ஜெய்தாப்பூர் அணுமின் திட்டம் (Jaitapur Nuclear Power Project, மராத்தி: जैतापूर अणुऊर्जा प्रकल्प) இந்திய மாநிலம் மகாராட்டிராவின்ரத்னகிரி மாவட்டத்தில் மதுபன் சிற்றூரில் இந்திய அணுமின் கழகத்தால் முன்மொழியப்பட்டுள்ள 9900 மெகாவாட் ஆற்றலளவுள்ள ஓர் புதிய அணுமின் நிலையத்திற்கான திட்டமாகும்.[1] இது கட்டமைக்கப்பட்டபின் நிகர மின்னுற்பத்தி தரவரிசையில் உலகின் மிகப்பெரும் அணுமின் நிலையமாக அமையும்.[2][3]
பிரெஞ்சு அணுவாற்றல் பொறியியல் நிறுவனமான அரெவா எஸ்.ஏ.விற்கும் இந்தியாவின் பொதுத்துறை அணுமின் இயக்குநிறுவனமான இந்திய அணுமின் கழகமும் $9.3 பில்லியன் மதிப்புள்ள இதற்கான உடன்பாட்டில் கையொப்பமிட்டனர். இந்த பொது வடிவமைப்பு உடன்பாட்டுடன் 'அணுவாற்றலின் அமைதிக்கான பயன்பாட்டில் அணுமின் கழகம் பெறும் தொழில்நுட்ப தரவுகள் மற்றும் தகவல்களை இரகசியமாக காப்பதற்கான' உடன்பாடும் ஏற்பட்டது.[5][6][7][8][9]
பணித்திட்டங்களின் வரையறைப் பட்டியல், நிலைய வாழ்நாள் முழுமைக்குமான விதிமுறைகளும் வரையறைகளும், பொறுப்புறுதிகளும் நம்புறுதிகளும் மற்றும் அணுமின் நிலையத்தின் ஆற்றலளவுக்காரணிக்கான பொறுப்புறுதி போன்றவை பொது வடிவமைப்பு உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. 60 ஆண்டுகள் வாழ்நாளாக மதிப்பிடப்படும் நிலையத்திற்கு இந்த ஆவணம் மிகவும் தேவையான ஒன்றாகும். எவ்வாறு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதி திரட்டப்படும் என்பது உள்ளிட்ட நிதி அறிக்கையும் இந்த உடன்பாட்டில் காணப்படும்.[10]
இந்த அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அடக்கவிலை ஓர் கிலோவாட்-மணிக்கு (ஓர் யூனிட்டுக்கு) ரூ.4க்கு கீழ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[8]
மகாராட்டிரத்தின் மேற்கு கடற்கரையோர கொங்கண் மண்டல மாவட்டங்களான ராய்கர், ரத்னகிரி, மற்றும் சிந்துதுர்க் பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள பல அணுமின் நிலையங்களில் இதுவும் ஒன்று. 50 கி.மீஇலிருந்து 90 கிமீ வரை அகலமும் 200கிமீ நீளமும் உடைய குறுகலான கடற்கரைப் பிரதேசத்தில் திட்டமிடப்பட்டுள்ள மொத்த மின்னாற்றல் அளவு ஏறத்தாழ 33,000 மெகாவாட்டாகும்.[11][12]இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாடு அக்டோபர் 2008ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தபிறகு இந்தியாவில் அணுவாற்றல் மின்நிலையங்களுக்கான வாய்ப்புகள் பெருகியுள்ளன. இத்தகைய உடன்பாடுகளை இந்தியா பிரான்சு மற்றும் உருசியாவுடனும் கொண்டுள்ளது. .[13][14][15]
இத்திட்டத்தின் செலவினம் ஏறத்தாழ ₹1,00,000 கோடி (ஐஅ$12 பில்லியன்)யாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய அணுஉலைகள் உலகின் எந்தவிடத்திலும் தற்சமயம் செயலாக்கத்தில் இல்லை.[19][20]அமெரிக்காவின் அணுசக்தி கட்டுப்பாடு ஆணையம் இந்த அணுஉலையின் பங்காக உள்ள கணினியின் பாதுகாப்புக் குறித்து ஐயங்களைஎழுப்பியுள்ளபோதிலும் பின்லாந்து இத்தகைய அணுஉலை ஒன்றை வாங்கவுள்ளது[19] மேலும், சீனா அரெவா நிறுவனத்திடம் இதேபோன்ற மூன்று அணுஉலைகளை வாங்க உடன்பட்டுள்ளது.[19]
திசம்பர் 2010இல் பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சார்கோசியின் இந்தியப் பயணத்தின்போது இந்திய மற்றும் பிரெஞ்சு அரசுகளிடையே ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டை அடுத்து அரெவாவிற்கும் இந்திய அணுமின் கழகத்திற்கும் இடையே உடன்பாடு கையெழுத்தானபிறகு இத்திட்டம் முறையாகத் துவங்கியது.[21]
நிதி ஏற்பாடுகள்
இந்த திட்டற்கான செலவினங்களுக்காக பிரெஞ்சு நிதி நிறுவனங்களின் நட்பமைப்பு ஒன்று கடன்வசதி அளிக்க உள்ளது. பிரெஞ்சு மற்றும் இந்திய அரசுகள் இக்கடனுக்கான அரசு பொறுப்புறுதியைத் தரும். செலவினங்களில் எதுவரை பிரெஞ்சு கடன் கிடைக்கும் என்பதைப் பொறுத்து இந்த பொறுப்புறுதிகள் அமையும். பொருளியல் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டிற்கான நிறுவனம் (OECD) இந்தக் கடனுக்கான வட்டிவீதம் மற்றும் பிற நெறிமுறைகளை கட்டுப்படுத்தும். இவை தற்போது உரையாடப்பட்டு வருகின்றன.[22]
பொதுமக்கள் கருத்துக்கேட்பு
திட்டத்திற்காக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியில் 16 ஏப்ரல்,2010 அன்று நடுவண் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் மகாராட்டிர மாசுக் கட்டுப்பாடு வாரியம் , தேசிய சூழல் பொறியியல் ஆய்வுக் கழகம்(NEERI) தயாரித்த சூழற் தாக்கு மதிப்பாய்வு அறிக்கையை பொதுமக்கள் குறைகேட்க ஏற்பாடு செய்தது. ஆயினும் விதிமுறைகளின்படி தொடர்புடைய நான்கு பஞ்சாயத்துகளில் மூன்றிற்கு இவ்வறிக்கை முழுவதுமாக அறிந்துகொள்ளுமாறு முன்னரே அனுப்பப்படாதது சர்ச்சைக்கு உள்ளானது.[23]
நிகழ்வுகள்
முதன்மை நிகழ்வுகள் நிலவரம்: சூலை 31, 2025
நாள்
நிகழ்வு
நவம்பர் 28, 2010
இந்தியா, பிரான்சின் அணுசக்தி கட்டுப்பாடு வாரியங்கள் ஐரோப்பிய அணுஉலை பாதுகாப்புக் குறித்த சந்திப்பு[24]
நவம்பர் 28, 2010
நிபந்தனைகளுடன் சூழலியல் அனுமதி
திசம்பர் 06, 2010
இரு தொகுதிகளில் முதலாம் அணுஉலைத் தொகுதி கட்டமைக்க அரெவாவுடன் உடன்படிக்கை
தடைகளும் சர்ச்சைகளும்
தடைகள்
செப்டம்பர் 2010இல் இந்திய நாடாளுமன்றம் ஒப்புமை நல்கிய அணுக்கரு உலை விபத்திற்கான குடியியல் இழப்பீடு மசோதா 2010 குறித்த தெளிவின்மையே இத்திட்டத்திற்கான உடன்பாடு காண்பதில் பெரும்தடையாக இருந்ததாக அரெவா நிறுவனம் கூறுகிறது.[25] இந்த மசோதாவின் ஓர் அங்கம் அணுஉலை விபத்தொன்றிற்கு காரணமானவர்களின் சட்டபூர்வ பிணைப்புக் குறித்து உள்ளது. அதன்படி இயக்கு நிறுவனமான அணுமின் கழகமே தயாரிப்பாளர்கள் மற்றும் வழங்கியவர்கள் மீது வழக்குத் தொடர முடியும். பாதிக்கப்பட்டோர் வழக்குத் தொடர இயலாது. வழக்குத் தொடர்ந்தாலும் இயக்குனருக்கு 1,500 கோடி (US$ 340.5 மில்லியன்) மட்டுமே கிடைக்கும் என்பதால் உண்மையில், யாருமே சட்டப்படி ஈடு தரவேண்டியிருக்காது. ஐக்கிய அமெரிக்காவில் 2026க்கு முன்பாகக் கட்டப்படும் எந்த இராணுவப்பயனற்ற அணுக்கரு வசதியிலும் பிரைசு-ஆன்டர்சன் அணுத்தொழில் ஈட்டுறுதி சட்டப்படி யார் தவறிழைத்தாலும் இதே தொழிலில் உள்ளோர் கொடுக்கும் நிதியத்திலிருந்து $10 பில்லியன் உடனடியாகக் கொடுக்கப்படும். இதற்கு மேலான ஈட்டு கோரிக்கைகள் அமெரிக்க அரசால் கவனிக்கப்படும்.[26][27]
சர்ச்சைகள்
சைய்தாப்பூர் திட்டம் குறித்து பல்வேறு நிலைகளில் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்தும் புவிச்சரிதவியல் பிரச்சினைகள் குறித்தும் இந்திய அணு எதிர்ப்புப் போராளிகள் போராடி வருகிறார்கள். மகாராட்டிர அரசு சனவரி,2010 அன்றே இத்திட்டப்பகுதிக்கான நிலத்தைக் கையகப்படுத்தியிருப்பினும் நவம்பர்,2010 வரை, 2,335 சொந்தக்காரர்களில் 33பேர் மட்டுமே ஈட்டுத்தொகைக்கான வரைவோலையைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.[28]
எதிர்ப்புக் கருத்துக்கள்
நிலநடுக்க மண்டலத்தில் உள்ளது
சைய்தாப்பூர் நிலநடுக்க மண்டலத்தில் அமைந்துள்ளதால் விபத்து ஒன்று நிகழக்கூடிய அச்சம் மக்களிடையே உள்ளது; சைய்தாப்பூர் III வகை மண்டலமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வாய்ப்புள்ள மண்டலமாக அறியப்படுகிறது.[29][30]செர்னோபில் அணு உலை விபத்து மற்றும் மூன்று மைல் தீவு விபத்துகளுக்குப் பிறகு உலகெங்கும் உள்ள மக்கள், சுற்றுசூழல் போராளிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அணு உலை பாதுகாப்புக் குறித்து கவலை அடைந்துள்ளனர். 2007ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரும் அணுஉலையாக விளங்கிய சப்பானின் காசிவசாகி-கரிவா அணுஉலை நிலநடுக்கமொன்றின் பின்னர் ஐந்து மாதங்கள் மூடப்பட்டிருந்ததும் [31][32] 2011ஆம் ஆண்டு ஃபுகுசிமா டைச்சி அணுவாலையில் கட்டிடத்திற்கு வெடிப்பு ஏற்பட்டு கதிரியக்க அபாயம் ஏற்பட்டுள்ளதையும் [33] எதிர்ப்பாளர்கள் சுட்டுகின்றனர்.
கதிரியக்க தாக்கங்கள்
ராவத்பாட்டாவில் காணப்படும் கரிரியக்கத் தாக்கங்கள் [34] அணுமின் நிலையங்களுக்கு அருகாமையில் வசிக்கும் மக்களின் நலன் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. ராவத்பாட்டாவில் கண்டறியப்பட்டுள்ள ஊனக்குறைபாடுகளின் வளர்ச்சி அதிர்ச்சி யளிக்கக் கூடியதாக உள்ளது.
அணுஉலையின் கழிவுகள் எங்கு எவ்வாறு அகற்றப்படும் என்பது குறித்த தெளிவு இல்லை. உலைகள் 300 டன் அணுக்கழிவினை ஒவ்வொரு ஆண்டும் வெளியேற்றும். அமைக்கப்படும் ஐரோப்பிய நுட்ப அணுஉலைகள் பிற நீர் அழுத்த உலைகளைவிட நான்கு மடங்கு கூடுதலாக கதிரியக்க புரோமின், அயோடின், சீசியம் ஆகியவற்றை வெளியேற்றும்.[19]
மீன்வளத்திற்கு பாதிப்பு
அணுமின் நிலையம் கடல்நீரை நீராவி ஆக்கத்திற்கு பயன்படுத்தி பின்னர் சூடான நீரை அரபிக்கடலில் விடும் என்பதால் அருகாமை சிற்றூர்களில் உள்ள மீனவர்கள் தங்கள் மீன் பிடிப்பு பாதிக்கப்படும் என அஞ்சுகின்றனர். இதுகுறித்து ஊடகங்களிலும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.[35]
டாடா சமூக அறிவியல் கழகத்தின் அறிக்கை
டாடா சமூக அறிவியல் கழகத்தின் (TISS) பேரிடர் மேலாண்மைக்கான ஜம்செட்ஜி டாடா மையம் திட்டத்தின் "சமூக தாக்கம் மதிப்பாய்வு அறிக்கை"யைத் தயாரித்துள்ளது. இதன்படி இந்திய அரசு தனது குடிமக்களுடன் திறந்தநிலையில் இல்லாது பல மிகப்பெரும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் எதிர்மறை விளைவுகளை மறைத்துள்ளது என ஆய்ந்துள்ளது. திட்டப்பகுதியின் நிலநடுக்க மண்டல வகைப்பாட்டையும் மிக கூடுதலான வாய்ப்பு மண்டலத்திலிருந்து நடுத்தர வாய்ப்பு மண்டலமாக மாற்றியுள்ளது எனவும் கண்டறிந்துள்ளது.[36][37]
ஏற்புக் கருத்துக்கள்
எனது முடிவுகள் குறித்து சூழலியல்வாதிகள் மகிழ்ச்சியடைய மாட்டார்கள் என்பதை நான் அறிவேன், ஆனால் இந்தியாவின் உயர்ந்த வளர்ச்சிவீதத்தையும் 1.2 பில்லியன் மக்களின் சக்தித்தேவைகளையும் சூரிய சக்தி, காற்றுத் திறன், உயிர்க்கூள வளிமம், மற்றும் பிற புதிப்பிக்கத்தக்க ஆற்றல்களைக் கொண்டு நிறைவேற்ற முடியும் என எண்ணுவது முட்டாள்தனமான காதலாகும். அணுக்கரு ஆற்றலை சூழலியல்வாதிகள் எதிர்ப்பது முரணாக உள்ளது.
திட்ட வரைவாளர்கள் சைய்தாப்பூர் திட்டம் பாதுகாப்பானது, சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்காதது மற்றும் பொருளியல்வழி நிலைத்திருக்கக்கூடிய மின்னாற்றலுக்கான செயல்திட்டம் என்று கூறுகின்றனர்.[38] அவர்கள் அணுசக்தி, பைங்குடில் வாயுக்களை குறைத்து வெளியிடும் மற்றும் இந்தியா தன் வெளிநாட்டு பாறைநெய் இறக்குமதிகளைக் குறைத்து ஆற்றல் தன்னிறைவு காணக்கூடிய, ஓர் நிலைத்துள்ள சக்தி ஊற்றாக கருதுகின்றனர். இத்திட்டத்தினை செயலாக்குபவர் இந்திய அணுசக்தித் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய அணுமின் கழகம் ஆகும். 2010ஆம் ஆண்டு நிலவரப்படி இருபதுக்கும் கூடுதலான அணு உலைகள் செயலாக்கத்தில் இருக்கும் நாடுகளில் அமெரிக்கா, பிரான்சு,சப்பான்,உருசியா,கொரியாவிற்கு அடுத்ததாக ஆறாவது நிலையில் உள்ளது.
[39] இந்திய அணுமின் கழகம் இந்தியாவில் ஆறு இடங்களில் 20 அணு உலைகளை தற்போது இயக்கி வருகிறது; மேலும் நான்கு இடங்களில் ஏழு உலைகளை கட்டமைத்து வருகிறது.[40] 2009/10 ஆண்டு 18831 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.[41]
அணுசக்திப் பேரவையின் முன்னாள் தலைவர் அனில் ககோட்கர், சைய்த்தாப்பூர் திட்டப்பகுதி ஓர் அணுக்கரு உலையின் தொழில்நுட்ப, அறிவியல் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதாகக் கூறுகிறார்.[42][43]
ஐரோப்பிய அழுத்தப்பட்ட உலையின் அழுத்தக் கலன்/புரட்சிகரமான திறன் உலை
இந்தியாவில் உள்ள அனைத்து 20 அணுஉலை மின்திட்டங்களும் சிறப்பாக இயங்கி வருகின்றன. இங்கு வெளியேற்றப்படும் அணுக்கழிவுகள் மீள்உருவாக்கப்படும். வெறும் 5% மட்டுமே அகவுறையிடப்பட்டு தொழில்நுட்பம் மேம்பட்ட இடங்களில் சேமிக்கப்படும்; எங்கும் புதைக்கப்படாது. இக்கழிவுகள் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளுக்கு, அறிவியலாளர்கள் இவற்றை கையாளும் தொழில்நுட்பத்தை உருவாக்கும்வரை, சேமிக்கப்படும்.[44]
இத்திட்டம் குறித்தான சூழற் தாக்க மதிப்பாய்வு மற்றும் பிற ஆய்வுகளை கடந்த சில ஆண்டுகளாகவே நாக்பூரில் உள்ள தேசிய சூழலியல் பொறியியல் ஆய்வு கழகத்தால், குறிப்பிட்ட சூழல் தாக்க ஆய்வுகளில் சிறப்புபெற்ற வேறு பல புகழ்பெற்ற நிறுவனங்களின் துணையுடன் நடத்தி வந்துள்ளது..[45]
கடற்கரையோர கட்டுப்பாடு மண்டலம் (CRZ) எல்லை வரையறை ஆய்வு.
HTL.
LTL.
நிறுவன சமூக பொறுப்பு
இந்திய அணுமின் கழகம் நிறுவன சமூக பொறுப்பு கொள்கைப்படி சைய்த்தாப்பூர் திட்ட நிகர இலாபத்திலிருந்து 1.5 முதல் 2 விழுக்காடுவரை இந்தப் பகுதியின் வளர்ச்சிக்காக செலவிடும். இதனைப் பயன்படுத்துமாறான மேம்பாட்டுத் திட்டங்களை உள்ளூர் மக்களே நிச்சயிப்பர்.[46]
எதிர்ப்புகள்
இந்த அணுமின் திட்டத்திற்கெதிராக உள்ளூர் மக்கள் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். 29 திசம்பர்,2009, 12 சனவரி 2010 மறும் 22 சனவரி 2010 நாட்களில் அரசு அதிகாரிகள் நட்ட ஈடு வரைவோலைகளை வழங்க மதுபன் வந்தபோது அவர்களுக்கு கறுப்புக்கொடி காட்டியதுடன் அவர்களது பணியையும் செய்யவிடாது தடுத்தனர். கட்டாய நிலக் கையகப்படுத்தலுக்கு எதிராக 22 சனவரி 2010 அன்று போராடிய 72 பேர் கைது செய்யப்பட்டனர்.[47][48][49]
திசம்பர் 4, 2010 அன்று எதிர்ப்புகள் வன்முறையாக வெடித்தது. 1500 பேர் கைதாயினர். "கொங்கண் பச்சாவ் சமிதி" உறுப்பினர்களும் "ஜனஹித் சேவா சமிதி" உறுப்பினர்களும் தடுக்கப்பட்டனர். மும்பையிலும் பல்வேறு தொழிற்சங்கங்களும் சமூக அமைப்புகளும் திட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தினர். நாக்பூர் தேசிய சூழலியற் பொறியியல் ஆராய்ச்சி கழகத்தின் சூழற் தாக்க மதிப்பாய்வு அறிக்கையின் நடுநிலையைக் குறித்த ஐயங்களை எழுப்பினர். இணையாக மதிப்பாய்வு செய்த மும்பை இயற்கை வரலாற்றுச் சங்க அறிக்கை நேர்மாறாக மிகுந்த சூழலியற் தாக்கம் ஏற்படும் என கண்டறிந்துள்ளதை சுட்டிக் காட்டுகின்றனர்.[50]
↑"Nuclear Power in India". World Nuclear Association. Updated November 2010. Archived from the original on 11 செப்டம்பர் 2012. Retrieved 29 November 2010. {{cite web}}: Check date values in: |date= and |archive-date= (help); Unknown parameter |coauthors= ignored (help)
↑Indian journal of marine sciences (in English). Vol. Volume-23, Page- 34. Council of Scientific & Industrial Research. 1994. Retrieved December 3, 2010. {{cite book}}: |volume= has extra text (help); Unknown parameter |coauthors= ignored (help)CS1 maint: unrecognized language (link)
↑"Nuclear Power Corporation of India Limited - PRESS RELEASE"(PDF) (in English). Mumbai- India: Nuclear Power Corporation of India Limited. November 29, 2010. Archived from the original(PDF) on 14 டிசம்பர் 2010. Retrieved 30 November 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |coauthors= ignored (help)CS1 maint: unrecognized language (link)