிமாற்றம் செய்தார். 1980களின் பிற்பகுதியில் மலையாளப் படங்களைத் தயாரித்த இவர், 1991 முதல் தமிழ்ப் படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். ஏ.ஆர்.எஸ். மூவிஸ் பிரவேட் லிமிடெட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைக் கொண்டிருந்தார். தயாரிப்பாளராக இவரது முதல் தமிழ்த் திரைப்படம் வசந்தகால பறவை (1991) வெற்றி பெற்றது. பின்னர் இவர் சூரியன் (1992), ஜென்டில்மேன் (1993), காதலன் (1994), காதல் தேசம் (1996) போன்ற வெற்றிகரமான பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட படங்களைத் தயாரித்தார். இலங்கையின் முன்னாள் சனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் படுகொலையின் அடிப்படையில் ஜென்டில்மேன் படத்தின் உச்சக்கட்டக் காட்சியை மாற்றி எழுதுமாறு இயக்குநர் சங்கருக்கு பரிந்துரைத்ததற்காக குஞ்சுமோன் நன்கு அறியப்பட்டார். அந்த உச்சகட்ட காட்சியினால் படத்தில் தனது வீரக் காட்சிகள் நீர்த்துப் போகும் என அர்ஜுன் கருதியதால் அதிருப்தி அடைந்தார். இருப்பினும், குஞ்சுமோன் அந்த உச்சகட்டக் காட்சியில் பிடிவாதமாக இருந்தார். காட்சியும் இவரது விருப்பப்படியே படமாக்கப்பட்டது.[1] 1990இல் கேரள அதிமுக மாநிலச் செயலாளராக ஜெ. ஜெயலலிதாவால் இவர் நியமிக்கப்பட்டார். குஞ்சுமோன் 1996 இல் கோடீஸ்வரன் என்ற பெயரிலான ஒரு படத்தை அறிவித்தார். அதில் இவரது மகன் எபி குஞ்சுமோன் நடிகராக அறிமுகப்படுத்தினார். அடுத்த ஆண்டு சிம்ரனுடன் எபி தோன்றியதின் தொடர்ச்சியாக படத்தின் தயாரிப்புப் பணிகள் துவங்கின. இந்தி நடிகை கரிஷ்மா கபூர் ஒரு குத்தாட்டப் பாடலில் விருந்தினர் தோற்றத்தில் நடித்தார்.[2] படத்தின் இசைப் பாடல்கள், முன்னோட்டம் போன்றவை 1999 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டன. ஆனால் குஞ்சுமோனின் நிதிப் பிரச்சனையால் படம் திரையரங்குகளில் வெளியிடப்படாமல் போனது. அதேபோல், சாலினிக்கு ஜோடியாக எபி நடிப்பதாக 1998 இல் அறிவிக்கப்பட்ட என் இதயத்தில் நீ என்ற படத்தின் பணிகள் நடக்கவில்லை.[3] சுவாசம் என்ற படத்தில் எபி மற்றும் பிரியங்கா திரிவேதி இணைந்து நடிப்பதாக மற்றொரு படம் தொடங்கப்பட்டது. 2001 இல் படப்பிடிப்பு தொடங்கியது, ஆனால் வேலைகளை முடிக்க முடியவில்லை.[4][5] 2005 ஆம் ஆண்டில், தொட்டி ஜெயாவை (2005) தெலுங்கில் மறு ஆக்கம் செய்து அதில் எபியை நடிக்கவைக்க இவர் யோசித்தார். ஆனால் பின்னர் அந்த படத்தின் பணிகளை மேற்கொள்வதைக் கைவிட்டார்.[6] விஜய் நடித்த நிலாவே வா (1998) மற்றும் என்றென்றும் காதல் (1999) ஆகிய இரண்டு படங்கள் குஞ்சுமோன் தயாரிப்பில் கடைசியாக வெளியான இரண்டு படங்களாகும். இவை இரண்டும் இவரது முந்தைய படமான ரட்சகனை விட குறைவான செலவில்தான் எடுக்கப்பட்டன. 2006 ஆம் ஆண்டு ஒரு செவ்வியில், குஞ்சுமோன் தனது திவால்நிலைக்காக விஜய் நடித்த இரண்டு படங்களின் தோல்வியே காரணம் என்பது குறித்து புலம்பினார். அந்த இரண்டு படங்களிலும் முறையே 1.5 மற்றும் 1.75 கோடி ரூபாயை இழந்ததாகக் கூறினார். மேலும் விஜயின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் படங்களின் உரிமைகள் குறித்து அவர்கள் செய்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கினார் என்று கூறினார்.[7] 2008 இல் தயாரிப்பாளராக மீண்டும் வரப்போவதாக அறிவித்து, காதலுக்கு மரணமில்லை என்ற பெயரிலான ஒரு திரைப்படத்தின் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். மேலும் படத்தின் எழுத்துப் பணிகளில் எழுத்தாளராகவும் இறங்கினார். புதுமுக நடிகர்களான தேஜாஸ், மீரா நந்தன், மதலாசா சர்மா ஆகியோர் நடித்த, இந்தப் படத்தின் பணிகள் 2009 இல் நிறைவடைந்தது. ஆனால் திரையரங்குகளில் வெளியாகவில்லை.[8][9] 2018 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், குஞ்சுமோன் 1990 களில் தான் ஈட்டிய திரையுலக வெற்றிகளை இனி மீண்டும் தன்னால் ஈட்ட முடியாது என்று கூறினார். தோல்வியுற்ற படங்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பு உலகில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணங்களை சுட்டிக் காட்டி தனிப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இனி அவர்களுக்கு உரிய தகுதியான மரியாதை கிடைக்காது என்றார். எவ்வாறாயினும், இவரால் திரைப்பட உலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடைவதாகவும், அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறினார்.[10] திரைப்படவியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia