முகமது ரியாஸ் கோழிக்கோட்டில் பிறந்தார்.[6] இவரது தந்தை பி. எம். அப்துல் காதர் ஒரு இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார்.[7]இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவரது உறவினர் பி. கே. மொய்தீன்குட்டி சாஹிப் கேரள பிரதேச காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவராவார். அவர், சுதந்திர போராட்ட வீரராகவும், 1937 இல் சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[8]
ரியாஸ் தனது பள்ளிப்படிப்பை கோழிக்கோட்டில் உள்ள புனித சூசையப்பர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர், பரூக் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார். பின்னர் கோழிக்கோடு அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார்.[9]
சொந்த வாழ்க்கை
இவர் 2002 இல் மருத்துவர் சமீகா சைதலவி என்பவரை மணந்தார். பின்னர் 2015 இல் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[10] 15 ஜூன் 2020, அன்று கேரள முதலமைச்சர் பிணறாயி விஜயனின் மகள் டி. வீணாவை மணந்தார்.[11]
2021 கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பேப்பூர் தொகுதியில் போட்டியிட்ட முகமது ரியாஸ் 28,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அரசியல் கருத்துக்கள்
குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 -ஐ ரியாஸ் விமர்சித்து எதிர்த்தார். [17][18][19][20] அச்சட்டத்திற்கு எதிர்ப்பை இந்திய அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான போராட்டமாக இவர் கருதுகிறார். 6 ஜனவரி 2020 அன்று, கோழிக்கோடு கடற்கரையில் 100,000 பேருடன் அச்சட்டத்திற்கு எதிரான பேரணிக்கும் தலைமை தாங்கினார்.[21]