உள்ளூர் $216,540,909 வெளிநாடு $265,300,000 உலகம் முழுவதும் $481,840,909
சேவிங் பிரைவேட் ரியான் (ஆங்கிலம்: Saving Private Ryan) ஹாலிவுட் திரைப்பட உலகின் தயாரிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படமாகும். இரண்டாம் உலக யுத்தத்தை மையமாக கொண்டு பின்னப்பட்ட கதையே இது. இதில் நாயகனாக டொம் ஹாங்ஸும் முக்கிய வேடத்தில் மாட் டேமனும் நடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இத் திரைப்படத்தின் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்.
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போரின் போது, நான்கு ஆண் பிள்ளைகளின் தாயார் ஒருவர் தன் மூன்று புதல்வர்களையும் கிட்டத்தட்ட ஒரே காலப் பகுதியில் இழந்து விடுகின்றாள். வீரர்களின் மரணம் பற்றி அறிவிப்பு செய்யும் பொழுது தற்செயலாக இந்த தகவலை இராணுவ மேலிடம் கண்டறிகின்றது. ஒரே நேரத்தில் தாய் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்து விட்ட காரணத்தால் நான்காவது மகனை (ரியான்) போர்களத்திலிருந்து மீட்டு வந்து தாயிடம் ஒப்படைப்பதாக இராணுவ மேலிடம் முடிவு செய்கின்றது.
இந்தப் பணிக்கு கேப்டன் மில்லர் (டாம் ஹாங்) தேர்ந்து எடுக்கப்படுகின்றார். கேப்டன் மில்லர் தலைமையில் எட்டு வீரர்களைக் கொண்ட படை அணி ஒன்று புறப்படுகின்றது. எதிரியின் எல்லைக்குள் நின்று கொண்டிருக்கும் றியானை கேப்டனும் அவரது சகாக்களும் தமக்கு கிடைக்கும் துப்புக்களைப் பயன்படுத்தி தேடவிழைகின்றனர். நேசப் படைகள்ஒமாகா கடற்கரையிலேயே நிலைகொண்டிருக்கும் வேளையில் எதிரிகளின் எல்லையை ஊடறுத்து மில்லரும் அவரது படையணியும் முன்னேறுகின்றது.
ரியானை சந்தித்தார்களா இல்லையா என்பதும் எத்தனை வீரர்கள் தாயகம் திரும்புகின்றார்கள் என்பதுமே மிகுதிக் கதை.
விருதுகள்
இத்திரைப்படம் 1998-ஆம் ஆண்டிற்கான 'சிறந்த இயக்குநர்' உட்பட 5 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது.[1] இதைத் தவிர வேறு 52 விருதுகளையும் வென்றுள்ளது.[2]
துணுக்குகள்
இத் திரைப்படத்தில் பயன் படுத்துவதற்காக துப்பாக்கிகள் மற்றும் சுடுகலன்களை இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் இருந்து பெற்றுக்கொண்டனர். இவை அனைத்தும் கிட்டத்தட்ட உலக யுத்தம் இரண்டு காலப்பகுதியைச் சேர்ந்ததே. இதைவிட உடைகளிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளனர். ஆயிரக்கணக்கில் படத்திற்காக இராணுவச் சீர் உடைகளும் காலணிகளும் தயார் செய்யப்பட்டதோடு அவை போர்களத்தில் பாவிக்கப்பட்டவை போன்ற தோற்றம் பெற விசேட பொறிமுறைகளிற்கு உட்படுத்தப்பட்டது.
டோம் ஹாங்ஸ் மற்றும் அவருடன் நடித்தவர்கட்கு இராணுவ பயிற்சி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மாட் டேமனுக்கு மட்டுமே இப்பயிற்சி அளிக்கப்படவில்லை.
இப்படத்தில் வன்முறை மற்றும் சண்டை காட்சிகள் மிகுந்து காணப்பட்டதால் இத்திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை செய்யப்பட்டது. பல காட்சிகளை நீக்கிய பின்பே இதை இந்தியாவில் வெளியிட முடியும் என இந்திய சென்சார் போர்ட் அறிவித்ததற்கு, இப்படத்தை இந்தியாவில் வெளியிட வேண்டாம் என ஸ்பில்பேர்க் முடிவெடுத்து விட்டார். பின்னர், இத் திரைப்படத்தை அப்போதைய இந்திய உள்துறை அமைச்சர் பார்த்து விட்டு காட்சி நீக்கங்கள் ஏதுமில்லாமல் வெளியிட உத்தரவிட்டார்.[3]