மலட்டுத்தன்மை சிகிச்சைமலட்டுத்தன்மை சிகிச்சை (infertility treatment) எனப்படுவது, ஆண்களிலோ, பெண்களிலோ அல்லது இருவரிலும் கூட்டாகவோ, குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியாத மலட்டுத்தன்மை காணப்படும்போது, அந்நிலையை அகற்றி, குழந்தைப் பேற்றைக் கொடுப்பதற்காக வழங்கப்படும் சிகிச்சை அல்லது மேற்கொள்ளப்படும் தொழில் நுட்பமாகும். இந்தச் சிகிச்சையானது முழுமையாகவோ, அல்லது பகுதியாகவோ செயற்கையான முறைகளைக் கொண்டிருக்கும். இந்தச் சிகிச்சைகள் கடினமானவையாகத் தோன்றினாலும், மலட்டுத்தன்மைக்கான காரணிகள் பற்றியும், சிகிச்சைகள் பற்றியும் தெளிவான விழிப்புணர்வுடன் சிகிச்சைக்குட்படும்போது, மன அழுத்தம் குறைவாகி சிகிச்சை வெற்றியளித்து, குழந்தையைப் பெற்றுக்கொள்ளல் இலகுவாகும்[1][2]. உண்மையில் மலட்டுத்தன்மையற்ற பெற்றோராக இருப்பினும், கடத்தப்படக்கூடிய எய்ட்சு போன்ற தொற்று நோய்கள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெற்றோர்களில் காணப்படுமாயின், கருத்தரிப்பின்போது அவ்வகை நோய்கள் நோய்த்தொற்றுமூலம் குழந்தைக்கும் வருவதனைத் தவிர்ப்பதற்காகவும் இவ்வகையான சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளப்படுவதுண்டு. முட்டை உருவாக்கத்தை அதிகரித்தல் (Ovulation Induction)![]() சூல்முட்டை உருவாக்கத்தை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள் பயன்படுத்தும் முறை. இது பொதுவாக ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி கொண்ட பெண்களுக்குச் சிகிச்சையளிக்க வல்லது. இங்கு கொடுக்கப்படும் பல வகையான மருந்துகளும் பெண்களின் இனப்பெருக்கத் தொகுதியைத் தூண்டி, அதன் மூலம் கருக்கட்டல் ஏற்படுவதற்கான நிகழ்தகவை அதிகரிக்கச் செய்யும். இந்த மருந்துகளில் பெரும்பாலானவை இயக்குநீர்களாகும். இயற்கையாக இருக்கும் இயக்குநீரின் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக இவை வழங்கப்படலாம். புரோஜெஸ்தரோன் (Progesterone) இயக்குநீரே பொதுவாகச் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றது. செயற்கை விந்தூட்டல் (Artificial Insemination - AI)![]() இந்தச் செயற்கை விந்தூட்டல் முறையில், கருக்கட்டலுக்கு உதவும் முகமாக, ஆணிடமிருந்து பெறப்படும் விந்தானது சில சுத்தப்படுத்தலின் பின்னர், நேரடியாகப் பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியினுள் செலுத்தப்படும். விந்து சுத்தப்படுத்தப்படுவதன் மூலம், விந்துப் பாய்மத்தில் இருக்கும் தேவையற்ற, ஆபத்தான வேதிப்பொருட்கள் அகற்றப்படுவதனால் கருக்கட்டலுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கச் செய்யலாம். இந்த முறைக்கு உதவுவதற்காக மலட்டுத்தன்மையைப் போக்க உதவும் மருந்துகளும் பயன்படுத்தப்படலாம். நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழினுட்பம் (Assisted Reproductive Technology - ART)கருக்கட்டலுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கச் செய்யும் முகமாகச் சூல்முட்டையானது பெண்ணின் சூலகத்தில் இருந்து அகற்றப்பட்டு, கருக்கட்டலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், மீண்டும் பெண்ணின் உடலினுள் வைக்கப்படும், (அல்லது இன்னொரு பெண்ணுக்கு வழங்கப்படும்) தொழில்நுட்பமே பொதுவாக நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழினுட்பம் என அழைக்கப்படும். ஆனால் நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு மையம் கொடுத்துள்ள வரைவிலக்கணத்தின்படி, மலட்டுத்தன்மையைப் போக்கி, குழந்தை பெற்றுக் கொள்வதற்காகச் சூல்முட்டையையோ, விந்தையோ சரியான முறையில் கையாளும் அனைத்துத் தொழில்நுட்ப செயல்முறைகளுமே நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழினுட்பம் எனப்படும்[4]. இந்த வரைவிலக்கணத்தின்படி, முட்டை உருவாக்கத்தை அதிகரிப்பதற்கான சூலகத் தூண்டல் முறைக்காகப் பெண்கள் மருந்துகளை உட்கொள்ளலும், மற்றும் செயற்கை விந்தூட்டலும்கூட நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழில்நுட்பமாகவே கருதப்படும்[4]. இது பல்வேறு முறைகளால் நிகழ்த்தப்படும். அவற்றில் முக்கியமான நான்கு முறைகள்: வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (In Vitro Fertilization - IVF)இந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டல் மிகவும் பரவலாக அறியப்படும் தொழில்நுட்பமாகும். முதிர்ச்சி அடைந்த சூல்முட்டையானது பெண்ணின் சூலகத்தில் இருந்து அகற்றப்பட்டு, வெளியே சோதனை அறையில் வைத்து, ஆண் துணையிடமிருந்து பெறப்படும் விந்துடன் கருக்கட்டச் செய்யப்பட்டு, கருக்கட்டலின் பின்னர், முளைய விருத்தி ஆரம்பித்த பின்னர் முளையம் மீண்டும் கருப்பையினுள் வைக்கப்படும். சிறந்த முட்டைகளைப் பெறுவதற்காக ஆரம்பத்தில் முட்டை உருவாக்கத்தைத் தூண்டும் சிகிச்சை வழங்கப்படும்போது, சிலருக்கு அளவுக்கதிகமான தூண்டல் நிகழ்வதனால் சில பிரச்சனைகள் ஏற்படும். சூலகம் பெரிதாவதனால் வயிற்றில் வலி, குமட்டல், வாந்தி, பசியின்மை போன்ற அறிகுறிகள் தோன்றலாம். பொதுவாக இவை குறைந்தளவிலேயே இருப்பினும் 1 % ஆனவர்களில் தீவிரமான பிரச்சனையாக வரக் கூடும்.[5] பாலோப்பியன் குழாய் உள்ளான புணரி/பாலணு இடமாற்றம் (Gamete Intrafallopian Transfer - GIFT)இம்முறையில் சூல்முட்டைகள் சூலகத்திலிருந்து அகற்றப்பட்டு, பின்னர் சூல்முட்டையும், விந்தும் கருக்கட்டச் செய்யப்படும் நோக்குடன் பாலோப்பியன் குழாயினுள் செலுத்தப்படும். உடலுக்கு வெளியே, சோதனை அறையில் வைத்துக் கருக்கட்டலைத் தவிர்த்து, பாலணுக்களான சூல்முட்டையும், விந்தும் உடலின் உள்ளேயே வைத்துக் கருக்கட்டத் தூண்டப்படுவதனால், இது வெளிச் சோதனை முறை கருக்கட்டலிலிருந்து வேறுபடுகின்றது. பாலோப்பியன் குழாய் உள்ளான இருபாலணு இணைவுக்கரு இடமாற்றம் (Zygote Intrafallopian Transfer - ZIFT)இங்கு சூல்முட்டை அகற்றப்பட்டு, உடலுக்கு வெளியே, சோதனை அறையில் வைத்து விந்துடன் கருக்கட்டச் செய்யப்பட்டு, முளைய விருத்திக்கு முன்னராகவே, அதாவது கருவணுக் கலமாகவே (zygote) பாலோப்பியன் குழாயினுள் செலுத்தப்படும். குழியமுதலுரு உள்ளான விந்து உட்செலுத்தல் (Intracytoplasmic Sperm Injection - ICSI)![]() இந்த முறையும் தற்போது பிரபலமடைந்து வருகின்றது. இங்கே முதிர்ந்த சூல்முட்டையானது பெறப்பட்டு, அதனுள் வளமான ஒரு விந்து நேரடியாகச் செலுத்தப்பட்டு, கருக்கட்டச் செய்து, பின்னர் முளையமானது கருப்பை யினுள் வைக்கப்படும். இவைதவிர, இம் முறைகளிலிருந்து சில மாற்றங்களுடன் செய்யப்படக் கூடிய வேறு சில முறைகளும் உள்ளன. மேலதிக மலட்டுத்தன்மை சிகிச்சைசில உடற்கூற்றியல் தொடர்பான மலட்டுத்தன்மை இருப்பின், அவற்றை நேரடியாக அறுவைச் சிகிச்சை மூலமாகவோ, அல்லது தேவைப்படாதவிடத்து, வேறு அறுவைச் சிகிச்சையல்லாத முறைகளாலோ சிகிச்சை அளித்து மலட்டுத்தன்மையை நீக்கலாம். சூழிடர்பொதுவாக வெளிச் சோதனை முறை கருக்கட்டலினால் பிறவிக் குறைபாடுகள் ஏற்படுவதில்லை.[6] ஆனாலும் இவ்வகையான சிகிச்சைகள் கருத்தரிப்பிற்கான சூழிடரை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.[7][8]. மருத்துவ தொழில்நுட்ப முறைகள் முன்னேற்றமடைந்து செல்கையில் இவ்வகையான சூழிடர்களும் குறைந்து செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது. பொதுவான சூழிடர்கள்:
பயன்பாடுகடந்த பல ஆண்டுகளாக இவ்வகையான சிகிச்சையால் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 2009 இல் செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி, அமெரிக்காவில் 2009 இற்கு முன்னரான 10 ஆண்டுகளில் நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழில்நுட்ப சிகிச்சை செய்யப்படுவது இரண்டு மடங்கை விட மேலாக அதிகரித்திருப்பது தெரியவந்தது. 2006 ஆம் ஆண்டில் 140,000 சிகிச்சைகள் வழங்கப்பட்டு, 55,000 குழந்தைகள் பிறந்ததாக அறியப்பட்டது[11]. இத்தகைய சிகிச்சை முறைக்கான தொழில்நுட்பமும் முன்னேற்றமடைந்து வருகின்றது. இதனால் வெற்றியளிக்கும் வீதமும் அதிகரிக்கின்றது. குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத, ஆனால் குழந்தை வேண்டுமென விரும்பும் பெற்றோருக்கு இவ்வகைச் சிகிச்சைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. மேலும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia