சென் நசேர் திடீர்த்தாக்குதல்
சாரியட் நடவடிக்கை (Operation Chariot) என்றழைக்கப்படும் சென் நசேர் திடீர்த்தாக்குதல் (St. Nazaire Raid) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு திடீர்த்தாக்குதல். மார்ச் 1942ல் நடந்த இந்தத் தாக்குதலில் நேச நாட்டுப் படைகள் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு நாட்டுத் துறைமுகம் சென் நசேர் மீது இத்தாக்குதலை நிகழ்த்தின. சென் நசேர் துறைமுகத்திலிருந்த நார்மாண்டி உலர் கப்பல்கூடத்தை செயலிழக்கச் செய்வதே இத்தாக்குதலின் நோக்கம். பிரித்தானியக் கடற்படையினரும், கமாண்டோக்களும் இணைந்து இத்தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தினர். மார்ச் 28, 1942ல் ஹெச். எம். எஸ் காம்பெல்டவுன் என்ற பழைய டெஸ்ட்ராயர் வகைப் போர்க்கப்பலை நார்மாண்டி கப்பல்கூடத்தின் கதவுகள் மீது மோதவிட்டனர். இதற்கடுத்த நாள் காம்பெல்டவுனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதால் ஜெர்மனி படையினருக்குப் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. காம்பெல்டவுன் கப்பல்கூடத்தின் மீது மோதும்போது ஜெர்மன் பாதுகாப்புப் படையினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த சிறு கமாண்டோ குழுக்கள் சென் நசேர் நகரம் முழுவதும் தாக்குதல்கள் நடத்தின. இந்த நடவடிக்கையின் விளைவாக நார்மாண்டி கப்பல்கூடம் பல ஆண்டுகளுக்கு செயலிழந்து போனது. வரலாற்றாளர்களால் இத்தாக்குதல் உலக திடீர்த்தாக்குதல்களுள் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. பின்புலம்1942ல் இரண்டாம் உலகப்போரில் நாசி ஜெர்மனியின் கை ஓங்கியிருந்தது. மேற்கு ஐரோப்பா முழுவதும் அதன் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஐக்கிய இராஜ்யம் மட்டும் ஜெர்மனியை வெற்றிகரமாக எதிர்த்து வந்தது. ஜெர்மனி கடற்படை, ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சின் துறைமுகங்களிலிருந்து அட்லாண்டிக் சண்டையில் ஈடுபட்டிருந்தன. இச்சண்டையில் ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல்களும் போர்க்கப்பல்களும் அமெரிக்காவிலிருந்து பிரிட்டனுக்குத் தளவாடங்களை ஏற்றிவரும் சரக்குக்கப்பல் கூட்டங்களைத் தாக்கி மூழ்கடிக்க முயற்சி செய்து வந்தன. அவ்வாறு அவை பயன்படுத்திய துறைமுகங்களில் முக்கியமானது சென் நசேர். நார்மாண்டி கப்பல்கூடம் என்றழைக்கப்பட்ட சென் நசேர் உலர் கப்பல்கூடம் ஒன்றுதான் பிரான்சில் ஜெர்மனியின் பெரும் போர்க்கப்பல்களைப் பழுது பார்க்கும் அளவுக்குப் பெரியது. ஜெர்மனியின் ஆக்கிரமிலிருந்த ஐரோப்பாவின் அட்லாண்டிக் கரையோரத்தில் பெரும் போர்க்கப்பல்களைப் பழுதுபார்க்கும் வசதி கொண்ட வேறு துறைமுகங்கள் இல்லை. எனவே இந்த கப்பல்கூடத்தைத் தகர்த்து விட்டால் டிர்பிட்ஸ் போன்ற பெரும் ஜெர்மன் போர்க்கப்பலகள் அட்லான்டிக் கடலில் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. சென் நசேர் நகரத்தில் துறைமுகத்தின் அருகாமையில் சாதாரண குடிமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் குடியிருந்தனர். விமானங்களைக் கொண்டு கப்பல்கூடத்தின் மீது குண்டுவீசினால், அப்பாவி மக்களுக்கு பெருத்த உயிர்ச்சேதம் ஏற்படுமென்பதால் வேறுவழியில் அதனைத் தகர்க்க பிரிட்டனின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தலைமையகம் முடிவு செய்தது. கப்பல்கூடத்தைத் தகர்க்க நூற்றுக்கணக்கான கிலோக்கள் வெடிமருந்துகள் தேவைப்பட்டன. இதனால் சிறு கமாண்டோ குழுக்களாலும் இதனை சாதிக்க முடியாதென்பது புலனானது. இக்காரணங்களால் வேகமாகச் செல்லும் கப்பலலைக் கொண்டு மோதித் தகர்ப்பதென்று முடிவு செய்யப்பட்டது. நிகழ்வுகள்இந்த திடீர்த்தாக்குதலுக்கு மூன்று முக்கிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன:
நார்மாண்டி கப்பல்கூடத்தின் கதவுகளில் மோத ஹெச். எம். எஸ். காம்பெல்டவுன் என்ற பழைய கப்பல் தேர்வு செய்யப்பட்டது. ஒரு ஜெர்மானிய டெஸ்டிராயர் வகைக்கப்பலைப் போல அதன் தோற்றம் மாற்றப்பட்டது. அதன் மேல்தட்டில் பதுங்கியிருக்கும் கமாண்டோக்களை குண்டுவீச்சிலிருந்து பாதுகாக்க கவசங்கள் பொருத்தப்பட்டன. அதன் முன்புறத்தில் நான்கரை டன் வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டது. 173 கமாண்டோ வீரர்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்க ஏற்பாடானது. மார்ச் 26, 1942 அன்று காம்பெல்டவுன் மற்றுமிரு டெஸ்டிராயர் வகைக் கப்பல்களுடனும் பதினாறு சிறு படகுகளுடனும் ஃபால்மவுத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. மார்ச் 27 நள்ளிரவில் இச்சிறுபடை சென் நசேர் துறைமுகத்தை அடைந்தது. ஜெர்மன் பாதுகாப்புப் படையினரை ஏமாற்ற காம்பெல்டவுனில் ஜெர்மனியின் கடற்படைக் கொடி ஏற்றப்பட்டது. இதனால் ஏமாந்த ஜெர்மனி படைகள் பல முக்கியமான நிமிடங்கள் பிரித்தானிய தாக்குதல் படையைத் தாக்காமல் விட்டனர். சிறிது நேரத்தில் குட்டு வெளிப்பட்டாலும் அதற்குள் காம்பெல்டவுன் நார்மாண்டி கப்பல்கூட கதவுகளை நோக்கி வெகுதூரம் முன்னேறி விட்டது. அதனுடன் வந்த மற்ற படகுகள் ஜெர்மன் பாதுகாப்பு நிலைகளின் மீது குண்டு மழை பொழிந்தன. கமாண்டோ குழுக்கள் சென் நசேர் நகரத்தினுள் ஊடுருவி ஆங்காங்கே நாசம் விளைவிக்கத் தொடங்கினர். மே 28, அதிகாலை 1.34 மணிக்கு காம்பெல்டவுன் நார்மாண்டி கப்பல்கூடத்தின் கதவுகளின் மீது மோதியது. அப்போது அது மணிக்கு 35 கி.மீ வேகத்தில் பயணம் செய்து கொண்டிருந்ததால் அதன் உந்தம் பல நூற்றுக்கணக்கான கிலோ வெடிமருந்தின் வெடிவிளைவுக்கு சமமாக இருந்தது. மோதிய வேகத்தில் 10 மீட்டர் வரை கப்பல்கூடத்தின் இரும்புக் கதவுகளை உள்நோக்கி நெளியச் செய்து நன்றாக சிக்கிக் கொண்டது. தாக்குதலில் முக்கியமான் இலக்கு நிறைவேறியதால் கமாண்டோக்களும் மற்ற கப்பல்களும் பின்வாங்கத் தொடங்கின. ஜெர்மன் அரண்வீரர்களின் கடுமையான எதிர்த்தாக்குதலால் பல சிறுபடகுகள் மூழ்கின; பெரும்பாலான கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர் அல்லது பிடிபட்டனர். ஃபால்மவுத்திலிருந்து புறப்பட்ட 16 சிறு படகுகளில் மூன்று மட்டுமே பத்திரமாகத் திரும்பி வந்து சேர்ந்தன. ஆனால் தாக்குதல் இத்துடன் முடிவடையவில்லை. மார்ச் 28, நண்பகலில் காம்பெல்டவுனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கரை டன் எடையுள்ள வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. நார்மாண்டி கப்பல்கூடம் முழுதும் தகர்க்கப்பட்டது. கூடத்தில் அப்போதிருந்த இரு ஜெர்மன் எண்ணெய்க் கப்பல்களும் தகர்க்கப்பட்டன. கப்பலைப் பார்வையிட வந்த ஜெர்மன் அதிகாரிகள், பார்வையாளர்கள் உட்பட 360 பேர் இந்த குண்டுவெடிப்பில் பலியானார்கள். இரு நாட்கள் கழித்து (மார்ச் 30ம் தேதி) பிரித்தானிய நீர்மூழ்கிக் குண்டு படகுகள் வீசிவிட்டுப் போயிருந்த தாமதத் திரி (delayed fuse) டோர்பீடோக்கள் சென் நசேர் நீர்மூழ்கிக்கப்பல் கட்டுந்தளங்களில் வெடித்துச் சிதறி அவற்றைத் தகர்த்தன. இதனால் சில நாட்கள் சென் நசேர் நகரில் பெரும் குழப்பம் நிலவியது. விளைவுகள்தகர்க்கப்பட்ட நார்மாண்டி கப்பல் கூடத்தை ஜெர்மானியர்களால் இரண்டாம் உலகப்போர் 1945ல் முடியும் வரை மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை. இத்தாக்குதலின் விளைவாக ஹிட்லரும் அவரது தளவாட அமைச்சர் ஸ்பீரும் ஐரோப்பாவின் மேற்கு அரணான அட்லாண்டிக் சுவரை பலப்படுத்தத் தொடங்கினர். 1942ல் தொடங்கி பல்லாயிரக்கணக்கான பதுங்கு குழிகளும் அரண் நிலைகளும் மேற்குக் கடற்கரையோரமாக கட்டப்பட்டன. டிர்பிட்ஸ் போர்க்கப்பல் அட்லாண்டிக் கடலை அடையவேயில்லை. 1944ல் நார்வே கடலோரத்தில் பிரித்தானிய விமானங்களால குண்டு வீசி மூழ்கடிக்கப்பட்டது. சென் நசேர் திடீர்த்தாக்குதலில் ஈடுபட்ட 622 பிரித்தானிய வீரர்களில் 233 பேர் மட்டுமே பத்திரமாக இங்கிலாந்து திரும்பினர். இத்தாக்குதலில் ஈடுபட்ட பலருக்கு பிரிட்டனின் உயரிய ராணுவ பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஃபால்மவுத் துறைமுகத்தில் இத்தீடீர்த்தாக்குதலின் நினைவு கூறும் வகையில் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. காம்பெல்டவுன் கப்பலின் நினைவாக 1987ல் புதிதாக ஹெச். எம். எஸ். காம்பெல்டவுன் என்ற ஃபிரிகேட் வகைக் கப்பல் பிரித்தானிய கப்பல்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. படங்கள்
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia