துவக்கத்தில் ஒரு பெண்ணை ஒருவன் துரத்துவது போல் ஒரு காட்சி காட்டப்படுகிறது. ஊரில் மயானக் கொள்ளை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திரிலோக் வட்டே என்னும் முதன்மை செயல் அலுவலருக்கு எதிராக பணியாட்கள் நாத்திகரான சண்முகம் என்பவர் தலைமையில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். நிர்வாக இயக்குநர் திரிலோக் அவர்களைக் களையும்படி எச்சரிக்கை விடுகிறார். சண்முகம் அதனை ஒத்துக்கொள்ளாததால் காவலர்கள் தடியடி நடத்தி கூட்டத்தைக் களைக்கின்றனர். வீடு திரும்பிய சண்முகம் தனது இளைய மகளான பத்தாம் வகுப்பு படிக்கும் நிலா தேர்வில் தமிழ் உட்பட இரண்டு பாடங்களில் தேர்ச்சிபெறாததால் அவளிடம் கடுமையாக பேசுகிறார். பிறகு, அந்த தொழிற்சாலையில் தீவிபத்து என்னும் செய்தி வெளிவருகிறது. சண்முகம் விபத்து நடந்த இடம் சென்று பார்க்கையில் அங்கு முத்துசாமி என்பவர் தீக்காயம் அடைந்ததது தெரியவருகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அச்சம்பவம் தீவிபத்து அல்ல தீவைப்பு என்று காவலர்கள் கண்டறிகின்றனர். சண்முகம் வீடு திரும்பியதும் நிலா வீட்டில் இல்லை என்பது தெரிய வருகிறது. குணாவின் மனைவியின் மூலம் விடயத்தையறிந்ததும் சண்முகத்தை விட்டுச்சென்று ஆசிரமத்தில் இருக்கும் சைவக் கடவுள்கள் மீது நம்பிக்கை கொண்ட அவனது மனைவி தேவி வீட்டிற்கு வருகிறார். சண்முகமும் குணாவின் மனைவியும் சேர்ந்து நிலாவைத் தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில் சண்முகத்தை சந்தேகிக்கும் ஆய்வாளர் ரெஜினா தாமஸ் சண்முகத்தைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் செல்கிறார். நிலா காணாமல் போனதை அறிந்த ஊரைவிட்டு காதலனுடன் ஓடிப்போய் தற்போது கோவையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் சண்முகத்தின் மூத்த மகளும் சர்க்கரவர்த்தியின் பள்ளித் தோழியுமான நந்தினி சண்முகத்தை விடுவிக்குமாறு கோருகிறார்.விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள கண்காணிப்பு படக்கருவிகளின் காட்சிகளைத் துணை ஆய்வாளர் சக்கரவர்த்தி ஆராய்கையில் நிலா கடத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.