சுஸ்ருத சம்ஹிதை

கிமு 600-இல் வாழ்ந்த அறுவை மருத்துவத்தின் தந்தை எனப்போற்றப்பட்ட சுஸ்ருதரின் சிற்பம்
அரித்துவாரில் உள்ள பதஞ்சலி யோகபீடத்தில் சுசுருதரின் சிலை

சுஸ்ருத சம்ஹிதை (Sushruta Samhita (सुश्रुतसंहिता, IAST: Suśrutasaṃhitā), பண்டைய இந்தியாவில் கிமு 800-இல் வாழ்ந்த ஆயுர் வேத மருத்துவ அறுவை சிகிச்சை முனிவரான சுஸ்ருதர் என்பவர் இயற்றிய அறுவை சிகிச்சைக்கான சமசுகிருத மொழி மருத்துவ நூல் ஆகும்.[1][2]

சுஸ்ருத சம்ஹிதை நூலில் வேத கால மருத்துவ முறையின்படி, பல்வேறு மருத்துவ துறைகளுக்கான விளக்கங்கள் உள்ளது. இதில் காணப்படும் பல்வேறு அத்தியாயங்கள் அறுவை சிகிச்சைக்கான பயிற்சிகள், கருவிகள் மற்றும் செயல்முறைகளை விளக்குகின்றன. இந்நூலின் தற்போதைய வெளியீடு 186 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளத. இந்நூலில் 1,120 நோய்கள், 700 மூலிகைச் செடிகள், கனிமங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட 64 மருந்துகள், விலங்குகளிடமிருந்து தயாரிக்கப்பட்ட 57 மருந்துகள், ஆழமான உடற்கூற்றியல் பாடங்கள் முதலிய விவரங்களை உள்ளடக்கியுள்ளது. சுஸ்ருதசம்ஹிதையின் மூலமாக 600 மேற்பட்ட அறுவை சிகிச்சை இயந்திரங்களையும் ,பாரம்பரிய அறுவை சிகிச்சையாளர்களின் அனுபவங்களையும், வேத இலக்கியங்களில் காணப்படும் மருத்துவ தகவல்களின் ஒருங்கிணைப்பை இந்நூலில் பெற முடிகின்றது. கண்ணாடி அல்லது மூங்கில் கீற்றுகளைக் கொண்டு கிழித்து அறுவை சிகிச்சை செயல்முறைகள் விளக்கப்பட்டுள்ளது.

நூலின் அமைப்பு

சுஸ்ருத சம்ஹிதை நூல் பூர்வ தந்திரம், உத்திர தந்திரம் எனும் இரு பகுதிகளைக் கொண்டது. இதில் பூர்வதந்திரத்திலே சீத்திரஸ்தானம், நிதானஸ்தானம், சரீரஸ்தானம், கல்பஸ்தானம், சிகிச்சாஸ்தானம் எனும் ஐந்து பிரிவுகள் உள்ளன. இவை சுஸ்ருத சம்ஹிதையின் மூல நூலாகிய ஸல்லிய தந்திரத்தில் உள்ளவையாகும். உத்தர தந்திரத்தில் ஸலக்கியம், பூத வித்தியா, கமார பிருத்தியம் எனும் மூன்று பகுதிகள் உள்ளன.

சுஸ்ருத சம்ஹிதையில் பல்வேறு வகையான அறுவை சிகிச்சை கருவிகளையும், மருத்துவ நடவடிக்கைகளையும் சுஸ்ருதர் விளக்கியுள்ளார். அறுவை சிகிச்சை முறைகளை சுஸ்ருத சம்ஹிதையில் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது:

  1. ஆஹர்யம் – உடலிலிருந்து அழுகிய பகுதிகளைப் பிரித்தெடுத்தல்
  2. பேத்யம் – துண்டித்தல்
  3. சேத்யம் –ஆழமாகக் கிழித்தல்
  4. எஸ்யம் – கண்டறிதல்
  5. லெக்ய – சுரண்டுதல்
  6. சிவ்யம் – தையல் போடுதல்
  7. வேத்யம் – சிறு துவாரம் இடுதல்
  8. விஷ்ரவனியம் – திரவங்களைப் பிரித்தெடுத்தல்

சுஸ்ருத சம்ஹிதை நூலில் மூலம் உடல் உறுப்புகளை நீக்குதல், நுண் அறுவைச் சிகிச்சை, கண் சிகிச்சை , கற்களை அகற்றும் அறுவை சிகிச்சை, மருத்துவ சேவை, மகப்பேறு முதலிய சிகிச்சை முறைகளும் விளக்கப்பட்டுள்ளன. சுஸ்ருத சம்ஹிதையானது ஒட்டிணைப்பு சிகிச்சை , சுழல் சிகிச்சை, ரண சிகிச்சை முதலிய அறுவை சிகிச்சை யுக்திகளையும் கற்றுக் கொடுக்கின்றது. நெற்றியிலிருந்தோ, கன்னத்திலிருந்தோ தோலை வெட்டி எடுத்து மூக்கை புனரமைக்கும் சிகிச்சை (மூக்கின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை), நுண் அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) முதலியவையும் சுஸ்ருத சம்ஹிதையில் காணப்படுகிறது.

அறுவை சிகிச்சையைக் கற்றுக்கொள்வதற்கு இறந்த உடலைப் பயன்படுத்த வேண்டும் என்றும், உயிருள்ள மனிதனைப் பயன்படுத்தக் கூடாது என்றும் சுஸ்ருத சம்ஹிதை வலியுறுத்துகிறது.

அறுவை சிகிச்சையை திறம்பட செய்வதற்கு முன்பாக, உடலில் நோயுள்ள பகுதிகளை ஒத்திருக்கும், விலங்குகள் உறுப்புகள் மீது கத்தியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி பழகும்படி சுஸ்ருதர் மாணவர்களை அறிவுறுத்துகிறார். உடல் உறுப்புகளை ஒத்திருக்கும் இறந்த விலங்குகளின் சிறுநீர் பைகள் முதலிய பொருட்களின் மீதே பயிற்சியைத் தொடங்குமாறு பரிந்துரைக்கிறார்.

சுஸ்ருதரால் வழங்கப்பட்ட பல சிகிச்சை முறைகள் நவீன நூல்களில் விவாதிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் இதய வலி, இரத்த சுழற்சி, நீரிழிவு, உடல் பருமன், இரத்த அழுத்தம், சிறுநீரக கல் நீக்கம் முதலியவையும் அடங்கும். தொழுநோயைப் பற்றிய முதல் குறிப்பை வழங்கியதும் சுஸ்ருத சம்ஹிதையே என்று மேற்கத்திய அறிஞர்கள் சிலர் கூறியுள்ளனர்.

மொழிபெயர்ப்புகள்

சுஸ்ருத சம்ஹிதை நூலானது அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, கிதாப் ஷா ஷன்னல் ஹிந்த் எனும் தலைப்பில் வெளியானது. எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாக்தாத்தில் இந்நூலை கிதாப் ஐ சுஸ்ரத் என்றும் அறியப்பட்டுள்ளது. சுஸ்ருத சம்ஹிதையின் அரேபிய மொழிபெயர்ப்பு இடைக்காலத்தின் இறுதியில் ஐரோப்பாவைச் சென்றடைந்துள்ளது. இந்நூலானது கம்போடியாவின் கெமேர் அரசர் யஷோவர்மனுக்கும் அறிமுகமானதாக தெரிகிறது. சுஸ்ருத சம்ஹிதை திபெத் நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நூலாகவும் உள்ளது.

அறுவை சிகிச்சையின் விளக்கங்கள்

சுஸ்ருத சம்ஹிதை 125 அறுவை சிகிச்சை கருவிகளை கூறுகிறது. அவற்றில் பல விலங்குகள் மற்றும் பறவைகளின் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன; அத்துடன், தேவைக்கேற்ப புதிய கருவிகளையும் உருவாக்க அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான தகுதிகளும் அறுவை சிகிச்சை கருவிகளும் ஏறக்குறைய நவீன காலத்தைப் போன்றே உள்ளன.

பொதுவாக அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளிகள் சிறிதளவு உணவு உண்ண அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், வயிறு மற்றும் வாயினுள் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு முன்னர் நோயாளிகளை உண்ணாதிருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். நோயாளிகளின் அறையானது வெண் கடுகு, கொத்தமல்லி விதை, வேப்பிலை, சால மரத்தின் பிசின் போன்றவற்றினால் தூய்மைப்படுத்தப்படுகிறது. இன்றைய உலகில அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படும் பற்பல நோய்கள் அன்றைய நாளில் பெரும்பாலும் மருந்துகளின் மூலமாகவே குணப்படுத்தப்பட்டன.

ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, மூக்கு மற்றும் கண் அறுவை சிகிச்சைகள்

சுஸ்ருதர் சேதமடைந்த செவிப்பறைகளை கழுத்து அல்லது அக்கம்பக்கத்திலுள்ள மென்மையான தோல் மடல்களை சுரண்டியெடுத்து ஒட்டுவதன் மூலமாக சீர்படுத்துகிறார். மேலும், பழங்கால கிரேக்க, எகிப்திய அறுவை சிகிச்சையாளர்களும் அறிந்திராத, கண்புரை சிகிச்சை இவரது தனிச்சிறப்பாகும். சில நடைமுறை விஷயங்களில், சுஸ்ருதரரின் அறுவை சிகிச்சை யுக்திகள் நவீன ஐரோப்பியர்களின் யுக்திகளைவிட அதிகமான வெற்றியை நிரூபித்துள்ளது. மேலும், குடல் புண், காயமடைந்த வீரர்களுக்கான சிகிச்சை என பலவும் விவாதிக்கப்பட்டுள்ளன.

உள்ளுறுப்பு அறுவை சிகிச்சைகள்

சிறுநீரகப் பை, சிறுநீரகக் குழாய், பித்தப்பை முதலியற்றில் உருவாகும் கற்களை எவ்வாறு நீக்குவது என்பன தொடர்பான விளக்கங்களை சுஸ்ருதர் விரிவாக வழங்கியுள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகளையும் எடுத்துரைக்கின்றார். கற்களை நீக்குவதற்கான சுஸ்ருதரரின் பல்வேறு யுக்திகள், ஆங்கில மருத்துவ வல்லுநர்களால் சமீபத்தில்தான் கண்டறியப்பட்டுள்ளன.

உறுப்புகளைத் துண்டித்தல்

அத்தியாவசியமான சூழ்நிலைகளில் உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டன. மூலிகைகளின் மூலமாக மயக்க மருந்து வழங்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளைப் பிரிப்பது, பிளப்பது, அதற்கான நிவாரணம், மயக்க மருந்து வழிமுறைகள் என பலவும் விளக்கப்பட்டுள்ளன.

காசநோய் சிகிச்சை

கால்நடைத் தொழுவத்தின் காற்றை சுவாசிப்பதால், குறிப்பாக ஆட்டுக் கொட்டகையின் காற்றை சுவாசிப்பதால், காசநோய் கிருமிகள் அழிக்கப்படுவதாக சுஸ்ருத சம்ஹிதை கூறுகிறது. மேலும், அஷ்டாங்க தூபமானது காச நோயாளிகளின் அறையில் கிருமிநாசினியாகப் பயன்படுத்தப்பட்டது.

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

  1. Wendy Doniger (2014), On Hinduism, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0199360079, page 79;
    Sarah Boslaugh (2007), Encyclopedia of Epidemiology, Volume 1, SAGE Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1412928168, page 547, Quote: "The Hindu text known as Sushruta Samhita is possibly the earliest effort to classify diseases and injuries"
  2. Sustruta-Samhita – The Ancient Treatise on Surgery

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya