ஜெம்புளூ சண்டை
ஜெம்புளூ சண்டை (Battle of Gembloux) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. பெல்ஜியம் சண்டையின் ஒரு பகுதியான இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் படைகள் பெல்ஜியத்தைத் தாக்கியதால் பிரெஞ்சு முதன்மைப் படைகளை ஆர்டென் காட்டுப் பகுதியிலிருந்து நகர்ந்து பெல்ஜியத்தை நோக்கி விரைந்தன. மே 10, 1940ல் ஜெர்மானியப் படைகள் பெல்ஜியம் மற்றும் பிரான்சின் மீது இருமுனைத் தாக்குதலைத் தொடங்கின. ஜெர்மனியின் போர் உபாயத் திட்டமான “மஞ்சள் திட்ட” (ஜெர்மன்: Fall Gelb) த்தின்படி பெல்ஜியம் மீதான தாக்குதல் திசை திருப்பும் தாக்குதலாகும். இதன் மூலம் பிரான்சின் முதன்மைப் படைப்பிரிவுகளை பெல்ஜியத்திற்கு வரவழைக்க வேண்டும். அவை பெல்ஜியத்தை அடைந்த பின், அவற்றின் பின்பகுதியில் ஆர்டென் காடு வழியாக ஜெர்மானிய ஆர்மி குரூப் ஏ முக்கியத் தாக்குதல் நடத்த வேண்டுமென்று மஞ்சள் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அதன்படி பிரெஞ்சு முதலாம் ஆர்மியை பெல்ஜியத்துக்கு இழுக்க மே 12ம் தேதி இரண்டு ஜெர்மானிய கவச டிவிசன்கள் பெல்ஜியத்தின் ஹன்னூட் பகுதியைத் தாக்கின. ஹன்னூட் சண்டையில் பிரெஞ்சுப் படைகள் வெற்றியடைந்த பின்னர் ஜெம்புளூ இடைவெளியில் நிறுத்தப்பட்டிருந்த பிரெஞ்சுப் படைகளை ஜெர்மானிய 6வது ஆர்மி தாக்கியது. மே 14, 15 இரு நாட்கள் நடந்த இந்த சண்டையில் ஜெர்மானிய படைகளால் பிரெஞ்சு பாதுப்பாப்பு கோட்டை ஊடுருவ முடியவில்லை. சுற்றிக் கொண்டும் போக முடியவில்லை. இச்சண்டை பிரெஞ்சுப் படைகளுக்கு வெற்றியில் முடிவடைந்தது. ஆனால் ஹன்னூட்டிலும் ஜெம்புளூவிலும் பிரெஞ்சு முதலாம் ஆர்மிக்கு ஏற்பட்ட சேதங்கள் அதன் பலத்தை வெகுவாகக் குறைத்தன. ஜெர்மானியப் படைகளின் ஆர்டென் காட்டுத் தாக்குதலால், அப்படை பின் வாங்கும் வழி அடைபடும் நிலை உண்டானது. எனவே இப்பிரிவு பெல்ஜியத்திலிருந்து பின்வாங்கி லீல் நகருக்குச் சென்றது. மே 28ம் தேதி அங்கு நடந்த சண்டையில் ஜெர்மானியப் படைகளால் முழுதும் தோற்கடிகப்பட்டது. ஜெர்மானிய இருமுனைத் தாக்குதல் எளிதில் வெற்றியடைந்ததால் ஹன்னூட்டிலும், ஜெம்புளூவிலும் பிரெஞ்சுப் படைகள் அடைந்த வெற்றி பயனில்லாமல் போனது.
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia