பெருங்காமநல்லூர் படுகொலைபெருங்காமநல்லூர் படுகொலை என்பது மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில், ஏப்ரல் 3, 1920-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டு நிகழ்வைக் குறிக்கும். இந்நிகழ்வில் ‘மாயக்காள்’ என்கிற ஒரு பெண் உள்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். [1] பின்னணிபெருங்காமநல்லூர் துப்பாக்கிச்சூடு, தென்னக ஜலியான்வாலா பாக் படுகொலை என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலேய அரசு இந்தியா முழுவதும் உள்ள 213 சாதிகளைக் குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது. மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி இந்தப் பட்டியலின் கீழ் கள்ளர்கள் பதிவு செய்யப்படுவதைத் தொடங்கி வைத்தார். கள்ளர் மக்கள் தொகை சுமார் 60,000 ஆக இருந்தபோதும் 3000 பேர் மட்டுமே பதிவு செய்தனர்; மேலும், ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்வதற்கு வந்துள்ளனர் என்ற தகவல் அறிந்து அதிகாரிகள் கோபம் கொண்டனர். அதிக எண்ணிக்கையில் கள்ளர்களைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமானது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடர்ந்து கூறிவந்தார்.[2] அதிகாரிகள் இந்தச் சட்டத்தை பிரமலைக் கள்ளர்கள் அதிகம் வாழும் பகுதியில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, பெருங்காமநல்லூருக்கு வந்தனர். இந்தச் சட்டத்திற்கு அடிபணிய ஊர் மக்கள் மறுத்தனர்.[2] மார்ச் 2, 1920 அன்று, காவல்துறையினர் கைரேகைப்பதிவு அதிகாரிகளுடன் ஊர்களின் அருகில் முகாமிடத் தொடங்கினர். ஊர் தலைவர்களும் பெரியவர்களும், "கள்ளர்கள் விவசாயிகள்; காட்டுமிராண்டிகள் அல்ல. எனவே, நீங்கள் எங்கள் கிராமத்துக்கு வந்து ரேகை எடுத்தால் அதை ஏற்க மாட்டோம்" என்று மதுரை ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.[2] பெருங்காமநல்லூர் மக்கள் 1920 ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்குப் பதிவு செய்வதற்காக தனித்துணை ஆட்சியர் முன் வர வேண்டும் என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி 29 மார்ச் 1920 அன்று உத்தரவிட்டார். இந்நிலையில், 1 ஏப்ரல் 1920 அன்று ஊர்க்கோயிலில் கூடிய பெருங்காமநல்லூர், பிற ஊர் மக்கள் இத்தீர்ப்புக்கு அடிபணியாமல் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்துப் போராடுவது என்று முடிவு செய்தனர்.[2] தலைவர்களுக்கும் காவல்துறையினருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அது பயனற்றுப்போகவே மக்கள் மேலும் ஆத்திரமடைந்தனர். காவல்துறையினர் போராட்டத்திற்குச் செவிசாய்க்காமல் மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டைத் தொடங்கினர்.[2] ஆங்கிலேய காவல்படையில் துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் இறந்தனர். இதில் இறந்த மாயாண்டித்தேவர் என்ற நொத்தினி மாயாண்டி தேவர், குள்ளன் பெரியகருப்பன், விருமாண்டி தேவர், சிவன் காளை தேவர், பெரியாண்டி தேவர், ஓவாயன் என்ற முத்துக் கருப்பன், மோளை சின்னாத்தேவர், மாயாண்டி தேவர், முனியாண்டி என்கிற மாயாண்டி தேவர், உடையார் தேவர் , சின்னமாயத்தேவர், பெரியகருப்பத் தேவர், வீரணத்தேவர், முத்தையா தேவர், வீரத்தேவர் ஆகிய 16 பேர்களின் உடல்களை ஒரு கட்டை வண்டியில் ஏற்றி, உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஒரே குழியில் புதைத்தனர்.[3][4] இந்தத் துப்பாக்கிச் சூட்டின் போது போராடிய மக்களுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்து உதவியதற்காக ‘மாயாக்காள்’ என்ற பெண்மணியையும் காவலர்கள் தாக்கி, துப்பாக்கியின் கத்தியினால் குத்திக் கொலை செய்தனர். இவ்வாறான வன்முறை மிகுந்த துப்பாக்கிச் சூட்டில் நிலைகுலைந்து சிதறியோடிய மக்களில் சுமார் 200 பேரைப் பிடித்து, கையை ஒரு காலுடன் இணைக்கும் நெடிய சங்கிலியால் விலங்கிட்டு ஆடு மாடுகளைப் போல் நடைப்பயணமாக சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருமங்கலத்திலிருக்கும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.[5] கள்ளர் சீரமைப்புத் துறைபெருங்காமநல்லூர் அப்பாவி மக்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூடு, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஏற்க இயலாது என்றும், அப்பகுதி மக்களின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கி நிவாரணம் தேடுங்கள் என்றும் பாராளுமன்றம் அறிவுறுத்தியதன் பேரில் கள்ளர் சமுதாய சீரமைப்புக்கென தனியே ஒரு துறையை உருவாக்கி, நலத் திட்டங்களைத் தொடங்க ஆங்கில அரசு வழிசெய்தது.[2][6][7] நினைவுத்தூண்பெருங்காமநல்லூர் படுகொலையில் உயிர் இழந்தவர்களுக்கு, ஊர் மக்களில் இருவர் நினைவு மண்டபம் எழுப்ப நிலத்தை அன்பளிப்பாக வழங்கினார்கள். அதில் ஒரு நினைவுத் தூணில் உயிரிழந்த பதினாறு பேர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia