தோரியம் இருசிலிசைடு (Thorium disilicide) என்பது Si2Th என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். தோரியம் டைசிலிசைடு என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. தோரியமும்சிலிக்கானும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. முதன்முதலில் 1942ஆம் ஆண்டு இயார்ச்சு பிரவுரும் ஏ. மிட்டியசும் இச்சேர்மத்தை விரிவாக ஆராய்ந்தனர்.[1] தோரியம் இருசிலிசைடு சேர்மத்துடன் கூடுதலாக, பிற தோரியம் சிலிசைடுகள் அறியப்படுகின்றன: முத்தோரியம் இருசிலிசைடு, தோரியம் மோனோசிலிசைடு, முத்தோரியம் பெண்டாசிலிசைடு மற்றும் Th6Si11 என்பன பிற தோரியம் சிலிசைடுகள் ஆகும்.[2]
தயாரிப்பு
1905ஆம் ஆண்டில் ஒரு மின்சார வில்விளக்கில் தோரியம் டை ஆக்சைடை சிலிக்கானுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமும், 1907ஆம் ஆண்டில் ஓட்டோ ஓனிக்சுமிட்டு என்பவரால் 1000 °செல்சியசு வெப்பநிலையில் அலுமினியக் கரைப்பான் முன்னிலையில் தனிமங்கள் இரண்டையும் சேர்த்து வினைபுரியச் செய்து தோரியம் இருசிலிசைடு தயாரிக்கப்பட்டது.[3]
பண்புகள்
தோரியம் இருசிலிசைடு ஒரு கருப்பு நிற திடப்பொருளாகும்.[4] அலுமினியம் இருபோரைடு வகையின் P6/mmm (இடக்குழு எண். 191) என்ற என்ற இடக்குழுவுடன் ஓர் அறுகோண படிக அமைப்பைக் கொண்டுள்ளது. 1300 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் குறைந்த வெப்பநிலை வடிவத்திலிருந்து உருவாகின்ற உயர் வெப்பநிலை வடிவ தோரியம் இருசிலிசைடு உள்ளது. இதன் கட்டமைப்பு I41/amd என்ற இடக்குழுவுடன் (இடக்குழு எண். 141) நாற்கோணப் படிக அமைப்பில் காணப்படுகிறது.[5]