குமரி அனந்தன்

குமரி அனந்தன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்பி. சிகாமணி
பின்னவர்ஜி. கே. ஜெ. பாரதி
தொகுதிதிருவொற்றியூர்
பதவியில்
1984–1989
முன்னையவர்இ. முத்துராமலிங்கம்
பின்னவர்ரமணி நல்லதம்பி
தொகுதிஇராதாபுரம்
பதவியில்
1989–1991
முன்னையவர்எஸ். என். இராமசாமி
தொகுதிசாத்தான்குளம்
பதவியில்
1991–1996
பின்னவர்எஸ். எஸ். மணி நாடார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆனந்தகிருஷ்ணன்
(1933-03-19)மார்ச்சு 19, 1933
குமரிமங்கலம் என்ற அகத்தீசுவரம், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு9 ஏப்ரல் 2025(2025-04-09) (அகவை 92)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்கிருஷ்ணகுமாரி
பிள்ளைகள்1 மகன், 4 மகள்
வாழிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
சமயம்இந்து

குமரி அனந்தன் (Kumari Ananthan, 19 மார்ச்சு 1933 – 9 ஏப்ரல் 2025), தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர். காமராசருடன் இணைந்து பணியாற்றியவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், இந்திய மக்களவை உறுப்பினர், தமிழ்நாட்டுச் சட்டமன்ற உறுப்பினர்‌ எனப் பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர். இலக்கியப் பேச்சாற்றல் திறன் மிக்கவர்.

பிறப்பும் கல்வியும்

குமரி அனந்தன் கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்கிற அகத்தீசுவரத்தில், இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி அரிகிருசுணன் - தங்கம்மாள் இணையருக்கு முதல் மகனாக 1933 மார்ச்சு 19 ஆம் தேதியன்று பிறந்தார். இவருடைய இயற் பெயர் அனந்தகிருட்டிணன். குமரிமங்கலம் அனந்தகிருட்டிணன், பின்னாளில் குமரி அனந்தன் ஆனார். தொழிலதிபர் எச். வசந்தகுமார் இவருடைய தம்பி ஆவார்.

குமரி அனந்தன் தமிழில் முதுகலை, முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளார். மதுரையில் சிறிது காலம் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

குடும்பம்

குமரி அனந்தனின் மனைவி பெயர் கிருஷ்ணகுமாரி. இந்த இணையருக்கு நான்கு மகள்களும் ஒரு‌ மகனும் உள்ளனர். இவரின் மகள் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு மருத்துவரும், அரசியல்வாதியும் ஆவார்.

நாடாளுமன்ற உறுப்பினர்

குமரி அனந்தன் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் , இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில், நாகர்கோயில் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[1] பின்பு 1996 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] அடுத்து இரண்டு முறை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோற்றார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், நாகர்கோயில் தொகுதியில் போட்டியிட்டும்,[3] 1998ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டும் தோற்றார்.[4]

சட்டமன்ற உறுப்பினர்

குமரி அனந்தன் ஐந்து முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினாராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் 19 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[5] 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தேர்தலில், திருவொற்றியூர் தொகுதியில், காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார்.[6][7] 1984ஆம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இராதாபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] 1989,[9] 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், சாத்தான்குளம் தொகுதியில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தேர்தெடுக்கப்பட்டார்.[5][10]

காங்கிரஸ் தொண்டர்

குமரி அனந்தன் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவருடைய 80-ஆவது பிறந்த நாள் விழா 2012 ஆம் ஆண்டு மார்ச்சு 20 அன்று, சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் குழு சார்பில் கொண்டாடப்பட்டது.

1980-களில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியினைத் தொடங்கினார். பின்னர் அதனை இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடன் இணைத்தார். பின்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தொண்டர் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார்.[11] தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை அலட்சியம் செய்ததாலேயே இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறினார். பிறகு, மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.

குமரி அனந்தன் காந்தி பேரவை என்கிற அமைப்பின் தலைவராக இருந்து வந்தார். தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர் வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றி வந்தார், தன்னுடைய உடல்நலக்குறைவு காரணமாக, 2011 ஆம் ஆண்டு மே மாதம் 14 அன்று அப்பொறுப்பை விட்டு விலகினார்.

அரசியல் பணிகள்

நடைபயணங்கள்

குமரி அனந்தன் 1967 முதல் மதுவிலக்கு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், தமிழுக்கு முன்னுரிமை, நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல நடைபயணங்களை மேற்கொண்டு வந்தார். 2011 ஆம் ஆண்டு, ஒன்பதாவது முறையாக நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவல்லிக்கேணி முதல் புதுச்சேரி வரையிலான 180 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டார்.[12]

எங்கும் தமிழ்

குமரி அனந்தன் நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்கும் உரிமையைப் பெற்றுத் தந்தார்.[சான்று தேவை] தந்தி விண்ணப்பங்கள், காசாணை ஆகியவற்றையும் தமிழ் வழியிலேயே பயன்படுத்தும் வசதியினைப் போராடிப் பெற்றுத் தந்தார்.[சான்று தேவை] தமிழில் விமானங்களில் அறிவிப்புகள் வெளியிடவேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்.

நூல்கள்

குமரி அனந்தன் பின்வரும் நூல்கள் உள்பட 29 நூல்களை எழுதியுள்ளார்.

  1. கலித்தொகை இன்பம்
  2. படித்தேன், கொடுத்தேன்
  3. நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ்
  4. குமரி அனந்தனின் தமிழ் அமுது
  5. சிந்தனைப் பண்ணையில் பாரதியார்
  6. சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன்
  7. கங்கையே வருக... குமரியைத் தொடுக!
  8. நீங்களும் பேச்சாளராகலாம்

வகித்த பதவிகள்

சிறப்புகள்

2011 ஆம் ஆண்டிற்கான சி. பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது: வெள்ளிப் பட்டயத்துடன் ரூ. 1.5 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்ட இந்த விருது குமரி அனந்தனுக்கு வழங்கப்பட்டது. சென்னை மகாஜன சபை வழங்கும் 2011 ஆம் ஆண்டிற்கான காமராஜர் விருது குமரி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது சமுதாயத் தொண்டும், தேசத் தொண்டும் ஆற்றி வருபவர்களுக்கு வழங்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் குடிமக்களுக்கு வழங்கும் பெருமைமிகு உயரிய விருதான தகைசால் தமிழர் விருதினை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், குமரி அனந்தனுக்கு வழங்கினார்.[13]

இறப்பு

குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2025 ஏப்ரல் 9, அன்று மூச்சுக் கோளாறு காரணமாகத் தனது 92 ஆவது அகவையில் காலமானார்.[14] தமிழ்நாடு அரசு சார்பில் குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை வழங்கப்பட்டது.[15]

மேற்கோள்கள்

  1. "Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. Retrieved 2012-03-20.
  2. "Three former TNCC chiefs unlisted". rediff. 6 November 2000. http://in.rediff.com/news/2000/nov/06satya.htm. 
  3. "Volume I, 1996 Indian Lok Sabha election, 11th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. Retrieved 2012-03-20.
  4. "Volume I, 1998 Indian general election, 12th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-10-20. Retrieved 2012-03-20.
  5. 5.0 5.1 பதவி சுகம் கண்ட பழைய முகங்கள்
  6. "திருவொற்றியூர் தொகுதி ஓர் அறிமுகம்". தினமணி. https://www.dinamani.com/amp/story/all-editions/edition-chennai/chennai/2016/Apr/17/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1315259.html. பார்த்த நாள்: 4 August 2025. 
  7. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2012-03-20.
  8. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2012-03-20.
  9. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 232.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  10. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  11. Kumari Ananthan floats new party[தொடர்பிழந்த இணைப்பு]
  12. குமரி அனந்தன் தலைமையில் பாதயாத்திரை: ஞானதேசிகன் நாளை தொடங்கி வைக்கிறார் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் 2 டிசம்பர் 2011
  13. Thurai, Tamil Valarchi (2024-08-20). "2024-ஆம் ஆண்டுக்கான 'தகைசால் தமிழர் விருது' இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்". தமிழ் வளர்ச்சித் துறை (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-04-09.
  14. ""நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்" - தமிழிசை உருக்கம்". Hindu Tamil Thisai. 2025-04-09. Retrieved 2025-04-09.
  15. DIN (2025-04-09). "குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்கு". Dinamani. Retrieved 2025-04-10.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya