பவுலா நடவடிக்கை
பவுலா நடவடிக்கை (ஆங்கிலம்: Operation Paula, ஜெர்மன்: Unternehmen Paula) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பிரான்சு சண்டையின் ஒரு பகுதியாகும். சூன் 3ம் தேதி நாசி ஜெர்மனியின் வான்படை லுஃப்ட்வாஃபே பிரஞ்சு வான்படையைத் தாக்கி அழிக்க முயன்று தோல்வியடைந்தது. மே 10ம் தேதி தொடங்கிய பிரான்சு சண்டையின் முதல் கட்டம் சூன் முதல் வாரத்தில் முடிவுக்கு வந்தது. ஜெர்மானியப் படைகள் பிரான்சின் தரைப்படைகளை முற்றிலுமாக முறியடித்து விட்டன. பிரான்சின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி ஜெர்மனி வசமாகியது. நேச நாட்டு படைப்பிரிவுகள் தோற்கடிக்கப்பட்டு எஞ்சியவை டன்கிர்க் துறைமுகம் வழியாக இங்கிலாந்துக்குத் தப்பின. பிரான்சின் தோல்வி உறுதியான இந்நிலையில் ஜெர்மானியத் தளபதிகள் அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்கினர். பிரான்சின் ஏனைய பகுதிகளைக் கைப்பற்ற லுஃப்ட்வாஃபே வான் ஆளுமை நிலையை அடைவது அவசியமாக இருந்தது. இதனால் எஞ்சியிருந்த பிரான்சு வான்படைப் பிரிவுகளைத் தாக்கி அழிக்க பவுலா நடவடிக்கையை ஜெர்மானியத் தளபதிகள் மேற்கொண்டனர். இந்த நடவடிக்கைக்கு ஐந்து ஜெர்மானிய வான்படைக் கோர்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இந்த நடவடிக்கையைப் பற்றி பிரித்தானிய உளவுத்துறை பிரான்சின் தளபதிகளுக்கு முன்னெச்சிரிக்கை விடுத்திருந்ததால் ஜெர்மானியர் எதிர்பார்த்தது போல பிரான்சின் வான்படையை அழிக்க முடியவில்லை. இந்த நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்தாலும், லுஃப்ட்வாஃபே விரைவில் வானாதிக்க நிலையை அடைந்தது. ஜெர்மானியத் தாக்குதல்களால் சீர்குலைந்திருந்த பிரான்சின் தொழிற்சாலை உற்பத்தியும், பொதுவாக பிரெஞ்சுப் படையினரிடையே நிலவிய குழப்ப நிலையும் பிரான்சு வான்படையைச் செயலிழக்க வைத்துவிட்டன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia