ச. அகத்தியலிங்கம்

ச. அகத்தியலிங்கம்
2-ஆம் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
பதவியில்
1 திசம்பர் 1986 - 30 நவம்பர் 1989
முன்னையவர்வ. ஐ. சுப்பிரமணியம்
பின்னவர்சி. பாலசுப்பிரமணியன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1929-08-19)19 ஆகத்து 1929
கேசவன்புதூர்,
திருவிதாங்கூர் அரசாட்சி, பிரித்தானிய இந்தியா (தற்போதைய அமைவிடம் - கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு4 ஆகத்து 2008(2008-08-04) (அகவை 78)
கிளியனூர்,
விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
துணைவர்பொன்னம்மாள்
உறவுகள்இலதா பிரியா (பெயர்த்தி)
பிள்ளைகள்சண்முகசுந்தரி (மகள்)
அருணாசலவடிவு (மகள்)
முன்னாள் மாணவர்
பணிதமிழ் அறிஞர், பேராசிரியர், மொழியியலாளர்

ச. அகத்தியலிங்கம் (ஆகத்து 19, 1929 - ஆகத்து 4, 2008) தமிழ்நாடு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் உலக அளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்ற தமிழறிஞரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

நாகர்கோயில் அருகில் உள்ள கேசவன்புதூரில் 19 ஆகத்து 1929 அன்று அருணாசலவடிவு - சண்முகம் பிள்ளை இணையருக்கு மகனாகப் பிறந்தார் அகத்தியலிங்கனார் . நாகர்கோயிலில் உள்ள தென் திருவாங்கூர் இந்துக் கல்லூரியில் இளம் அறிவியல் கணக்குப்பாடம் பயின்ற இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். இங்கு பயிலும்பொழுது குமரி அனந்தன் இவருக்கு நெருங்கிய நண்பரானார்.

கேரளா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியன் மேற்பார்வையில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். பிறகு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் மற்றுமொரு முனைவர் பட்டம் பெற்றார். இவரிடம் மொழியியல் கற்றவர்கள் உலக அளவில் உள்ளனர். இவர் தமிழ், ஆங்கிலம், மலையாளம் மொழிகளில் நல்ல புலமைபெற்றவர்.

அகத்தியலிங்கனார் தாம் பயின்ற இந்து கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் பணியைத் தொடங்கித் தில்லிப் பல்கலைக்கழகத்தில் சில காலம் இணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். 1968 முதல் 1989 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் இயக்குநராகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். தமிழ்த்துறையில் புல முதன்மையராகவும் பணிபுரிந்தவர். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1 திசம்பர் 1986 முதல் 30 நவம்பர் 1989 வரை மூன்றாண்டுகள் பணிபுரிந்தவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியாகவும் மைசூர் செம்மொழி நிறுவனத்தில் முதுநிலை ஆய்வறிஞராகவும் பணிபுரிந்தார். உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் தமிழ் அமைப்புகள் மொழியியல் அமைப்புகளில் பொறுப்பு வகித்த பெருமைக்கு உரியவர். அனைத்து இந்திய மொழியியல் கழகத்தை உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

ஆய்வுகள், நூல்கள்

அகத்தியலிங்கனார் தமிழில் 24 நூல்களையும் ஆங்கிலத்தில் 9 நூல்களையும் எழுதியுள்ளார். 200 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வரைந்த பெருமைக்கு உரியவர். இவை யாவும் மொழியியல், சங்க இலக்கியம், தொல்காப்பியம் பற்றியன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். உலக மொழிகள் பற்றி இவர் எழுதிய நூல்கள் உலக மொழிகள் பலவற்றின் வரலாற்றையும் சிறப்பையும் அதன் அமைப்புகளையும் எடுத்துரைக்கின்றன.

அதுபோல் சங்க இலக்கியம் குறித்துச் சங்கத்தமிழ் என்னும் பெயரில் 5 தொகுதிகளை எழுதியுள்ளார். உலகமொழிகள் என்ற வரிசையில் 7 தொகுதிகள் வெளிவந்துள்ளன. தொல்காப்பியம் பற்றி 3 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவரது தமிழ், ஆங்கிலக் கட்டுரைகள் பலவும் உலகத்தரம் வாய்ந்த இதழ்களில் வெளிவந்துள்ளன.

அகத்தியலிங்கம் 55 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு நெறியாளராக இருந்து நெறிப்படுத்தினார். தமிழக அரசின் திரு.வி.க.விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பயணம் செய்து தமிழின் பெருமை பற்றி பேசினார். பல பல்கலைக்கழகங்களில் கல்விக்குழு அறிவுரைஞர் குழு எனப் பலவற்றறில் இணைந்து பணிபுரிந்தார்.

பணி ஓய்வு பெற்ற பிறகும் பல்வேறு ஆய்வுகளைச் செய்துவந்தார்.

மறைவு

புதுச்சேரி அருகே கிளியனூர் காமராசர் குடியிருப்பு அருகில் நடைபெற்ற மகிழுந்து விபத்தில் 4 ஆகத்து 2008 அன்று காலை 11 மணியளவில் நேர்ச்சி இடத்திலேயே இறந்தார். அவர் துணைவியார் பொன்னம்மாளும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகு இறந்தனர். அகத்தியலிங்கனாரின் பெயர்த்தி இலதா பிரியா மருத்துவமனையில் சேர்க்கப்பெற்றார்.

மறைந்த துணைவேந்தர் அவர்களுக்கு சண்முகசுந்தரி, அருணாசலவடிவு (சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்) ஆகிய இரண்டு பெண்மக்கள் உள்ளனர்.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya