இவ்வூர்க் கோயிலில் உள்ள கல்வெட்டில் உய்ய கொண்டான் "ஆற்று வாரியம்' என்ற அமைப்பு குறிப்பிடப்படுகிறது. இவ்வமைப்பு உய்ய கொண்டான் வாய்க்காலில் வரும் நீரை பயன்படுத்திக் கொள்ள உதவியது.[8] 993-ல் முதலாம் ராஜராஜனால் கட்டப்பட்டதை கல்வெட்டு தெரிவிக்கிறது. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், வீர ராஜேந்திரன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. தஞ்சை பெரியகோயில் மெய்க்காவலுக்கு இவ்வூரிலிருந்தும் நால்வர் சென்றுள்ளனர். இங்குள்ள வீரராஜேந்திரனின் கல்வெட்டு ஆதிசங்கரின் 'பகவத் பாதீயம்' எனும் சாரீர பாஷ்யத்திற்கு உரை எழுதிய சதானந்த பிடாரர் என்பவர் இயற்றிய உரையை தினமும் இங்கு சொற்பொழிவு ஆற்றியுள்ளார் என்றும் அவரின் பணிக்காக நிலம் கொடைகள் வழங்கப்பட்டதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு செய்தியை கேள்விப்பட்டு காஞ்சி மட சங்கராச்சாரியர் இத்தல இறைவனை தரிசித்து சென்றுள்ளார். [9] கோயில்களில் இசைக் கருவிகளை வாசிப்பவர்கள், ‘உவச்சர்கள்’ எனப்பட்டனர். இங்குள்ள சிவன் கோயிலிலும், பெருமாள் கோயிலிலும் உவச்சர்கள் ‘பஞ்ச மகா சப்தம்’ செய்ய நிலம் அளிக்கப்பட்டதாக ராஜராஜனது 26-வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு வழியே அறியலாம். பஞ்ச மகா சப்தம் என்பது 5 வகையான இசையைக் குறிக்கும். தோல், துளை, நரம்பு, கஞ்சம், வாய்ப்பாட்டு போன்றவற்றால் எழும் நாதம் 'பஞ்ச மகா சப்தம்’ என்பர். ஆதிச்சன் பாழி, சோழமாதேவி பேருவச்சன், பல்லவராயன், திருவரங்கதேவன், கடம்பனான கந்தர்வ பேருவச்சன் என்பார் இசை வாசிக்கும் உவச்சர்களில் முக்கியமானவர்கள் என கல்வெட்டு கூறுகிறது.[10]